தீவு விரைவுச்சாலையில் (பிஐஇ) லாரியுடன் மோதி விபத்தில் சிக்கிய 33 வயதுப் பெண் மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புதன்கிழமை (ஜனவரி 21) நடந்த விபத்து குறித்து காலை 9.25 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
விபத்து நடந்த இடத்தில் மோட்டார் சைக்கிளோட்டி மாண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர்கள் அறிவித்தனர்.
லாரி ஓட்டுநர், 40, விசாரணைகளுக்கு உதவி வருகிறார் என்று காவல்துறை தெரிவித்தது.
விபத்திற்குப் பின்னர் எடுக்கப்பட்ட காணொளிக் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. விரைவுச் சாலையின் லோர்னி ரோட்டில் இருந்து வெளியேறும் பாதை அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று சாலையின் ஓரத்தில் கிடப்பதைக் காணொளியில் காண முடிந்தது.
வெள்ளைத் தாளினால் மூடப்பட்ட பலியானவரின் உடலையும் மோட்டார் சைக்கிளுக்குப் பக்கத்தில் காண முடிந்தது.
சாங்கியை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையின் லோர்னி ரோடு வெளியேற்றத்துக்குப் பிறகு நடந்த விபத்தினால் பிகேஇ வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் காலை 9.48 மணிக்கு எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்தது.

