அரசாங்கத் திட்டங்களை நோக்கத்திற்கு ஏற்றவாறு வைத்திருக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புதிய பட்டதாரிகளுக்கு நீண்ட, கட்டமைக்கப்பட்ட பயிற்சித் திட்டங்கள் கிடைக்கக்கூடும் என்று மனிதவள தற்காலிக அமைச்சர் ஜாஸ்மின் லாவ் கூறியிருக்கிறார்.
அதோடு, வேலை மாறும் ஊழியர்கள் அதிகமானோர் ஆதரவைப் பெறத் தகுதி பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
வேலையின்மை விகிதம் குறைவாக இருப்பதாகக் கூறிய அவர், பெரும்பாலான பட்டதாரிகளுக்கு ஆறு மாதங்களுக்குள் வேலை கிடைப்பதால் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு நிலவரம் இன்னும் வலுவாக இருப்பதைச் சுட்டினார். இருந்தாலும், ஆட்சேர்ப்பு மெதுவடைவதற்கான அறிகுறிகளும் ஊழியர்கள் தற்போதைய பணியிலேயே தொடர்ந்து நீடிக்கும் போக்கும் காணப்படுவதாகத் திருவாட்டி லாவ் குறிப்பிட்டார்.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் 4,620ஆக இருந்த ஆட்குறைப்பு எண்ணிக்கை, மூன்றாம் காலாண்டில் ஆரம்பக்கட்டத் தரவுகளின்படி 4,800ஆக உயர்ந்துள்ளது. இது கொவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்திற்குப் பிறகு பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும்.
இந்த எண்ணிக்கை இதே அளவில் நீடிக்கும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் திருவாட்டி லாவ் கூறினார்.
அடுத்த இரண்டு காலாண்டுகளில் எந்தெந்தப் போக்குகள் நீடிக்கின்றன என்பதை அறிய ஊழியர் சந்தையின் நிலையை மனிதவள அமைச்சு கண்காணித்து வந்தாலும், நடவடிக்கை எடுப்பதற்காக அது காத்திருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
“நாங்கள் செயல்படுத்த விரும்பும் பல நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்படுபவை. ஊழியர் சந்தை மோசமடையக்கூடும் அல்லது மேலும் மெதுவடையக்கூடும் என்பதை அறிந்து, எதிர்வரும் ஆண்டுகள் குறித்து நமது ஊழியர்களுக்குச் சற்று கூடுதல் நம்பிக்கையை அளிக்க ஏதாவது செய்வோம்,” என்று அவர் தெரிவித்தார்.
மூத்த குடிமக்களுக்குக் கூடுதல் ஆதரவை வழங்குதல், அலுவலக ஊழியர்களுக்கான சட்டப் பாதுகாப்புகளை வலுப்படுத்துதல், நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை ஊக்குவித்தல் ஆகியவை குறித்தும் மனிதவள அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
சிங்கப்பூரின் முக்கிய ஊழியர் சட்டத்தின் தொடர்பில் நடைபெற்றுவரும் மறுஆய்வின் ஒரு பகுதியாக, ஆட்குறைப்புப் பலன்களை வழங்கக்கூடிய முதலாளிகள் அதனை வழங்குவதை உறுதிசெய்யும் வழிமுறைகளை அமைச்சு பரிசீலித்து வருவதாகத் திருவாட்டி லாவ் கூறினார்.
ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும்போது உரிய பலன்களை வழங்கத் தவறும் முதலாளிகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவதற்கும் மானியங்களைப் பெறுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது அவற்றில் அடங்கும்.
