தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் திரு அரசு என்று அழைக்கப்படும் வை.திருநாவுக்கரசு. இந்திய சமூகம் நவீனப் பாதையில் சென்றபோது, உந்துதலாக இருந்தவர். அரசாங்கத்துக்கும் சமூகத்துக்கும் இடையில் தொடர்புப் பாலமாகச் செயல்பட்டவர். கடினமான முடிவுகளை எடுக்கத் தயங்காதவர். சரியானவற்றைத் துணிந்து சொல்பவர்.

தொலைநோக்குத் தலைவர்

12 mins read
b7b59543-f716-41f3-9db0-0b43af70bf36
தமிழ் முரசின் உதவி ஆசிரியராகப் பணிபுரிய தமிழகத்திலிருந்து 26 வயதில் 1951ஆம் ஆண்டு சிங்கப்பூர் வந்தவர் திரு.வை.திருநாவுக்கரசு. பின்னர் அரசாங்கப் பணியில் சேர்ந்த அவர் ஓய்வு பெற்றபின்னர் 1989 முதல் 1999 வரை தமிழ் முரசின் ஆசிரியராகப் பணியாற்றி, முரசை பல வகையிலும் மேம்படுத்தினார். ஆசிரியராகப் பணியேற்ற போது, லாவெண்டர் ஸ்திரீட்டில் இருந்த முரசு அலுவலகத்தில் திரு அரசு. 1989ல் எடுத்த படம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.
multi-img1 of 4

வரலாற்றைப் படைப்பவர்கள் மனிதர்கள். அவர்களது செயல்களே வரலாகிறது.

தமிழ் முரசின் 90 ஆண்டு கால வரலாற்றைப் படைத்தவர்களில் முதன்மையானவர் தமிழவேள் என்று கொண்டாடப்படும் கோ.சாரங்கபாணி. மற்றவர் கோ.சாவின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவராக, அவரது வலதுகரமாகத் திகழ்ந்த திரு வை.திருநாவுக்கரசு.

1974ல் இயற்கை எய்தும் வரையில் கிட்டத்தட்ட 40 ஆண்டு காலம் முரசை கோ. சாரங்கபாணி ஓர் இயக்கமாக நடத்தினார்.

அவருக்குப் பின்னர் காப்பாரும் வளர்ப்பாரும் இன்றி திசை தெரியாது தடுமாறி, கிட்டத்தட்ட மூடும் நிலையிலிருந்த தமிழ் முரசைத் தூக்கி நிறுத்தியவர் அரசு என அழைக்கப்படும் வை.திருநாவுக்கரசு.

தமிழ் முரசுக்காகவே சிங்கப்பூருக்கு வந்து, முரசைக் கணினி மயமாக்கி, லாபகரமாக்கி, சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்சிடம் (எஸ்பிஎச்) ஒப்படைத்து அதன் எதிர்காலத்தை உறுதிசெய்தார்.

காலத்துக்குத் தேவையான சீர்திருத்தக் கருத்துகளை கொண்டிருந்த திரு அரசு, 20 வயதில் பூந்தோட்டம் என்ற பத்திரிகையை நடத்தியது, பிறகு சி.பா.ஆதித்தனாரின் தினத்தாள், தினத்தூது, பெரியாரின் விடுதலை ஆகிய நாளிதழ்களில் பணியாற்றிய அனுபவத்துடன், தமிழ் முரசில் துணையாசிரியராகப் பணிபுரிய 1951ஆம் ஆண்டு 26 வயதில் தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்தார். அப்போது, காலைப் பத்திரிகையான இந்தியன் டெய்லி மெயிலையும் மாலைப் பத்திரிகையான தமிழ் முரசை 71 சிலிகி ரோடிலிருந்த அலுவலத்தில் இருந்து கோ.சாரங்கபாணி நடத்திக்கொண்டிருந்தார். முரசுக்கும் இந்தியன் டெய்லி மெயிலுக்கும் கடுமையாக உழைத்தார் திரு அரசு.

தமிழ் முரசின் சக துணையாசிரியர்களுடன் இளையராக இருந்த திரு அரசு.
தமிழ் முரசின் சக துணையாசிரியர்களுடன் இளையராக இருந்த திரு அரசு. - கோப்புப் படம்

முரசில் பணியாற்றிய எட்டு ஆண்டுக் காலத்தில் அவர் சாதித்தவை பல. மாணவர்களுக்காக மாணவர் மணி மன்றம், வாசகர்களுக்காக சங்கப் பலகை என்னும் பகுதிகளுக்குப் பொறுப்பேற்றிருந்தார். அவர் தலைமையில் 1952-இல் தொடங்கப்பட்ட முரசு எழுத்தாளர் பேரவை சிங்கப்பூர் எழுத்தாளர் வளர்ச்சிக்கு உதவியது. செய்தி, கட்டுரைகளுடன் வய்தி, தும்பி முதலிய பெயர்களில் சமூக விவகாரங்கள் குறித்த பல விஷயங்களை எழுதினார்.

தமிழவேள் கோ.சாரங்கபாணியுடன் திரு அரசு.
தமிழவேள் கோ.சாரங்கபாணியுடன் திரு அரசு. - கோப்புப் படம்

ஆசிரியர் கோ. சாரங்கபாணியும் அவரும் உடனிருந்த காலத்தில் தமிழ் முரசு பெரும் வளர்ச்சி கண்டு மலாயா - சிங்கப்பூரில் முதன்மைச் செய்தி இதழானது.

சாரங்கபாணியின் சமுதாயப் பணிக்கு 1950களிலும் 1960களிலும் பேருதவி செய்தவர்களில் அரசு முக்கியமானவர். தமிழர் பிரதிநிதித்துவ சபை அமைக்கப்பட்டது, தமிழர் திருநாள் உருவானது, தமிழ்ப்பள்ளிகள் ஒருங்கமைக்கப்பட்டது முதலிய முக்கிய முன்னெடுப்புகளில் அரசு முன்னிலை வகித்துள்ளார்.

அரசாங்க வெளியீடுகளின் ஆசிரியர்

தமிழ் முரசிலிருந்து விலகி, 1958ல் அன்றைய கலாசார அமைச்சில் பணியைத் தொடங்கிய அரசு, அங்கு பல முக்கியப் பொறுப்புகளை வகித்தார். கண்ணோட்டம், ஆங்கிலத்தில் வெளிவந்த மிரர் (Mirror) ஆகிய நடப்பு விவகார ஏடுகளுக்கு ஆசிரியராக இருந்தார். தமிழ் வெளியீடுகளிலும் அவருடைய பணி முக்கியமாக இருந்தது. அமைச்சின் ஊடகத் தொடர்புப் பிரிவின் தலைவராகவும், அவ்வப்போது பிரதமரின் செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டார்.

கலாசார அமைச்சின் ஏனைய வெளியீடுகளான சிங்கப்பூர் புலட்டின் (Singapore Bulletin), சிங்கப்பூர் இயர் புக் (Singapore Year Book), சிங்கப்பூர் ஸ்ட்ரீட் டைரெக்டரி (Singapore Street Directory) ஆகிய வெளியீடுகளுக்கும் அவர் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். அதிக பிரதிகள் விற்பனையான சிங்கப்பூர்: ஆன் இல்லஸ்ட்ரேட்டட் ஹிஸ்டரி – 1941-1984 (Singapore: An Illustrated History -- 1941-1984) வரலாற்று நூலின் இணையாசிரியராகவும் ஆசியான் இலக்கிய வரிசையில் 1985-இல் வெளிவந்த த பொயட்ரி ஆஃப் சிங்கப்பூர் (The Poetry of Singapore) நூலின் தொகுப்பாசிரியர்களில் ஒருவராகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கியுள்ளார்.

முரசுக்கும் அரசுக்கும் புதிய தொடக்கம்

1988ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழ் முரசு ஆசிரியர் பொறுப்பை ஏற்ற திரு வை.திருநாவுக்கரசு, லாவெண்டர் ஸ்திரீட்டில் இருந்த தமிழ் முரசின் சொந்தக் கட்டடத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியின் போது.
1988ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழ் முரசு ஆசிரியர் பொறுப்பை ஏற்ற திரு வை.திருநாவுக்கரசு, லாவெண்டர் ஸ்திரீட்டில் இருந்த தமிழ் முரசின் சொந்தக் கட்டடத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியின் போது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் 1988 டிசம்பர் 27ஆம் தேதி, தமது 62வது வயதில் தமிழ் முரசு ஆசிரியராகப் பொறுப்பேற்றார் திரு அரசு. முரசுக்கும் அரசுக்கும் அது புதிய தொடக்கம்.

தமிழ் முரசின் ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்த கோ.சாவின் மகன் ஜெயராம் பத்திரிகையைக் கைதூக்கி விடுமாறு பலமுறை கோரியுள்ளார். முதலில் திரு அரசு அதற்கு இணங்கவில்லை. “நீங்கள் வரவில்லையென்றால் முரசை இழுத்து மூடுவதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு” என்று அமரர் திரு ஜெயராம் மீண்டும் அபயக் குரல் எழுப்பினார். அப்போது தமிழ் முரசுக்கு விரைந்து வந்து கைகொடுத்தார் திரு அரசு.

ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலையில் இருந்த தமிழ் முரசை, தானும் ஊதியம் பெறாமலேயே கொஞ்சம் கொஞ்சமாகக் கணினி மயமாக்கினார்.

முரசின் தோற்றம் மாறியது. விநியோகம் முறைப்படுத்தப்பட்டது. ஐந்தே ஆண்டுகளில் நிறுவனத்தை லாபகரமாக்கினார். ஊழியர்க்கு ஊதியத்துடன் முதன்முதலாக போனஸையும் வழங்கினார்.

கணினியில் அச்சேற்றப்பட்ட தமிழ் முரசுடன் திரு அரசு. கம்போங் அம்பாட்டில் இருந்த அலுவலகத்தில்.
கணினியில் அச்சேற்றப்பட்ட தமிழ் முரசுடன் திரு அரசு. கம்போங் அம்பாட்டில் இருந்த அலுவலகத்தில். - கோப்புப் படம்

முரசை அழுத்தமான ஒரு சமுதாயப் பத்திரிகையாகப் பிரதிபலிக்கும் வகையில் மாற்றங்களைச் செய்தார் அரசு.

பல முயற்சிகளுக்குப் பின்னர் எஸ்பிஎச் நிறுவனம் முரசை வாங்க முன்வந்தது. அரசு ஆசிரியராகப் பொறுப்பேற்ற சரியாக ஏழு ஆண்டுகளில் அதே டிசம்பர் 27ஆம் தேதி 1995ஆம் ஆண்டு எஸ்பிஎச் நிறுவனத்திடம் தமிழ் முரசை விற்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஐந்து ஆண்டுகளில் எல்லாவற்றையும் முடித்துவிட்டு வெளியேற வேண்டும் என்ற உறுதியில் முரசுக்கு வந்த அரசு 2000ல் தான் முரசைவிட்டு வெளியே வர முடிந்தது.

நல்ல தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தியவர்

தமிழ் முரசு நாளிதழிலும் கலாசார அமைச்சிலும் பணிபுரிந்தபோது அரசாங்கச் செய்திகளிலும் அறிக்கைகளிலும் நல்ல தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தியவர் அவர். சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம், தமிழ்ப் பத்திரிகைத் துறைகள் குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரைகள் முக்கியமானவை.

முன்னாள் தொழிற்சங்கத்தலைவர் தேவன் நாயர் உருவாக்கிய தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத்தில் 1984ல் தலைமையேற்ற அரசு, திருக்குறள் விழா ஆண்டுதோறும் நாட்டின் இலக்கிய, குடும்ப நிகழ்ச்சியாக நடைபெற வழிவகுத்தார். “உங்கள் பிள்ளையால் முடியும்” என்னும் நாடளாவிய கல்வி ஊக்குவிப்பு இயக்கம், நாடாளுமன்ற குழுத்தொகுதி தேர்தல் திட்டத்தில் இந்தியருக்கு இடமளிப்பது பற்றி பொறுக்குக் குழு முன் வாதாடி ஏற்கச் செய்த முயற்சி ஆகியவை கழகத்தின் வழி அவர் செய்த பிற சாதனைகள்.

சிங்கப்பூர்த் தாய்மொழிகளின் புழக்கத்தைப் பரப்ப மொழிவாரியான அமைப்புகளை அரசாங்கம் நிறுவியபோது, வளர் தமிழ் இயக்கம் எனும் அமைப்பிற்கு அரசு தலைவராக நியமிக்கப் பட்டார். அவர் இருந்த காலகட்டத்தில் அமைப்பு தெளிவான நோக்கத்தோடு செயற்பட்டு தமிழ்ச் சமூகத்திற்குப் பயனளித்தது. மேலும் அனைத்துத் தமிழ் ஆய்வுச் சங்கத்தின் தலைமைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.

அரசுவின் பிற பொதுச்சேவைகளுள், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) அறங்காவலர் குழு உறுப்பினராகவும் (1991 - 2000) இந்து ஆலோசனை மன்ற உறுப்பினராகவும் (1974 – 1976) ஆற்றிய பணிகள் அடங்கும். இந்து ஆலோசனை மன்றத்தின் தலைவராக, இந்துக்களின் உடல்களை மின் எரியூட்டும் முறையை முன்வைத்து அதை இந்து சமூகம் ஏற்றுக்கொள்ளும் படி செய்தார், கோயில்களை இணைப்பதிலும் இடிப்பதிலும் ஒழுங்குமுறையைக் கொண்டுவந்தார். இந்து அறக்கட்டளை வாரிய உறுப்பினராக ஆலயங்களில் செயல்பாடுகளை முறைப்படுத்தினார்.

தேசிய நிலையில் பங்களித்தவர்

தேசிய நினைவுச்சின்ன பாதுகாப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் (1975-1992), 13 ஆண்டுகள் அதன் ஆய்வு, தகவல் பரப்புக் குழுவின் தலைவராகவும், தேசிய ஆவணக் காப்பக வாய்மொழி வரலாற்றுக் கழகத்தின் உறுப்பினராகவும், நாடளாவிய கலை, இலக்கிய, சமூகக் குழுக்கள் பலவற்றில் உறுப்பினராகவும் சேவையாற்றியுள்ளார்.

சிங்கப்பூர் அரசாங்கம் அவருடைய சேவைகளைப் பாராட்டி, 1985-இல் செயல்திறன் பதக்கத்தையும் 1999-இல் பொதுச் சேவை பதக்கத்தையும் வழங்கியது.

மண்ணீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட திரு அரசு, 2005ல் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் அவரது செயல்பாடுகள் மெல்ல மெல்ல குறையத் தொடங்கின. சளிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட அவர் 5.11.2008ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

நெடிய தோற்றம், நிமிர்ந்த நடை, சுடர்விடும் கண்களைக் கொண்ட திரு வை.திருநாவுக்கரசைப் பார்த்தாலே மதிப்பும் மரியாதையும் ஏற்படும்.

முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன், நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ, முன்னாள் அமைச்சர்கள் பேராசிரியர் எஸ்.ஜயக்குமார், தனபாலன், மலேசிய அமைச்சர் வி.தி.சம்பந்தன், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன், நெடுஞ்செழியன் உள்பட சிங்கப்பூர், மலேசியா, தமிழக அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்கள், எளிய மக்கள் என அனைத்துத் தரப்பினருடனும் பழகியவர் திரு அரசு.

அவரது இறுதி அஞ்சலியின்போது அமைச்சர்கள், சமூகத் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழ் மொழிக்கும் வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய தொண்டை நினைவுகூர்ந்தனர்.

வாழ்வாங்கு வாழ்ந்தவர்களை நினைவுகூர்ந்து போற்றுவது வரலாற்றை நிலைபெறச் செய்யும், எதிர்காலத்தைக் கணித்து செயல்பட கைகொடுக்கும்.

த.ராஜசேகர், தமிழ் முரசு ஆசிரியர்
த.ராஜசேகர், தமிழ் முரசு ஆசிரியர் - படம்: தமிழ் முரசு

தமிழுக்கும் இந்திய சமூகத்திற்கும் அரும்பணியாற்றியவர்

திரு த.ராஜசேகர், 63 தமிழ் முரசு ஆசிரியர்

நான் மாணவனாக இருந்தபோது, திரு அரசு எங்களுடன் கலந்துரையாடத் தயங்கியதே இல்லை. அவருடைய தமிழ்மொழி ஆளுமையும், தெளிவான சிந்தனையும் என்னை ஈர்த்தது. அவரின் குரலும் தோற்றமும் இன்னும் என் கண்களில் நிற்கின்றன. தமிழுக்காகவும் இந்தியர்களுக்காகவும் அவர் அரும்பணியாற்றியிருப்பது அனைவரும் அறிய வேண்டிய உண்மை.

திருவாட்டி ராஜம் சாரங்கபாணி
திருவாட்டி ராஜம் சாரங்கபாணி - படம்: தமிழ் முரசு

தமிழவேளின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவர்

திருவாட்டி ராஜம் சாரங்கபாணி, 85

என் தந்தை தமிழவேள் கோ.சாரங்கபாணிக்கு திரு வை.திருநாவுக்கரசை மிகவும் பிடிக்கும். அவரை தம் மகனாகவே பார்த்தார். தந்தையின் மறைவுக்குப் பின்னர் என் தாயார் லிம் பூன் நியோ பின்னர் தமிழ் முரசு குறித்து அரசிடம்தான் பேசுவார். பத்திரிகை வாங்க பலர் என் தாயாரை அணுகினர். அவர் யாரிடமும் பத்திரிகையை ஒப்படைக்க விரும்பவில்லை.  என் தந்தை உருவாக்கிய தமிழ் முரசு நிலைத்திருக்க வேண்டும் என்பதே அவரது ஒரே கனவு. இறப்பதற்கு சில நாள்களுக்கு முன்னர் திரு அரசுவை அழைத்துப் பேசிய அவர், தமிழ் முரசை எஸ்பிஎச் நிறுவனத்திடம் விற்க முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். என் தந்தை தொடங்கிய தமிழ் முரசு இன்று, பல வகையிலும் முன்னேற்றம் கண்டு 90வது ஆண்டைக் கொண்டாட திரு அரசு இட்ட வித்து காரணம். 

திரு எஸ்.சந்திரதாஸ்
திரு எஸ்.சந்திரதாஸ் - படம்: சந்திரதாஸ்

சமூகத்துக்காக அயராது உழைத்தவர்

திரு எஸ்.சந்திரதாஸ், 86 சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதர் தமிழ் முரசின் முன்னாள் இயக்குநர் சபைத் தலைவர்

கலாசார அமைச்சில் பணியாற்றிய காலத்திலிருந்தே திருநாவுக்கரசை எனக்கு நன்கு தெரியும். அவர் தனது ஓய்விற்குப் பிறகு தமிழ் முரசில் இணைந்தார். நாளிதழுக்கான ஊழியர் பற்றாக்குறை ஏற்படும்போதும் தமிழ் முரசு நெருக்கடியைச் சந்தித்த காலங்களிலும் பலமுறை அவர் என்னை அணுகியுள்ளார். தமிழ் முரசு தொடர்ந்து தமிழ் சமூகத்திற்குப் பணியாற்ற வேண்டும் என்பதில் அவர் மிகுந்த உறுதியுடன் இருந்தார். அதற்காக அவர் அயராது உழைத்தார். 

திரு எம்.நடராசன்
திரு எம்.நடராசன் - படம்: தமிழ் முரசு

போற்ற வேண்டிய தலைவர்

திரு எம்.நடராசன், 86 தமிழ் முரசில் 66 ஆண்டுகளாகப் பணிபுரிபவர்

தமிழவேள் கோ.சாரங்கபாணிக்குப் பின்னர் தமிழ் முரசை நிலைநிறுத்தியவர். 1950களில் தமிழவேள் பட்டை தீட்டி வளர்த்த பல துணையாசிரியர்களில் தலைசிறந்தவர். இந்நாட்டில் நல்ல தமிழ் சிறக்க பல பணிகளைச் செய்தவர். கலாசார அமைச்சில் இருந்தபோது, அரசுத் துறைகளில் ஏராளமான தமிழ் மொழியாக்கங்களைச் செய்தவர். காலம்தோறும் சிங்கப்பூர்த் தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து போற்ற வேண்டிய சமூகத் தலைவர்.

திரு அருண் மகிழ்நன்
திரு அருண் மகிழ்நன் - படம்: தமிழ் முரசு

வலுவான வழிகாட்டி

திரு அருண் மகிழ்நன், 80 சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாகி 

எங்கள் குடும்ப நண்பரான திரு அரசைப் பல ஆண்டுகளாக அறிவேன். பணி சார்ந்த தொடர்பும் தனிப்பட்ட உறவும் எங்களிடையே இருந்தன. 

அரசு ஓர் அருமையான எடிட்டர். தமிழ்மொழியை நன்கு பேசவும் எழுதவும் தெரிந்த தமிழறஞர். பத்திரிகைத் துறையிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். அந்த தேர்ச்சிக்கு உரமிட்டவர்கள் தமிழ் முரசு நிறுவனர் கோ. சாரங்கபாணி, தமிழ் நாட்டில் “பொன்னி” இதழை நடத்தி, தமிழ் முரசில் சாரங்கபாணிக்கு அடுத்த நிலையில் இருந்த முருகு சுப்பிரமணியன் (பின்னாளில் மலேசியத் “தமிழ் நேசன்” ஆசிரியராக ஆனவர்), இலக்கணப் புலி என்று பெயர் பெற்றிருந்த மெ.சிதம்பரம் எனப் பலர். அவர்களின் சாணை தீட்டுதலினால் அரசுவின் ஆசிரியருக்கான திறமைகள் கூர்மை பெற்றன. அரசுவிற்குத் தமிழ் புலமையோடு ஆங்கில அறிவும் மிகுந்து இருந்தது. எனவேதான், அரசாங்கத்தில், The Mirror, Singapore Year Book என ஆங்கில மொழிப் பதிப்புகளுக்கு ஆசிரியராகவும் பணியாற்றினார். நான் சிங்கப்பூர் வானொலியில் நடத்திய நிகழ்ச்சிகளில் ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்து தன் வெண்கலக் குரலில் வாசித்தவர் அவர். 

தமிழ்ச் சமூகத்தைச் சரியாகப் புரிந்து வைத்திருந்த அரசு, பல சமூக அமைப்புகளுக்கு வலுவான வழிகாட்டியாக இருந்துள்ளார். தமிழ் அமைச்சர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அரசாங்கத்திற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் பாலமாக விளங்கியவர். இத்தனை பெருமைகளுக்கும் உரிய அரசு, தன்னையொத்த அடுத்த தலைமுறைத் தலைவர்களையோ, எடிட்டர்களையோ உருவாக்காமல் போனது வருத்தத்திற்குரியது.

பேராசிரியர் முனைவர் அ வீரமணி
பேராசிரியர் முனைவர் அ வீரமணி - படம்: தமிழ் முரசு

நல்ல தமிழ் வளர்த்தவர்

பேராசிரியர் அ.வீரமணி, 77 சமூகத் தலைவர், கல்வியாளர்

சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் தமிழ்மொழி இடம்பெற அவர் முக்கிய பங்கு ஆற்றியுள்ளார். தமிழ் முரசு,  கலாசார அமைச்சு (கண்ணாடி-Mirror),  ஓய்வு பெற்ற பின்னர் மீண்டும் தமிழ் முரசு ஆகிய அமைப்புகளில் செயல்பட்டு தமிழுக்கென சிறந்த பங்காற்றியுள்ளார். அவர் காலத்தில் அறிமுகமாகிய நல்ல தமிழ் சிங்கப்பூரில் இன்றும் நிலைத்திருக்கிறது. அவரின் ஆழ்ந்த ஈடுபாட்டால் இன்று தமிழ் முரசு நவீன நாளிதழாகத் தொடர்ந்து வெளிவருகிறது.

மூத்த எழுத்தாளர் இராம கண்ணபிரான்
மூத்த எழுத்தாளர் இராம கண்ணபிரான் - படம்: தமிழ் முரசு

உள்ளூர் இலக்கியம் மேம்பட பங்காற்றியவர்

திரு இராம.கண்ணபிரான், 82 மூத்த எழுத்தாளர்

தமிழ் முரசில் 1950களில் வை.திருநாவுக்கரசு உருவாக்கிய எழுத்தாளர் பேரவை,  இந்நாட்டு இலக்கியத்தை வளர்ப்பதற்கும் சிங்கப்பூர் - மலேசிய எழுத்தாளர்களை இணைப்பதற்கும் வழிவகுத்தது. அவர் தொடங்கிய புதுமைப்பித்தன் சர்ச்சை, சிங்கப்பூரில் விமர்சனத் துறைக்கு வித்திட்டது. எழுத்தாளர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்தவர் அவர். தமிழ் முரசில் இருந்தபோதும் அரசாங்க அமைப்புகளில் இருந்தபோதும் உள்ளூர் எழுத்தாளர்களை மலர வைப்பதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டார். எழுத்தாளர்களுக்கு தேசிய அங்கீகாரமும் விருதுகளும் மதிப்பும் பெற்றுத்தந்தவர். நூல்களுக்கு மதிப்புரை, அணிந்துரை வழங்கி உள்ளூர் இலக்கியத்தை ஊக்குவித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் அருண் செங்குட்டுவன்.
மூத்த பத்திரிகையாளர் அருண் செங்குட்டுவன். - படம்: அருண் செங்குட்டுவன்

இருமொழி ஆற்றல் கொண்ட சிறந்த பத்திரிகையாளர்

திரு அருண் செங்குட்டுவன், 82 மூத்த பத்திரிகையாளர்

திரு வை. திருநாவுக்கரசு தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் மிக்க எழுத்தாளர், ஆசிரியர் (editor). தன் மகனுக்கு மணிவாசகம் என்று பெயர் வைத்திருந்தாராயினும் திரு அரசு எந்தக் சைவக் கடவுளர்மீதும் நம்பிக்கை இல்லாதவர். நான் அறிந்தவரை அவர் நம்பிய, போற்றிய ஒரே கடவுள் லீ குவான் யூதான். எனக்கு அரசு அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தபோது, அவர் அப்போதைய கலாசார அமைச்சு நடத்திக்கொண்டிருந்த மிரர் (Mirror) பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அப்போது மலேசியாவிலிருந்து  சிங்கப்பூர் பிரிந்துவிட்டாலும் திரு லீ, மலேசிய அரசியலில் செல்வாக்காக இருக்க விரும்பினார். தேவன் நாயரை கோலாலம்பூரில் தங்க வைத்து மலேசிய அரசியலில் முக்கிய பங்காற்றிக்கொண்டிருந்தார். திரு லீயின் பிரசார பீரங்கியான எஸ் ராஜரத்தினம் மிரரில் வர வேண்டிய செய்திகளை திரு அரசுக்கு அனுப்பி வைப்பார். திரு அரசு வேறு சில தகவல்களையும் சேர்த்து அவற்றை வெளியிடுவார். திரு  ராஜரத்தினம்,  திரு அரசு இருவரையும் தவிர சிங்கப்பூரிலோ, மலேசியாவிலோ வேறு யாரும் அவ்வளவு சுவாரஸ்யமான பத்திரிகையை நடத்தியிருக்க முடியாது. 

கவிஞர் க.து.மு.இக்பால்
கவிஞர் க.து.மு.இக்பால் - தமிழ் முரசு

இலக்கியம் வளர்த்தவர்

திரு க.து.மு.இக்பால், 85, மூத்த கவிஞர்

திரு அரசு மிக நல்ல மனிதர், என் நண்பர். தமிழ் முரசு ஆசிரியர் பொறுப்பை ஏற்றதும் தமிழ் முரசின் இலக்கியப் பக்கங்களையும் மேம்படுத்தினார். என்னை அழைத்து கவிதைப் பக்கத்துக்கு கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தரச்சொன்னார். கவிதைப் போட்டியுடன் கவிதை குறித்த கட்டுரைகளும் அதிகம் வந்தன.

மு.ஹரிகிருஷ்ணன்
மு.ஹரிகிருஷ்ணன் - படம்: தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்

சமூக மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுத்தவர்

திரு மு.ஹரிகிருஷ்ணன், 77 தமிழ்மொழி பண்பாட்டுக்கழகத் தலைவர்

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவராக தமிழர்களின் கல்வி, மொழி, சமூக முன்னேற்றத்திற்கான பல முயற்சிகளை முன்னெடுத்தவர் திரு.வை.திருநாவுக்கரசு. தமிழ்மொழி பண்பாட்டுக்கழக நிகழ்வாக திருக்குறள் விழாவை ஒருங்கிணைத்தார். குழுத்தொகுதி அறிமுகம் குறித்த விவாதத்தில் இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்து, பண்பாட்டுக் கழகத் தலைவராக இந்தியர் எனும் பெயர் இடம்பெற வேண்டும் என்பதைப் பரிந்துரைத்தவர். 

தமிழாசிரியர் சி.சாமிக்கண்ணு
தமிழாசிரியர் சி.சாமிக்கண்ணு - படம்: தமிழ் முரசு

விளம்பரம் வேண்டா செயல்வீரர்

திரு சி.சாமிக்கண்ணு, 77 தமிழாசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர்

சிங்கப்பூர்த் தமிழின் வளர்ச்சியையும் தொடர்ச்சியையும் விளம்பரம் இல்லாமல், அழுத்தமாக நிலைபெறச் செய்த பெருமைக்குரியவர் திரு வை திருநாவுக்கரசு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. உலக அரங்கினில் தமிழ், மலேசிய சிங்கப்பூர் இலக்கியக் கருத்தரங்கு ஆகிய நிகழ்வுகள் இவரின் தலைமையில் தேசிய நிலையில் நடைபெற்றன.

நிதானம், பொறுமை, அவசரப்பட்டுப் பேசாமல் சிந்தித்துப் பேசுவது, தொலைநோக்கோடு எதையும் ஆழ்ந்து நோக்குவது என்பன அவரிடம் காணப்பட்ட பண்புகளாகும். 

திரு நசீர் கனி
திரு நசீர் கனி - படம்: தமிழ் முரசு

முன்னோடி வழிகாட்டி

திரு நசீர் கனி, 67 வளர்தமிழ் இயக்கத் தலைவர்

திரு வை.திருநாவுக்கரசு அனுபவமும் ஆற்றலும் மிக்க சமூகத் தலைவராக விளங்கியவர் சமூகத்துடன் இணைந்து காரியங்களைச் சாதிப்பதில் கைதேர்ந்தவர்; அரசாங்கத்துடன் மோதி நிற்பதைவிட, தெளிவாக எடுத்துக்கூறி சமூகத்துக்கு வேண்டியதைப் பெறும் திறன் பெற்றவர். 1999-ஆம் ஆண்டு வளர்தமிழ் இயக்கம் உருவாக முக்கியக் காரணமாக இருந்த வை திருநாவுக்கரசு அதன் முதல் தலைவராகவும் பணியாற்றினார். அமைப்புக்கான சின்னத்தை உருவாக்கியது தொடங்கி, நிதி திரட்டுவது, முன்னோடித் திட்டங்களை உருவாக்குவது, அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுவது, எல்லாவற்றுக்கும் மேலாக சமூகத் தலைவர்களை ஒன்றுபடுத்திச் செயல்படுவதில் குழுவினருக்கு வழிகாட்டியவர். மற்றவர் மனம் கோணாமல் அமைதியாகப் பேசும் அவர் அனைவருக்கும் இனிய நண்பராக இருந்தார்.

திரு வை.பழநிவேலு
திரு வை.பழநிவேலு - படம்: தமிழ் முரசு

தமிழ்ச் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தியவர்

திரு வை.பழநிவேலு, 73 தமிழ் மொழி பண்பாட்டுக் கழக முன்னாள் செயலாளர்

சிங்கப்பூர்த் தமிழ் சமூகத்தின் சிந்தனைத் தளம் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட காலப் பகுதி அது. 1980கள் முழுதையும் உள்ளடக்கிய ஆண்டுகள். தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம் திரு தேவன் நாயர் அவர்களின் முன்னெடுப்பில் வடிவமைக்கப்படுவது தொடங்கி பத்தாண்டுகளுக்கு மேலாக திரு அரசு அவர்களோடு அணுக்கமாகப் பணியாற்றும் நற்பேறு பெற்றேன். பள்ளிப் பருவத்து அறிமுகம் முதல் அன்னாரின் இறுதிக் காலம் வரையிலான ஆழ்ந்து விரிந்த கருத்தாடல்களையும், அவரின் குடும்பத்தாருடனான உறவாடல்களையும் நெகிழ்ச்சியோடு இன்றும் நினைவுகூர்கிறேன்.

குறிப்புச் சொற்கள்