இணைய ஊடுருவல் குறித்து மின்மெட் குழுமம் புகார்

இணைய ஊடுருவல் குறித்து மின்மெட் குழுமம் புகார்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2026 - 7:41 pm

1 mins read

சிங்கப்பூரில் உள்ள மின்மெட் குழுமத்தின் தொலைதொடர்பு, பரிசோதனைச் சேவைகளை ஆதரிக்கும் கட்டமைப்பு ஊடுருவப்பட்டுள்ளது.

சுகாதாரப் பராமரிப்புக் குழுமமான மின்மெட் அதுகுறித்து புதன்கிழமை (ஆகஸ்ட் 11) தெரிவித்தது.

விசாரணைகள் நடைபெறுவதால் சம்பவம் குறித்து கூடுதல் விவரங்களைத் தர இயலவில்லை என்று குழுமம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.

இதுவரை நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் தொலைதொடர்புச் சேவைகளையும் சுகாதாரப் பரிசோதனை வர்த்தகத்தையும் ஆதரிக்கும் கட்டமைப்பு மட்டுமே ஊடுருவப்பட்டதாக அது சொன்னது.

சம்பவத்தால் நோயாளிகளின் விவரங்கள் பாதிக்கப்படவில்லை.

இணைய அச்சுறுத்தல் குறித்து தெரியவந்ததை அடுத்து உடனடியாக அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை மின்மெட் பகிர்ந்துகொண்டது.

அதிகாரபூர்வ விசாரணையை மேற்கொள்ள என்சைன் இன்ஃபோசெக்யூரிட்டி நிறுவனத்தின் உதவியையும் மின்மெட் நாடியுள்ளது.

இம்மாதம் 5ஆம் தேதி நிலவரப்படி, கட்டமைப்பில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய அம்சங்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது என்றும் மின்மெட் மேலும் குறிப்பிட்டது.

சம்பவம் குறித்து சிங்கப்பூர்த் தனிநபர்த் தகவல் பாதுகாப்பு ஆணையத்திடமும் காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

2001ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மின்மெட் குழுமம், ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள பரகோன், நோவினாவில் உள்ள யுனைடட் ஸ்குவேர், ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள ஜெம் ஆகியவற்றில் செயல்படுகிறது.

சுகாதாரப் பரிசோதனைகள், தொலைதொடர்புச் சேவைகள், தடுப்பூசிச் சேவைகள், ஆலோசனை வழங்குதல் ஆகியவற்றுடன் பல்மருத்துவச் சேவைகளையும் மின்மெட் வழங்குகிறது.

தனது அனைத்துச் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளும் மருந்தகங்களும் வழக்கம்போல செயல்படுவதாக மின்மெட் சொன்னது.

குறிப்புச் சொற்கள்