$34,000க்கும் மேற்பட்ட போலியான பொருள்கள் இணையத்தில் விற்பனை

வியாழக்கிழமை ஈசூனில் நடந்த சோதனையில் பறிமுதல்

$34,000க்கும் மேற்பட்ட போலியான பொருள்கள் இணையத்தில் விற்பனை

1 mins read
700க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற பெயர்களில் விற்பனை செய்த மாது கைது
14a5b9d7-92bd-4cbe-a6b2-28a15508ddb3
ஈசூன் ஸ்திரீட் 61ல் பறிமுதல் செய்யப்பட்ட சில பொருள்கள். - படம்: ஏஷியா ஒன்

இணையத்தில் $34,000க்கும் மேற்பட்ட மதிப்புள்ள போலியான பொருள்களை புகழ்பெற்ற விளம்பரப் பெயர்களைக் கொண்டவை என்று ஏமாற்றி விற்பனை செய்த சந்தேகத்தில் 41 வயது மாது காவல்துறையால் வியாழக்கிழமை (ஜூன் 25) கைது செய்யப்பட்டார். குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் (சிஐடி) ஈசூன் ஸ்திரீட் 61ல் நடந்த சோதனையில் 700க்கும் அதிகமான போலியான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்த மாது அங்கு கைதுசெய்யப்பட்டார்.

அதிகாரபூர்வ வர்த்தக முத்திரைகளுக்கு எதிராக செயல்படும் குற்றங்களின்படி, அப்பொருள்களின் சந்தை மதிப்பு $34,000க்கும் மேல் என்று காவல்துறை கணித்துள்ளது.

அவற்றில் அணிகலன்கள், காலணிகள், சொகுசுக் கைப்பைகள், மூக்குக்கண்ணாடிகள், கைக்கடிகாரங்கள், பணப்பைகள் என பலவகையான பொருள்கள் அடங்கும்.

பொய்யான விளம்பர முத்திரைகளைக் கொண்ட போலிப் பொருள்களை நேரிலோ, இணையத்திலோ விநியோகம் அல்லது விற்பனை செய்வது கடுமையான குற்றம் என்று காவல்துறை பொதுமக்களை எச்சரித்தது.

முறையாக வணிகம் செய்வோரையும், பயனாளர்களையும் ஏமாற்றி, சட்டத்துக்கு எதிராகச் செயல்படுவோரின்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை நினைவூட்டியது.

விசாரணை தொடர்கிறது.

தண்டனை விவரம்

விற்பனை செய்வதற்கென பொய்யான வர்த்தகச் சின்னங்களைக் கொண்ட பொருள்களை வைத்திருப்போர்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், $100,000 அபராதம், சிறை அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்