முயிஸ், என்எச்ஜி ஹெல்த் குழுமம் புரிந்துணர்வுக் குறிப்பு: மூத்தோர்க்குக் கூடுதல் ஆதரவு

முயிஸ், என்எச்ஜி ஹெல்த் குழுமம் புரிந்துணர்வுக் குறிப்பு: மூத்தோர்க்குக் கூடுதல் ஆதரவு

படம்: சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம்

31 Oct 2026 - 6:49 pm

2 mins read

பள்ளிவாசலை அடிப்படையாகக் கொண்ட ‘சந்துனான் இமாஸ்’ எனும் முன்னெடுப்பு, விரிவுபடுத்தப்பட்ட சமூகப் பங்காளித்துவம், சுகாதாரக் கூட்டுறவுகள் மூலம் முதியோருக்கும் பராமரிப்பாளர்களுக்குமான ஆதரவை வலுப்படுத்தி வருகிறது.

வழக்கமான வாராந்தரத் திட்டங்களின் தொடர்ச்சியாக, இந்நடவடிக்கை சிங்கப்பூரின் வடபகுதி முழுவதும் விரிவாக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுறுசுறுப்பான முதுமைக்காலம், முழுமையான நல்வாழ்வு முதலியவற்றை மேம்படுத்துவதற்காகப் பள்ளிவாசல்கள், சுகாதாரச் சேவை வழங்குநர்கள், சமூகப் பங்காளிகளை இது ஒன்றிணைக்கிறது.

பள்ளிவாசல் அதிகாரிகளையும் தொண்டூழியர்களையும் சமூகச் ‘சுகாதாரத் தூதர்களாக’ உருவாக்குவதற்கான திட்டங்களும் எதிர்கால வளர்ச்சிப் பணிகளில் அடங்கும்; இது முதியோர் தங்களுக்குத் தேவையான சுகாதாரத் தகவல்களையும் பொருத்தமான ஆதரவுச் சேவைகளையும் பெற உதவும்.

பள்ளிவாசல் சார்ந்த திட்டம் மூலம் ஆதரவை விரிவுபடுத்துதல்

சந்துனான் இமாஸ் திட்டம் முதியோரின் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிப்பதற்காகச் சமயக் கல்வி, சுகாதார விழிப்புணர்வு, சமூக ஈடுபாடு ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது. தேசிய தினப் பேரணி 2026ல் பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டது போல, இத்திட்டம் அல்-முத்தகீன் பள்ளிவாசலுக்கு அப்பால், சிங்கப்பூரின் வடபகுதியில் உள்ள மேலும் நான்கு பள்ளிவாசல்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.

மஸ்ஜித் அன்-நூர், மஸ்ஜித் அஸ்ஸயாஃபா, மஸ்ஜித் தாருல் மக்மூர், மஸ்ஜித் யூசுப் இஷாக் ஆகியவையே அந்தப் பள்ளிவாசல்கள். அங்கிருக்கும் சமூகங்களில் உள்ள முதியோரின் தேவைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்.

என்எச்ஜி ஹெல்த் பங்காளித்துவம் மூலம் சுகாதார ஆதரவை வலுப்படுத்துதல்

சந்துனான் இமாஸ் திட்டத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியின் ஒரு பகுதியாக, மலாய்/முஸ்லிம் சமூகத்தில் உள்ள முதியோரின் முழுமையான நல்வாழ்வை ஆதரிப்பதன் தொடர்பிலான ஆதரவை வலுப்படுத்தும் நோக்கில் முயிசும் என்எச்ஜி ஹெல்த் குழுமமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அதில் முயிசின் துணைத் தலைமை நிர்வாகி ஃபைஸா அகமது பராசியும் என்எச்ஜி ஹெல்த்தின் துணைக் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் யூஜின் ஃபிடெலிஸ் சோவும் கையெழுத்திட்டனர்.

தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் கையெழுத்து நிகழ்வைப் பார்வையிட்டார்.

சிங்கப்பூரின் மத்திய வட்டாரத்திலும் வடபகுதியிலும் உள்ள மலாய்/முஸ்லிம் சமூகத்திற்கான தற்போதைய சுகாதார முயற்சிகளின் அடிப்படையில் இந்த ஒத்துழைப்பு கட்டமைக்கப்படுகிறது.

இதன் மூலம், கூடுதல் ஆதரவு தேவைப்படும் முதியோர்க்குச் சுகாதாரம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பராமரிப்பு ஒருங்கிணைப்பு, தகுந்த மருத்துவப் பரிந்துரைகள் முதலியவற்றை வலுப்படுத்த, இத்திட்டத்தில் பங்கேற்கும் பள்ளிவாசல்களுடன் இணைந்து முயிசும் என்எச்ஜி ஹெல்த் குழுமும் செயல்படும்.

குறிப்புச் சொற்கள்