ஸ்டாம்ஃபர்ட் ரோட்டில் உள்ள கேப்பிட்டோல் அரங்கில் (Capitol Theatre) வரும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதியிலிருந்து மறுபடியும் திரைப்படங்கள் திரையிடப்படும்.
பல ஆண்டுகளில் முதன்முறையாக கேப்பிட்டோல் அரங்கில் திரைப்படங்கள் காண்பிக்கப்படவுள்ளன.
கேப்பிட்டோல் அரங்கம் 1930ஆம் ஆண்டு மே மாதம் திறக்கப்பட்டது. பிறகு புதுப்பிப்புப் பணிகளுக்காக 1998ஆம் ஆண்டில் அதுவும் அப்பகுதியில் உள்ள இதர கட்டடங்களும் மூடப்பட்டன.
பின்னர் கேப்பிட்டோல் அரங்கம் 2015ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது. அங்கு பல்வேறு சிவப்புக் கம்பள (red carpet) நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
GV@Capitol என்ற பெயரில் கோல்டன் வில்லேஜ் நிறுவனம் கேப்பிட்டோல் அரங்கில் அவ்வப்போது திரைப்படங்களைக் காண்பித்தது. கடந்த சில ஆண்டுகளாக அது நின்றுபோனது.
இப்போது கேப்பிட்டோல் கெம்பின்ஸ்கி ஹோட்டல், சிங்கப்பூர் (Capitol Kempinski Hotel Singapore) அரங்கை நடத்தி வருகிறது.
இந்நிலையில், வரும் பிப்ரவரி 22 முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை மின்னிலக்க வடிவம் பெற்றுள்ள, ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்திருக்கும் பிரபலமான பழைய படங்கள் கேப்பிட்டோல் அரங்கில் திரையிடப்படும். ‘கிளாசிக்ஸ் அட் கேப்பிட்டோல்’ எனும் திட்டத்தின்கீழ் அத்திரைப்படங்கள் காண்பிக்கப்படும்.
அந்த வரிசையில் முதல் படம் 1952ஆம் ஆண்டு வெளியான ‘சிங்கின் இன் தி ரெய்ன்’ (Singin’ In The Rain). திட்டத்தின் ஓர் அங்கமாக பிப்ரவரி 22ஆம் தேதி கேப்பிட்டோல் அரங்கில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெறும்.
தொடர்புடைய செய்திகள்
‘கிளாசிக்ஸ் அட் கேப்பிட்டோல்’ நுழைவுச்சீட்டுகளும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி குறித்த தகவல்களும் capitol-theatre.sg இணையத்தளம் மூலமாக வழங்கப்படும்.

