ஜகார்த்தா: வேலை தேடித் தரும் நிறுவனங்களின் வாயிலாக இந்தோனீசியத் தாதியர் சிங்கப்பூரில் வேலை செய்ய வரத் தொடங்கி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது.
அப்படியிருக்கையில், சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நோக்கில் கூடுதலான இந்தோனீசிய சுகாதாரப் பராமரிப்பாளர்களைத் தருவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தோனீசிய சுகாதாரப் பராமரிப்பாளர்களிடையே வெளிநாட்டில் வேலை செய்வதற்கான ஆர்வம் அதிகரித்து வருவதாக சுகாதாரப் பராமரிப்புத் துறையைச் சேர்ந்த அமைப்புகளும் நிறுவனங்களும் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் கூடுதல் சம்பளம் வழங்கப்படுவது, தொழில்துறையிலும் தனிப்பட்ட முறையிலும் தங்களை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் இருப்பது போன்றவை அதற்கான காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இவ்வாண்டு ஜூன் மாதம் வரை டான் டோக் செங் மருத்துவமனை, சாங்கி பொது மருத்துவமனை போன்ற அரசாங்க மருத்துவமனைகளில் 66 இந்தோனீசிய தாதியர் பணியாற்றினர் என்று இந்தோனீசிய மனிதவள அமைச்சைச் சேர்ந்த ரெண்ட்ரா செத்தியாவான் எனும் அதிகாரி தெரிவித்துள்ளார். வெளிநாடு செல்லும் இந்தோனீசிய ஊழியர்களுக்கு வேலை தேடித் தருவது, அவர்களைப் பாதுகாப்பது ஆகியற்றைக் கவனிக்கும், இந்தோனீசிய மனிதவள அமைச்சின் பிரிவில் திரு ரெண்ட்ரா இயக்குநராகப் பொறுப்பு வகிக்கிறார்.
சிங்கப்பூருக்கு வந்த இந்தோனீசியத் தாதியரில் பெரும்பாலோர் சுகாதாரப் பராமரிப்பு உதவியாளர்களாக வந்தனர் என்றும் இங்கு தாதியராகப் பணியாற்ற அவர்கள் சிங்கப்பூர் தாதியர் கழகத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டியிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தோனீசியத் தாதியர் வெளிநாடுகளில் வேலை செய்வதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கிறது. சிங்கப்பூரும் அவற்றில் அடங்கும்,” என்று திரு ரெண்ட்ரா குறிப்பிட்டார்.
2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூருக்குக் கூடுதலாக 24,000 தாதியரும் சுகாதாரப் பராமரிப்பார்களும் தேவைப்படுவர் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி திரு ரெண்ட்ரா சுட்டினார். அது, இந்தோனீசியத் தாதியருக்கு வாய்ப்புகளை வழங்குவதாகவும் அவர் கூறினார்.
2023ஆம் ஆண்டு வரை இந்தோனீசியத் தாதியரை சிங்கப்பூருக்குத் தருவிக்க அதிகாரபூர்வ ஏற்பாடு ஏதும் செய்யப்படவில்லை. இந்தோனீசியத் தாதியரிடம் ஆங்கில மொழித் திறன் இல்லாதது போன்றவை அதற்கான காரணங்களாக இருக்கலாம் என்று வேலை தேடித் தரும் நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

