தமிழ்மொழியைக் கொண்டாடுவதையும் அதன் வளமையை எடுத்துக்கூறி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதையும் நோக்கமாகக் கொண்ட உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டத்தில் மாணவர்களும் இளையர்களும் திரளாகப் பங்கேற்றதாகக் கூறப்பட்டுள்ளது.
இவ்விழா பிப்ரவரி 21ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடைபெற்றது.
தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகள் இணைந்து கொண்டாடிய இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற நியமன உறுப்பினரான இணைப் பேராசியரியர் முனைவர் ரிஸ்வானா பேகம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த, தொலைக்காட்சிப் புகழ் பேச்சாளர் முத்துக்குமரன் முக்கியப் பேச்சாளராகப் பங்கேற்று தாய்மொழியின் தொன்மை, சிறப்பு போன்றவை குறித்துப் பேசினார்.
“சிங்கப்பூர் மட்டுமன்றி இளையர்களிடம் மொழியைக் கொண்டு சேர்த்துவிட முடியாதா எனும் ஏக்கம் உலகெங்கிலும் நிறைந்துள்ளது. அதை நிறைவேற்றும் விதமாக இங்குள்ள தமிழர்கள் மொழிக்கு அளிக்கும் முக்கியத்துவம் மகிழ்ச்சியளிக்கிறது,” எனச் சொன்னார் அவர்.
“தமிழ் படித்தால் பொருள் ஈட்ட முடியுமா என்ற கேள்விக்கு நானே பதில்,” என்று சொன்ன முத்துக்குமரன், தனக்கு வாழ்வு கொடுத்தது தமிழ்மொழிதான் என்றும் தெரிவித்தார்.
“கருத்துகளைப் பகிரும் கருவிதானே மொழி எனும் கருத்து பரவலாக உள்ளது. அதனைக் கொண்டாடுவது அவசியமா எனும் கேள்வி எழலாம். ஆனால் தாய்மொழி மக்களை ஒன்றிணைக்கிறது, பண்படுத்துகிறது,” என்றார் அவர்.
தாய்மொழியின் அவசியத்தைப் பற்றியும், அதன்வழி வாழ்ந்த தலைவர்களையும் குறிப்பிட்டுப் பேசிய அவர், தமிழ்மொழியின் கட்டமைப்பையும் அதன் சிறப்புகளையும் எடுத்துரைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழா அமைப்பின் இளையர்களின் நடனத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இளையர்கள் கலந்துகொண்டு பேசிய விவாத அரங்கம் இடம்பெற்றது.
உலக அளவில் தமிழ்மொழி கற்றல், கற்பித்தலில் உள்ள சவால்களை எதிர்கொள்ள நம் தமிழ்ச் சமூகம் தயாராக உள்ளதா எனும் தலைப்பை ஒட்டியும் வெட்டியும் இளையர்கள் அறுவர் பேசினர்.
மேலும், தொடக்கநிலை மாணவர்களுக்கான சொற்போர் போட்டி நடைபெற்றது.
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குக் கோலம், கரகாட்டம், பழமொழிகள், தமிழர் உணவைக் கண்டுபிடித்தல் உள்ளிட்ட பல சுற்றுகள் கொண்ட ‘வேட்டையாடு விளையாடு’ போட்டியும் நடைபெற்றது. அதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
“நாம் யார் எனும் அடையாளத்தை அளிப்பது நம் மொழிதான். தாயைக் கொண்டாடுவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் தாய்மொழியைக் கொண்டாடுவதும். இந்தக் கொண்டாட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டதைப் பார்த்ததும் அதில் பங்கேற்றுப் பேசியதும் பெருமையளிக்கிறது,” என்றார் பேச்சாளர் முத்துக்குமரன்.
“தாய்மொழி நாள் கொண்டாட்டத்தை எளிதாக எடுத்துக்கொள்ளாமல், இளையர்களை ஈடுபடுத்தக் கிடைத்த வாய்ப்பாகக் கருதினோம். அதனை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் தமிழ்மொழி மீது ஆர்வம் கொண்டவரையும், தமிழ் இளையர்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தியவரையும் அழைத்துப் பேச வைத்தோம். இது இளையர்களிடம் மொழிசார் நடவடிக்கையில் ஈடுபடும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்,” என்றார் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவில் பணியாற்றிய தொழில்நுட்பத்துறை ஊழியரும் தமிழர் பேரவையின் துணைப் பொதுச் செயலாளருமான அவந்திகா ஆனந்த், 24.
தமிழ்மொழி பேசுவதில் இளையர்கள் தயக்கம் காட்டுகிறார்கள் என்றும் அதனைத் தகர்க்க இந்நிகழ்ச்சியில் பேசிய மாணவர்கள், பேச்சாளர்களின் பேச்சு ஊக்குவிப்பாக அமைந்திருக்கும் எனவும் நம்புவதாகச் சொன்னார் அவர்.
தாய்மொழி நாள் கொண்டாட்டங்களில் பள்ளிப் பருவத்தில் பங்கேற்பாளராக இருந்து, தற்போது ஏற்பாட்டுக் குழுவில் பணியாற்றியது மகிழ்ச்சி என்றார் தமிழா அமைப்பின் துணைத் தலைவரான மாணவர் ராகுல்தாசன், 25.
“தமிழ்மொழி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றால் அதன் மூலம் மாணவர்கள் முனைப்புடன் தமிழ்மொழியையும் கலாசாரத்தையும் கற்பார்கள். அந்த நோக்கில் தொடக்க நிலை, உயர்நிலை மாணவர்களுக்கான போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தோம். மாணவர்கள் இன்று பல சொற்களைக் கற்றிருப்பார்கள். இன்று வெற்றி கிட்டாவிட்டாலும் எதிர்காலத்தில் போட்டிகளில் வெற்றிபெற தமிழை மேலும் படித்துத் தயார் செய்துகொள்வார்கள்,” என்றார் ராகுல்.