கடந்த 30 ஆண்டுகளில் சிங்கப்பூரின் சட்ட, சமூகத் துறையின் பரிணாம வளர்ச்சியை விவரிக்கும் பரந்த கண்ணோட்டத்தை வழங்கும் வகையில், தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் தமது புதிய நூலை வெளியிட்டுள்ளார்.
‘கொள்கை, நியாயம், கருணை’ (Policy, Fairness, and Compassion) எனும் அந்நூல் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) எஸ்பிஎச் மீடியா அரங்கில் நடைபெற்ற சிறப்பு விழாவில் வெளியிடப்பட்டது.
ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்த நூல், 1988ல் திரு சண்முகம் ஆக இளைய நாடாளுமன்ற உறுப்பினராக அரசியலில் நுழைந்தது முதல், 2008க்குப் பிறகு அமைச்சராகப் பொறுப்பு வகித்ததுவரை பல்வேறு காலகட்டங்களில் அவர் ஆற்றிய உரைகளை ஒரு தொகுப்பாகப் பதிவுசெய்துள்ளது.
குறிப்பாக, திரு சண்முகம் நாடாளுமன்றத்தில் பின்வரிசை உறுப்பினராக (Backbencher) இருந்த 20 ஆண்டுகளில் அவரது தொகுதி மக்களுக்காகக் குரல் கொடுத்த விவாதங்கள், அமைச்சராகச் சட்டங்களை மாற்றியமைத்த அனுபவங்கள் ஆகியவை அவரது நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன.
நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு சண்முகம், தமக்கு ஒரு முழுமையான, பாரம்பரியமான தன்வரலாற்று நூலை எழுத நேரமில்லை என்றாலும், நாட்டின் பயணத்தைப் புரிந்துகொள்ள விரும்புவோருக்கு இந்தத் தொகுப்பு ஒரு முக்கிய வளமாக அமையும் என்று குறிப்பிட்டார்.
“எனது கருத்துகள் எதிர்கால வரலாற்றாசிரியருக்கு ஒரு தரவாக, ஒரு கண்ணோட்டமாக அமையும். இக்காலகட்டத்து சிங்கப்பூரைப் புரிந்துகொள்ள விரும்புவோருக்குக் கிடைக்கும் பல கண்ணோட்டங்களில் இதுவும் ஒன்று,” என்று அமைச்சர் கூறினார்.
தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதையும் நோக்கமாகக்கொண்ட இந்த நூல், 1990கள் முதல் சிங்கப்பூர் கண்டுள்ள மிகப்பெரிய சமூக, பண்பாட்டு, பொருளியல் மாற்றங்கள் குறித்த மிக நுணுக்கமான கண்ணோட்டத்தை வழங்குகிறது என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பொது மேடைகளில் பேசுவதைத் தவிர்த்து வந்ததாக குறிப்பிட்ட ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ, வேறெவரையும்விட நீண்ட காலமாக திரு சண்முகத்தை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகக் தமக்குத் தெரியும் என்பதால் இந்த நூலை வெளியிட ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.
பெரும் வருவாய் ஈட்டும் சட்டத் தொழிலை விட்டுவிட்டு, நாட்டுக்குச் சேவை செய்ய வந்ததற்காக அமைச்சரை அவர் பாராட்டினார்.
2001ல், சட்டவிரோதக் குடியேறிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்குக் கட்டாயச் சிறைத்தண்டனை விதிப்பதை திரு சண்முகம் எதிர்த்ததைச் சுட்டிக்காட்டி, அவரது அடிப்படை விழுமியங்களை திரு கோ எடுத்துரைத்தார்.
“அமைச்சர் சண்முகத்தின் அந்த நிலைப்பாடு, நீதி, கருணை குறித்த அவரது பார்வையைத் தெளிவாகக் காட்டியது,” என்று கூறிய திரு கோ, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அந்தச் சட்டம் திருத்தப்பட்டு, தண்டனை வழங்கும் அதிகாரத்தில் நீதிமன்றங்களுக்கு விருப்புரிமை வழங்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.
அரசியல் தலைமைத்துவ மாற்றம் குறித்த சிரமங்களையும் திரு கோ குறிப்பிட்டார். திறமையான நிபுணர்களை அரசியலுக்குக் கொண்டுவருவது மேன்மேலும் கடினமாகி வருவதாக அவர் கவலை தெரிவித்தார்.
“தலைசிறந்த அரசாங்கம் இல்லாவிட்டால், சிங்கப்பூரின் கதை மோசமான முடிவைச் சந்திக்கும்,” என்று அவர் எச்சரித்தார்.
தேசக் கட்டமைப்பை ஒரு தொடர் நெட்டோட்டத்துடன் ஒப்பிட்ட அவர், ஒரு நகரத்தை ஒரு தலைமுறையில் கட்டியெழுப்பிவிட முடியும் என்றாலும், ஒரு தேசம் நிலைத்திருக்க பல தலைமுறைகளின் பொறுப்பான நிர்வாகம் தேவை என்பதை வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, தொடக்கக் காலங்களில் தாம் ஒரு துடிப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டதை திரு சண்முகம் நினைவுகூர்ந்தார். சிறுகடைக்காரர்களுக்கு இழப்பீடு கோரிப் போராடியதையும், நகர மன்றத்தின் பணத்தை மிச்சப்படுத்துவதற்காகப் பூங்கா ஒன்றைப் பொறுப்பேற்க மறுத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், அனுபவம் கூட கூடத் தமது கண்ணோட்டங்கள் பரிணமித்ததை அவர் ஒப்புக்கொண்டார். இளம் வழக்கறிஞராக இருந்தபோது விசாரணையின்றித் தடுத்து வைக்கும் முறை குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், இப்போது தேசிய நிலைத்தன்மைக்கு அது அத்தியாவசியம் எனக் கருதி குற்றவியல் (தற்காலிகச் சட்டப்பிரிவுகள்) சட்டம், சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் ஆகியவற்றை ஆதரிப்பதோடு அவற்றை வலுப்படுத்தியும் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் போன்ற சிறிய நாடு பாதுகாப்பாக வணிகம் செய்ய உதவும், விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலகக் கட்டமைப்பு தற்போது கேள்விக்குறியாக்கப்படுவது குறித்தும் அவர் பேசினார்.
இன்றுள்ள அனைத்துலக ஒழுங்குமுறைக்குக் காரணம் ஒரு குறிப்பிட்ட அனைத்துலகக் கட்டமைப்பே என்ற அமைச்சர், அந்த அமைப்பு இல்லாவிட்டால், நாம் கற்பனை செய்தவை, நாம் உழைத்து உருவாக்கியவை, நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டவை என எதையுமே இனி உத்தரவாதமாகக் கருத முடியாது என்றார்.
இப்புத்தகம் அவரது ஓய்வுக்காலத்தைக் குறிக்கிறதா என்று கேட்டதற்கு, புத்தக வெளியீட்டிற்கும் அரசியல் வாழ்க்கைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் இது ஓய்வுக்கான அறிகுறியோ அல்லது அதைத் தீர்மானிக்கும் காரணியோ அன்று என்றும் அமைச்சர் பதிலளித்தார்.
“பல தலைமுறை அமைச்சர்கள் எவ்வாறு ஓய்வு பெற்றார்களோ, அதே வழிமுறையில் நானும் ஓய்வுபெறுவேன்,” என்று திரு சண்முகம் கூறினார்.

