அமைச்சர் சண்முகம்: வன்முறையின்றிப் பிற நாடுகளுக்கு மனிதாபிமான உதவி செய்யலாம்

பிற நாடுகளுக்கு உதவி செய்யலாம், ஆனால் போராடுவதற்காக வன்முறையில் ஈடுபடக்கூடாது என வலியுறுத்து

அமைச்சர் சண்முகம்: வன்முறையின்றிப் பிற நாடுகளுக்கு மனிதாபிமான உதவி செய்யலாம்

2 mins read
cb4493ae-9464-47ae-9072-70f91d70e715
கதிஜா பள்ளிவாசலில் திங்கட்கிழமை (பிப்ரவரி 23) நடைபெற்ற ‘ஆர்ஆர்ஜி’ எனப்படும் சமய மறுவாழ்வுக் குழுவின் வருடாந்தர நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சண்முகம் உரையாற்றினார். - படம்: பெரித்தா ஹரியான்
multi-img1 of 2

- இணையம் வழி இளையர்கள் பயங்கரவாதப் பாதையில் செல்வதைத் தடுக்க அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல் அவசியம் என்றார்.

- நாட்டின் சமூக நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்கப் பொது விவாதங்களில் சமயத்தைப் புகுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

உலக நாடுகளுக்குச் சிங்கப்பூர் மனிதாபிமான உதவிகளைச் செய்துவந்தாலும், பிற நாடுகளில் வன்முறைச் செயல்களில் ஈடுபடச் சிங்கப்பூர் சட்டம் அனுமதிக்காது என்று தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் தெரிவித்தார்.

“ஐசிஸ், உக்ரேன், ரஷ்யா, காஸா என எங்கு போரிட்டாலும் சரி, அவ்வாறு அடையாளப்படுத்தப்படும் சிங்கப்பூரர்களுக்கு எதிராக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்கும்,” என்று திரு சண்முகம் கூறினார்.

கதிஜா பள்ளிவாசலில் திங்கட்கிழமை (பிப்ரவரி 23) நடைபெற்ற ‘ஆர்ஆர்ஜி’ எனப்படும் சமய மறுவாழ்வுக் குழுவின் வருடாந்தர நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சண்முகம், இன, சமய நல்லிணக்கம் போன்ற முக்கியமான சில அடிப்படைப் பண்புகள் மீது சிங்கப்பூர் கவனம் செலுத்துவதால் அமைதிக்கான சோலையாய்த் திகழ்வதாகக் கூறினார்.

சிங்கப்பூரில் இன நல்லிணக்கத்திற்கான இலக்கை உறுதிசெய்வதில் சமய, சமூகத் தலைவர்களின் பங்கு முக்கியமானது என்று கூறிய அமைச்சர், சமயச்சார்பற்ற அணுகுமுறை ஒவ்வொரு சமூகமும் தங்கள் சமயத்தைப் பின்பற்றுவதற்கான இடைவெளியைத் தருகிறது என்றார்.

பலசமய நல்லிணக்கப் பிரதிநிதிகள், அரசாங்கத் தலைவர்களுடன் நோன்புத் துறப்பு.
பலசமய நல்லிணக்கப் பிரதிநிதிகள், அரசாங்கத் தலைவர்களுடன் நோன்புத் துறப்பு. - படம்: பெரித்தா ஹரியான்

“அதேநேரத்தில் பொது விவாதங்கள், நடுநிலையான பொதுக்கொள்கைக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“பொதுவெளியில் சமயத்தை நாம் முதன்மைப்படுத்திக் கொண்டுவந்தால், விவாதம் எவரது கடவுள் பெரியவர் என்பது பற்றியதாக மாறும். அந்த விவாதத்திற்குத் தீர்வு இல்லை. நமது தனிப்பட்ட கருத்துகள் நம் நம்பிக்கைகளைச் சார்ந்திருந்தாலும், நம் பொதுப் பேச்சுவார்த்தை இருதரப்பு மரியாதையின் அடிப்படையில் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

பிற நாடுகளில் என்ன நடந்தாலும் அந்தப் பிரச்சினைகளை நாம் இங்கு கொண்டுவருவதைத் தவிர்க்க முயல்வோம். எங்கு உதவ முடிகிறதோ, எங்கு உதவி பொருந்துகிறதோ அங்கு நாம் பிற இடங்களில் இருப்போருக்கு மனிதாபிமான உதவி வழங்குவோம்,” என்று அவர் கூறினார்.

சமய, சமூகத் தலைவர்களுடன் அமைச்சர் கா. சண்முகம் உரையாடுகிறார்.
சமய, சமூகத் தலைவர்களுடன் அமைச்சர் கா. சண்முகம் உரையாடுகிறார். - படம்: பெரித்தா ஹரியான்

சிங்கப்பூரில் சமய, சமூகத் தலைவர்கள் தங்கள் சமயங்களைத் தாண்டிப் பிறரை அணுகி, ஒற்றுமைக்காகவும் பரிவுக்காகவும் பேசி, தேவைப்படுவோருக்குச் சேவையாற்றும்போது சிங்கப்பூர் மக்கள் அவர்களுக்குச் செவிசாய்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த வகையில் ஆர்ஆர்ஜி மிகவும் முக்கியமான அமைப்பு என்றும் நல்லிணக்கமிக்க சமுதாயத்தைக் கட்டிக்காக அந்த அமைப்பு உதவுவதாகவும் திரு சண்முகம் பாராட்டினார்.

“ஐஆர்ஓ (IRO) எனப்படும் அனைத்துச் சமய மன்றம், ‘ஹார்மனி சர்க்கிள்ஸ்’ எனும் நல்லிணக்க வட்டம் ஆகிய தளங்கள் மதிப்புமிக்கவை. ஏனெனில், சவால்கள் வரும்முன்னே நட்புகளை வளர்க்க இந்தத் தளங்கள் வாய்ப்புத் தருகின்றன. புரிந்துணர்வின்மை நம்மைப் பிளவுபடுத்த அனுமதிக்காமல் நெருக்கடிகளைச் சமாளிக்க இவை உதவுகின்றன,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்