தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
தேசத்திற்கான கனவுகளை வார்த்தையில் சிறைபிடிக்கும் வித்தகர்களின் அனுபவம்

தேசிய தினக் கொண்டாட்டத்தில் தமிழ்க்கொடியைப் பறக்கச் செய்யும் மொழி வல்லுநர்கள்

5 mins read
d179ef1b-24cb-4bef-9d1e-20a1519876b0
(இடமிருந்து) குடிமக்கள் மொழிபெயர்ப்பாளர்கள் முனைவர் கேப்டன் மாகோ, திருவாட்டி நடராஜன் சாந்தி, திருவாட்டி சந்திரகலா கல்யாணசுந்தரம். - படம்: தேசிய மொழிபெயர்ப்புக் குழு

சிங்கப்பூர் அதன் 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், நாட்டின் முன்னேற்றத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் பிரம்மாண்டமான நிகழ்ச்சியாகச் சரித்திரம் படைத்து வருகிறது தேசிய தின அணிவகுப்பு.

இந்த அங்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் குரல் தெளிவாகவும் உரக்கக் கேட்கப்படுவதையும் உறுதிசெய்ய ஓசை இல்லாமல் திரைக்குப் பின் உழைக்கிறார்கள் அர்ப்பணிப்புமிக்க  மொழிபெயர்ப்பாளர்கள்.

மொழிபெயர்ப்பு என்பது இவர்களைப் பொறுத்தமட்டில் வார்த்தையை மாற்றுவது அன்று; சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தின் கனவுகள், நம்பிக்கை, அடையாளம் ஆகியவற்றைப் படம்பிடித்து மக்களின் கண்முன் நிறுத்துவதுதான்.

அவ்வகையில் தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்ட அங்கத்தில் இணைந்து அதில் இடம்பெறும் பல்வேறு அங்கங்களைத் தமிழ் மொழியில் செதுக்கி அதை மக்களுக்காகப் படைத்த மொழிபெயர்ப்பாளர்களின் அனுபவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

பெருமிதத்துடன் இணைந்த பொறுப்பு

பல ஆண்டுகளாக மொழிபெயர்ப்பு செய்துவந்தாலும் தேசிய தின நிகழ்வுக்காக மொழிபெயர்ப்பை முதன்முறையாகச் செய்கிறார், திருவாட்டி சந்திரகலா கல்யாணசுந்தரம், 57.

‘‘இப்பணியில் இணைவதில் எனக்கு மிகுந்த பெருமிதம். அதேவேளையில் பொறுப்பும் உள்ளது. தேசிய தினத்தின்போது நடைபெறும் இந்த நிகழ்ச்சியைக் காண நாடே திரளும். அப்போது எல்லாருடைய கண்களும் பார்த்துக்கொண்டிருக்கும்.

‘‘எனவே இதைச் செவ்வனே செய்தாக வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது,’’ என்ற திருவாட்டி கலா தொடர்ந்து பேசினார்.

‘‘இந்த அரங்கில் என்னைப் போன்றவர்களும் இருப்பார்கள். அதேவேளையில் நம்மைக் காட்டிலும் சிறந்தவர்களும் இருப்பார்கள். எனவே, மொழிபெயர்ப்பு எளிமையாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையிலும் இருக்கவேண்டும்,’’ என்பதே என் நோக்கமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அறைக்குள் செய்த மொழிபெயர்ப்பை மக்கள் அரங்கில் செய்வது புதுமை

பாடாங்கில் நடைபெற்ற மொழிபெயர்ப்பு தொடர்பான இந்நிகழ்வில் பங்கேற்ற அனுபவம் முற்றிலும் புதுமையானது என்றார் திருவாட்டி நடராஜன் சாந்தி, 48.

‘‘தேசிய தினக் கொண்டாட்டம் என்பது சிறார் முதல் பெரியோர்வரை அனைத்து வயதுடையவர்களும் பார்க்கும் நிகழ்ச்சி. அந்தத் தளத்தில் அவர்களின் உணர்வுகளுடன் கலந்திட ஏதுவாக மொழியாக்கம் செய்ய வேண்டும் எனும் ஆர்வமே என்னுள் இருந்தது.

குறிப்பாக, இம்முறை சிங்கப்பூரின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒர் அங்கமாக, தேசங்களுக்கான கனவுகளாக மக்கள் எழுதிக் கொடுத்த வாசகங்களை மொழிபெயர்ப்பு செய்யும் அனுபவம் இவருக்குக் கிடைத்தது.

தேசத்திற்கான கனவுகளை வார்த்தையில் சிற்றளவும் மாறாமல் சிறைபிடிக்கும் எண்ணத்துடன் இந்த ஆண்டிற்கான மொழிபெயர்ப்புப் பணியைச் செய்ததாகப் பகிர்ந்துகொண்டார் திருவாட்டி சாந்தி.

‘‘கனவுகளுக்குத் தமிழ் மொழியில் வடிவம் கொடுக்கும் முக்கிய இலக்கைக் கருத்தில் கொண்டேன். அந்த முதல் பிரதிகளில் உள்ள எழுத்துப் பிழைகளைத் திருத்த வேண்டும்.

‘‘அதேநேரம், கூறவேண்டிய கருத்து எல்லோருக்கும் புரியும் வகையிலும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனும் மனத்துடன் செயல்பட்டோம்,’’ என்றார் அவர்.

‘‘மற்ற நாள்களில் செய்யும் மொழிபெயர்ப்புக்கும் தேசிய தினத்தன்று மக்கள் காணும் மொழிபெயர்ப்புக்கும் வித்தியாசம் உண்டு. தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்ட இவ்விருவரும், அந்த அங்கத்தில் இடம்பெற்ற காணொளி மற்றும் இசைப் படைப்புகளுக்கான வார்த்தைகளைத் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தனர்.

‘‘குறிப்பாக, அதில் இடம்பெற்றிருந்த ‘ராப்’ இசைப் பாடலை மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. அப்போது கொண்டாட்ட உணர்வோடு கருப்பொருளையும் தமிழ் சமூகத்திடம் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் எண்ணம் எங்களுள் நிறைந்திருந்தது.

‘‘சிங்கப்பூரின் 60 ஆண்டுச் சாதனை பயணத்தைத் தமிழில் தமிழ் சமூகத்திற்காகக் கொண்டுசேர்க்கும் வகையில் மொழியின் தனித்துவம் மாறாமல் பேணிடவும் இயன்றவரை முயன்றோம்,’’ என்றனர் இந்தக் குடிமக்கள் மொழிபெயர்ப்பாளர்கள்.

‘முன்னேறட்டும் சிங்கப்பூர்’ என்ற கருப்பொருளில் களைகட்டவுள்ள தேசிய தின அணிவகுப்பில் தமிழ் மொழியில் திரையிடப்படும் எல்லாமும் பிழையின்றி இருக்க வேண்டும் எனும் சிந்தையுடன் பங்கேற்றதாகக் கூறிய இவர்கள், தங்களின் பங்கேற்பு குறித்தும் பேசினர்.

‘‘இத்தகைய மைல்கல் கொண்டாட்டத்தில் என் பங்களிப்பு சிறியதுதான். என்றாலும்  நீரிணையைக் கட்டும்போது சிறிய கற்கள் எடுத்துக்கொடுத்து அது நிறைவுபெறச் செய்தது போன்ற உணர்வு எனக்குள் உள்ளது,’’ என்றார் திருவாட்டி சந்திரகலா.

‘‘பார்வையாளராக மட்டுமே இவ்வளவு காலம் கண்டு வந்தேன். தற்போது சிறுதுளியாக இந்தக் கொண்டாட்ட அங்கத்தில் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி,’’ என்றார் திருவாட்டி சாந்தி.

‘‘மொழிபெயர்ப்பு எப்போதும் செய்வதுதான் ஆனால் அவற்றை அறையிலிருந்து செய்வது வேறு. 

‘‘மக்களின் கருத்தை மக்களுக்குக் கொண்டுசேர்ப்பதற்கான வாய்ப்பு முற்றிலும் வேறுபட்டது. அவர்களின் கருத்தை இன்னும் செழுமைப்படுத்தி அவர்களிடம் சேர்ப்பது  தனிவித அனுபவம்,’’ என்றார் அவர்.

தேசிய தின அணிவகுப்பில் கடந்த 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் இணைந்து செயலாற்றிய குடிமக்கள் மொழிபெயர்ப்புத் திட்டப்பணி, தேசத்தின் 60வது சுதந்திர தினத்தின் சிறப்புவாய்ந்த கொண்டாட்டத்திலும் இணைந்துள்ளது. இந்தப் பணியில் இணைந்து மொழிபெயர்ப்பில் உதவிய முதல் தமிழ் குடிமக்கள் மொழிபெயர்ப்பாளர் முனைவர் கேப்டன் மாகோ. இவர்கள் அனைவரும் 2021ம் ஆண்டு முதல் தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் குடிமக்கள் மொழிப்பெயர்ப்பாளர்களாக இருந்து வருகின்றனர்.

தமிழுக்கான பணி உயிரோடு இணைந்தது

ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கும் மேலாக தேசிய தினக் கொண்டாட்டத்தைக் கண்டு உவகையுறும் முனைவர் கேப்டன் மாகோ, 75, தமக்கு மொழிமாற்றம் செய்ய சில ஆண்டுகளுக்குமுன் வந்த அழைப்பை நினைவுகூர்ந்தார்.

‘‘அந்த அழைப்பைக் காட்டிலும் ஆனந்தம் ஒன்றுமில்லை. தேசிய தினத்திற்கான அந்த நிகழ்விற்காக காலை 9 மணி முதல் இரவு எட்டு மணி வரையெல்லாம் அமர்ந்து பணி செய்தது உண்டு.

மொழிபெயர்ப்பாளராகத் தமது பங்களிப்பை அளிப்பதற்கான காரணங்களையும் பகிர்ந்தார் கேப்டன் மாகோ.

சிங்கப்பூரின் தமிழ் தனித்துவமிக்கது; அது வழக்க முறையில் இருக்க வேண்டும்.  மொழியை வளர்க்க வேண்டும், மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் எனும் இலட்சியத்தையும் கடந்து, மக்கள் தவறான சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க உதவும் மேடையாகவும் இந்தப் பணியைத் தாம் அணுகுவதாகக் குறிப்பிட்டார் முனைவர் மாகோ.

குறிப்பாக, மாணவர்களுக்கு அவர்களின் தமிழ் மொழி வளத்தை வலுவாக்கவும் இதனை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் வகையில் பிழையில்லா மொழியாக்கம் நல்குவதும் முக்கியம் என்றார் அவர்.

மேலும், மக்கள் தமிழ் வார்த்தைகளைப் பார்க்க, கேட்க, கற்றுகொள்ள ஆசைப்பட வேண்டும். அந்த வகையில் மொழிமீதான அவர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் வகையில் தீந்தமிழை தமிழ் சமூகத்திற்கு தருவதே தம் தீராத் தாகம்,’’ என்று மேலும் விவரித்தார் கேப்டன் மாகோ.

பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் இந்த அங்கம் தொடர்ந்து செயலாக்கம் காண வேண்டும் என்று கருத்துரைத்த அவர், தம்மால் இயன்றவரை இளம் தலைமுறையினரை  இதில் இணைக்க முயற்சி எடுத்துவருவதாகவும் சொன்னார். 

‘‘செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது. எனினும் தமிழ் மொழியின் அடையாளம் தமிழ் எழுத்து. அரசு அமைத்துத் தந்த அந்த அதிகாரபூர்வ மேடையில் தமிழை தொடர்ந்து கொண்டு செல்லத் தேசிய தின அணிவகுப்பு போன்ற அங்கங்கள் பயன்படுகின்றன.

‘‘எனவே, அவர்களுடன் கரம்கோத்து நாமும் சிறப்பாகச் செயலாற்றினால் எல்லைகள் கடந்தும் தமிழ் மணம் பரப்ப முடியும்,’’ என்றார் கேப்டன் மாகோ.

இந்த ஆண்டிற்கான மொழிபெயர்ப்பில் புதியவர்கள் இணைந்தது மகிழ்ச்சி இன்னும் ஏராளமானோர் இதில் பங்கேற்க வருதல் வேண்டும். பிறருக்கும் அந்த வாய்ப்பு கிட்ட வழிவகுக்கவே இந்த ஆண்டிற்கான கொண்டாட்டத்தில் பங்கேற்க தாம் முன்வரவில்லை என்றும் அவர் சொன்னார்.

தமிழுக்கு செய்வது உயிரோடு இணைந்தது. அதை இறுதிவரைக்கும் செய்து, அந்த நற்பணி தொடர மற்ற இளையர்களை இணைக்கும் எண்ணத்துடன் இந்தப் பணியைத் தொடரப்போவதாகக் கூறினார் திரு மாகோ. 

குறிப்புச் சொற்கள்