சிங்கப்பூரில் சிறுவர்களும் பதின்ம வயதினரும் மின்னிலக்க சாதனங்கள், திறன்பேசிகளுக்கு அடிமையாவதும் அதன் தொடர்பில் அவர்கள் நடந்துகொள்ளும் முறையில் பிரச்சினைகள் எழுவதும் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் கூடுதலான இளையர்கள் பல வகைகளில் மின்னிலக்க சாதனங்களுக்கு அடிமையாவதாக மனநல ஆலோசகர்களும் சமூக சேவை ஊழியர்களும் கூறுகின்றனர். சமூக ஊடகங்கள், இணையம் ஆகியவற்றில் அளவுக்கு அதிகமான நேரம் செலவிடுவது, இணைய விளையாட்டுகள், ஆபாசப் படங்களுக்கான இணையத்தளங்கள் ஆகியவற்றில் பல மணிநேரம் கழிப்பது உள்ளிட்ட பழக்கங்களுக்கு அதிக இளையர்கள் ஆளாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினையை எதிர்கொள்ளும் இளையர்களுக்கென டச் கம்யூனிட்டி சர்விசஸ் (Touch Community Services) எனும் அமைப்பு மனநல ஆலோசனைத் திட்டம் ஒன்றை நடத்தி வருகிறது. 2022ஆம் ஆண்டில் மின்னிலக்க சாதனங்களுக்கு அடிமையான 111 இளையர்களை அந்த அமைப்பு கவனித்தது. அந்த எண்ணிக்கை, 2019ஆம் ஆண்டில் பதிவானதைவிட 58 விழுக்காடு அதிகமாகும்.
மறுவாழ்வு நிலையமான வீ கேர் கம்யூனிட்டி சர்விசஸ் (We Care Community Services), தங்களிடம் அனுப்பப்பட்ட இணைய விளையாட்டுகளுக்கு அடிமையானோரின் எண்ணிக்கை, கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்குப் பிறகு 20 விழுக்காடு அதிகரித்ததாகத் தெரிவித்தது. கடந்த மூவாண்டுகளாக மின்னிலக்க சாதனங்களுக்கு அடிமையாவது குறித்து பள்ளிகள், பெற்றோரிடமிருந்து வரும் அழைப்புகளும் கேள்விகளும் அதிகரித்திருப்பதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டது.
15லிருந்து 21 வயதுக்கு உட்பட்ட சிங்கப்பூர் இளையர்கள், பிரச்சினை தரும் வகையில் திறன்பேசிகளைப் பயன்படுத்துவதாக மனநலக் கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்தது. அந்த ஆய்வின் முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டன.
அதேபோல், இளையரக்ள் நால்வரில் ஒருவருக்கும் அதிகமானோர் சமூக ஊடகங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியதாக மனநலக் கழகம் நடத்திய மற்றோர் ஆய்வில் தெரியவந்தது. அந்த ஆய்வின் முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டன.
பிரச்சினையைக் கையாள டச் போன்ற அமைப்புகள், இதுகுறித்து பெற்றோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. குடும்பமாக நேரம் செலவிடும்போதோ உணவருந்தும்போதோ பிள்ளைகளைக் கைப்பேசிகளைப் பயன்படுத்தாமல் இருக்கச் செவ்யது போன்ற நடவடிக்கைகளைப் பெற்றோர் எடுக்கலாம் என்று வல்லுநர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.