இரண்டு லாரிகள், மூன்று மோட்டார்சைக்கிள்கள், ஒரு கார் சம்பந்தப்பட்ட விபத்தில், மார்ச் 8ஆம் தேதி மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் உயிர் இழந்தார்.
பெனோய் ரோடு வெளிவழிக்கு அருகில் துவாசை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட அந்த விபத்து குறித்து பின்னிரவு 12.45 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் கூறினர்.
முப்பத்து மூன்று வயது மோட்டார்சைக்கிள் ஓட்டியின் மரணம் சம்பவ இடத்திலேயே உறுதிசெய்யப்பட்டது.
கார் ஓட்டுநரான முப்பத்து மூன்று வயது ஆடவரும், அதில் இருந்த 46 வயது ஆடவர் ஒருவரும் இங் டெங் ஃபொங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் சுயநினைவுடன் இருந்தனர்.
நாற்பத்து ஆறு வயதான மற்றொரு மோட்டார்சைக்கிளோட்டி மருத்துவமனைக்குச் செல்ல மறுத்ததாக காவல்துறை கூறியது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.
சென்ற ஆண்டு போக்குவரத்து விபத்துகளில் 136 பேர் மாண்டனர். 2022ஆம் ஆண்டில் பதிவான 108 மரணங்களைக் காட்டிலும் இது 25.9 விழுக்காடு அதிகம்.
மாண்டோரில் பாதிப் பேர் மோட்டார் சைக்கிளோட்டிகள் அல்லது அவர்களுடன் சவாரி செய்தவர்கள்.