பொதுச் சுகாதாரச் சேவைத் தடைக்குக் காரணமான தவற்றைத் தவிர்த்திருக்கலாம்: டான் கியட் ஹாவ்

பொதுச் சுகாதாரச் சேவைத் தடைக்குக் காரணமான தவற்றைத் தவிர்த்திருக்கலாம்: டான் கியட் ஹாவ்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

03 Nov 2026 - 4:32 pm

2 mins read

சிங்கப்பூரின் பொதுச் சுகாதாரத் துறையில் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி ஏற்பட்ட ஒன்பதரை மணி நேரச் சேவைத் தடையானது, தவிர்த்திருக்கக்கூடிய ஒரு குறைபாடு என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பொதுவான இணைய முகவரி அமைப்பில் பாதுகாப்புப் புதுப்பிப்பை உரிய நேரத்தில் செய்யத் தவறியதே இதற்குக் காரணம் என்று சுகாதார மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அண்மைக்காலத்தில் நிகழ்ந்த மிக நீண்ட சேவைத் தடை அது. அச்சம்பவத்தில் என்எச்ஜி, என்யுஎச்எஸ், சிங்ஹெல்த் ஆகிய மூன்று பொதுச் சுகாதாரக் குழுமங்களும் பாதிக்கப்பட்டன.

சந்திப்பு முன்பதிவு, மருந்துகள் வழங்குதல், பார்வையாளர் பதிவு, கட்டணம் செலுத்துதல் போன்ற முக்கியப் பணிகள் தடைபட்டன. அதனால் ஏறத்தாழ 4,000 வெளிநோயாளிச் சந்திப்புகள் மாற்றி அமைக்கப்பட்டன. நோயாளிகள் சிலர் இரண்டு மணி நேரம் வரை தாமதத்தை எதிர்கொண்டனர். எனினும், நோயாளிகளின் பாதுகாப்பைப் பாதிக்கும் விதமான சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திரு டான், அந்தச் சம்பவம் இணையத் தாக்குதலால் ஏற்படவில்லை என்று கூறினார். நோயாளிகளின் மருத்துவத் தரவுகள் திருடப்படவுமில்லை, அவை அழியவுமில்லை என்று அவர் உறுதிப்படுத்தினார்.

தொழில்நுட்பப் பணிகளை நிர்வகிக்க, சினாப்ஸ் அமைப்பு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்திருந்தது. ஆயினும், தனது அமைப்புகளின் மீள்திறனுக்குச் சினாப்ஸே தொடர்ந்து முழுப் பொறுப்பேற்கும் என்று திரு டான் கூறினார்.

காப்புக்கட்டமைப்பு வசதிகள் இருந்தபோதும், அவை இரண்டும் ஒரே இணைய முகவரி அமைப்பைச் சார்ந்திருந்ததால் உடனடியாக மாற்று ஏற்பாட்டிற்கு மாற இயலவில்லை.

சம்பவத்தின்போது, சுகாதாரப் பணியாளர்கள் அவசரகாலக் கையேட்டு நடைமுறைகளைப் பின்பற்றித் தடையின்றிப் பணிகளைத் தொடர்ந்தனர். கூடுதல் பணி செய்ய நேரிட்ட அவர்களுக்கும் நோயாளிகளுக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட சிரமத்திற்கு அமைச்சர் வருத்தம் தெரிவித்தார். எதிர்காலத்தில் இத்தகைய இடர்களைத் தவிர்க்கவும் மீட்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்