பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளூர் அரசியல்வாதிகளையும், காவல்துறையின் முன்அனுமதியின்றி தனிப்பட்ட முறையில் புலனாய்வு செய்ய சட்டம் அனுமதிக்கிறது.
நாடாளுமன்ற நாயகர், எதிர்க்கட்சித் தலைவர், நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இதில் உள்ளடங்குவர்.
ஆனால், அதிபர், பிரதமர், அமைச்சர் அல்லது துணை அமைச்சரைத் தனிப்பட்ட முறையில் புலனாய்வு செய்வதற்கு அனுமதி தேவை.
தனியார் புலனாய்வாளர்களுக்கான தனியார் பாதுகாப்புத் தொழில் சட்டத்தின்கீழ், ‘குறிப்பிட்ட சில பாதுகாப்புப் பணிகளுக்கு’ அனுமதி தேவைப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்விக்குக் காவல்துறை பதிலளித்தது.
எனவே, தனியார் புலனாய்வாளர்கள் குறிப்பிட்ட சிலரைப் புலனாய்வு செய்வதற்குமுன் காவல்துறையின் உரிமம் வழங்கும் பிரிவிடமிருந்து எழுத்துபூர்வ அனுமதி பெறவேண்டும்.
சிங்கப்பூரில் உள்ள வேறொரு அரசாங்கத்தின் பிரதிநிதி, உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் இதில் உள்ளடங்குவர்.
ஆனால், ‘அரசியல் பிரமுகர்களில்’ அதிபர், பிரதமர், அமைச்சர் அல்லது துணை அமைச்சர் மட்டுமே உள்ளடங்குவதாகச் சட்டம் குறிப்பிடுகிறது.
நாடாளுமன்ற நாயகர், எதிர்க்கட்சித் தலைவர், நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் உள்ளடங்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் இதில் உள்ளடங்கவில்லை.
இந்தச் சட்டத்தின்கீழ், சிங்கப்பூர் அல்லாத வேறொரு நாட்டின் அரசாங்கத்திற்காகப் புலனாய்வு செய்வதற்கும் தனியார் புலனாய்வாளர்கள் அனுமதி பெறவேண்டும்.
சிங்கப்பூரின் நலனைப் பாதுகாப்பதற்காக, தனியார் புலனாய்வாளர்களின் குறிப்பிட்ட சில பணிகளுக்கு முன் அனுமதி தேவைப்படுவதாகக் காவல்துறை பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
“பொதுநலனுக்கு அல்லது தேசிய பாதுகாப்புக்குப் பங்கமாக இருக்கக்கூடிய புலனாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் தடுப்பது இதன் நோக்கம்,” என்றார் அவர்.
புதன்கிழமை நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தின்போது, முன்னாள் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேராவையும் கட்சி உறுப்பினர் நிக்கோல் சியாவையும் கண்காணிக்க இந்தச் சட்டத்தின்கீழ் யாராவது விண்ணப்பம் செய்திருந்தார்களா என்று நியமன நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் கேட்டார்.
திரு பெரேராவும் திருவாட்டி சியாவும் தகாத உறவில் இருந்ததை அம்பலப்படுத்திய காணொளி ஜூலை மாதம் வெளிவந்ததைத் தொடர்ந்து இருவரும் கட்சியிலிருந்து விலகிக்கொண்டனர்.
இதன் தொடர்பில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விக்குக் காவல்துறை விளக்கமளித்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்தச் சட்டத்தின்கீழ் அரசியல் பிரமுகர்களைத் தனிப்பட்ட முறையில் புலனாய்வு செய்ய எந்தக் கோரிக்கைகளும் செய்யப்படவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

