வரவுசெலவுத் திட்டம் 2026ல் ஊழியர்க்கு கூடுதல் ஆதரவு: பிரதமர் வோங்

வரவுசெலவுத் திட்டம் 2026ல் ஊழியர் ஆதரவுத் திட்டங்கள் குறித்த விவரங்கள்

வரவுசெலவுத் திட்டம் 2026ல் ஊழியர்க்கு கூடுதல் ஆதரவு: பிரதமர் வோங்

படம்: பெரித்தா ஹரியான்

11 Feb 2026 - 8:05 pm

2 mins read

கடந்த 2025ஆம் ஆண்டில் வலுவான பொருளியல் வளர்ச்சியும் வேலை வாய்ப்பும் இருந்தபோதிலும், பல சிங்கப்பூரர்கள் வேலைகள் குறித்து கவலையடைந்துள்ளனர் என்று பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

குறிப்பாக, விரைவான தொழில்நுட்ப மாற்றமும் நிச்சயமற்ற வெளிப்புறச் சூழலும் இதற்குக் காரணம் என்று புதன்கிழமை (பிப்ரவரி 11) வெளியிட்ட காணொளியில் அவர் விவரித்தார்.

இந்த மாற்றங்களை மக்கள் சமாளிக்க உதவும் வகையில், அரசாங்கம் வேலை மாற்றங்களை நிர்வகிப்பதில் கவனம் செலுத்தும். போட்டித்தன்மையுடன் இருப்பதற்கான திறன்களை அவர்களுக்கு வழங்கும். வருமான அதிகரிப்புடன் கூடிய நல்ல வேலைகளை அணுக முடிவதை உறுதி செய்யும் என்று அவர் உறுதியளித்தார்.

இந்தத் திட்டங்கள் குறித்து பிப்ரவரி 12ஆம் தேதி தமது வரவுசெலவுத் திட்ட அறிக்கை உரையில் மேலும் பேசவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

காணொளியில், இரு ஊழியர்களிடம் பேசிய பிரதமர் வோங், வேலைகள் உருமாற்றம் காணும், பரிணாமம் பெறும். இது சிங்கப்பூரர்களுக்கு அதிக தொழில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றார்.

சிங்கப்பூரர்களைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உதவும் என்றும் இதனால் அவர்கள் மாற்றங்களுக்கும் புதிய வேலைகளுக்கும் தயாராக இருப்பார்கள் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

கடந்த 2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் பொருளியல் 5 விழுக்காடு வளர்ச்சி அடைந்ததாக வர்த்தக, தொழில் அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. 
கடந்த 2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் பொருளியல் 5 விழுக்காடு வளர்ச்சி அடைந்ததாக வர்த்தக, தொழில் அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.  - படம்: சாவ் பாவ்

கடந்த 2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் பொருளியல் 5 விழுக்காடு வளர்ச்சி அடைந்ததாக வர்த்தக, தொழில் அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. 2026ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி முன்னுரைப்பு அண்மையில் 2 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன், 2025ல் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டுக் கடப்பாடுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 15,700 வேலைகளை உருவாக்கும் என்று பொருளியல் வளர்ச்சிக் கழகம் முன்னதாக அறிவித்திருந்தது.

செயற்கை நுண்ணறிவு கொண்டு வரும் மாற்றங்களுக்கு மத்தியில் ஊழியர்களின் கவலைகளைப் போக்கவேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் வோங் முன்னர் பேசியிருந்தார். இது உலகளவில் அரசாங்கங்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய சவால் என்று அவர் விவரித்தார்.

பிரதமர் வோங் வரவுசெலவுத் திட்ட அறிக்கையை வியாழக்கிழமை (பிப்ரவரி 12) பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்.

வரவுசெலவுத் திட்டம் 2026 குறித்த உடனடித் தகவல்களுக்குத் தமிழ் முரசு செயலி, இணையத்தளம், சமூக ஊடகப் பக்கங்களை நாடுங்கள்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வரவுசெலவுத் திட்டம்லாரன்ஸ் வோங்ஊழியர்ஆதரவுஆதரவுத் திட்டம்