சிங்கப்பூரில் ஆண்டு முழுவதற்குமான மதிப்பீட்டில் வேலையிட மரண விகிதம் 100,000 தொழிலாளர்களுக்கு 0.92ஆக உள்ளது.
அது பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பில் 2028ஆம் ஆண்டிற்கான இலக்கைவிட குறைவாக இருப்பதால் அது ஒரு நற்செய்தி என்று மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கூறியுள்ளார்.
வேலையிட உயிரிழப்புச் சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானதாக இருந்தாலும் அதனைக் குறைக்க அனைவரும் சரியான பாதையில் பயணிப்பதாக அவர் தெரிவித்தார்.
வேலையிடப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றிவரும், லோயாங்கில் அமைந்துள்ள ‘செஃப்ஃபையர் விண்டோஸ்’ எனும் சன்னல் தயாரிப்பு நிறுவனத்தை திரு தினேஷ் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணியிடத்தில் கடுமையாகக் காயமடைந்தோர் விகிதம் இந்த ஆண்டின் முற்பாதியில் 15.5ஆகக் குறைந்ததைச் சுட்டினார்.
நிறுவனங்களும் முடிந்த அளவு விழிப்புடன் நடந்துகொண்டு காயமடையும் விகிதத்தைக் குறைவாக வைத்திருக்க முற்பட வேண்டுமென்று திரு தினேஷ் கேட்டுக்கொண்டார்.
புகாரளிக்கப்படாத சம்பவங்களைக் கையாள்வது குறித்து பேசிய திரு தினேஷ், சட்டத்திற்கு அப்பாற்பட்டு நிறுவனங்களும் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொண்டு பணியிடத்தில் பாதுகாப்பான கலாசாரத்தை உருவாக்க வேண்டுமென்றார்.
“கட்டடத் தளங்களில் காயங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் தொழில்நுட்பம் அல்லது தொழிலாளர்கள், முதலாளிகளுக்கான கல்வி மூலமாக மேற்கொள்ளப்படும் இந்த அடித்தள முயற்சிகளில் நான் இன்னும் சற்று அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன்,” என்று கூறினார் திரு தினேஷ்.
தொடர்புடைய செய்திகள்
வாகன விபத்துகள் குறித்து பேசிய திரு தினேஷ், சரியான நடைமுறைகளைச் செயல்படுத்த இன்னும் கூடுதலான முயற்சிகள் எடுக்கப்படும் என்றார்.
“ஊழியர்களைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்வது மட்டுமல்லாமல், வேலைத் தளத்தில் வாகனங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு இருப்பது அவசியம்,” என்று தெரிவித்தார் திரு தினேஷ்.
வெளிநாட்டு ஊழியர்களும் வேலையிடத் தளங்களில் இருப்பதால் அவர்களும் கவனமாக நடந்துகொண்டு வேலையிட சம்பவங்கள் குறித்து உடனடியாகப் புகார் செய்யும் வகையில் செயல்பட வேண்டுமென்று திரு தினேஷ் வலியுறுத்தினார்.
15 ஆண்டுகளாக செஃப்ஃபையர் விண்டோஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜாஹித், 39, தற்போது அங்குத் துணை மேற்பார்வையாளராக இருக்கிறார்.
“இந்த வேலையில் நான் சேர்ந்ததிலிருந்து இப்போதுவரையிலும் பாதுகாப்பு நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. முன்னர் இயந்திரங்கள் குறைவாக இருந்ததால் நாங்கள் நிறைய கைவேலைகள் செய்ய வேண்டியிருந்தது. அதனால் சில சிறிய காயங்கள் ஏற்பட்டன. ஆனால், இப்போது நிலைமை மிகவும் மேம்பட்டுள்ளது,” என்று திரு ஜாஹித் கூறினார்.