காஸாவிற்காக நிதித் திரட்டும் நோக்கில் சனிக்கிழமை (டிசம்பர் 20) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏறக்குறைய 200 பேர் பங்கேற்றுள்ளனர். ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ என்ற சமயங்களுக்கு இடையிலான லாப நோக்கமற்றக் குழு அந்த நிதித் திரட்டுக்கு ஏற்பாடு செய்தது.
கைகளில் உண்டியல்களுடன் ‘ஒரே நாடு, ஒரே மனிதம்’ என்ற ஒட்டுவில்லைகளுடன் அவர்கள் வெவ்வேறு இடங்களில் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டினர்.
துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் கிம் யோங் ஹில் ஸ்திரீட்டில் உள்ள அர்மெனியன் தேவாலயத்திலிருந்து நிதித் திரட்டைத் தொடங்கிவைத்தார்.
பல இன, பல சமயத்தைச் சேர்ந்த சிங்கப்பூரர்களும் உள்ளூர் அறக்கட்டளை அமைப்புகளும் பல்வேறு வழிகளில் காஸாவில் உள்ளோருக்குக் கைகொடுக்கக் கடந்த சில ஆண்டுகளாக முயன்றுள்ளனர் என்றார் திரு கான்.
“இந்த நிதித் திரட்டு நிகழ்ச்சியிலும் பல வெளிநாட்டு ஊழியர்களும் வெளிநாட்டினரும் கலந்துகொண்டனர். இது சிங்கப்பூர் அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிக்கிறது,” என்றார் அவர்.
உலகளவில் அனுசரிக்கப்படும் ஐக்கிய நாட்டின் அனைத்துலக மனிதநேய ஒற்றுமை நாளின் ஒரு பகுதியாக காஸா நிவாரணப் பொருள்களுக்கான நிதித் திரட்டு நடைபெற்றது.
இது, ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ குழு ஏற்பாடு செய்யும் மூன்றாவது நிதித் திரட்டு நிகழ்ச்சி.
நிதித் திரட்டு தொடங்கும்முன் போண்டாய் கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது மாண்டோருக்காக ஒரு நிமிட மௌனம் அனுசரிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
காஸாவுக்குக் கூடுதல் நிதியையும் நிவாரணப் பொருள்களையும் அனுப்ப ஜோர்தான், எகிப்து, பாலஸ்தீனம் ஆகியவற்றுடன் ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ குழு முழுவீச்சில் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருகிறது.
சிங்கப்பூரில் உள்ளோரும் தங்கள் பங்கை ஆற்றுவதற்கான தளங்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை அமைத்துத் தரும் என்று குழு குறிப்பிட்டது.
2023 நவம்பரிலிருந்து இவ்வாண்டு ஆகஸ்ட் வரை ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ குழு 84 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருள்களை ராஃபா, கெரிம் ஷலோம், எரிஸ் போன்ற எல்லைப் பகுதிகள் வழியாகக் காஸாவுக்கு அனுப்பியுள்ளது.

