தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈசூனில் பல வாகன விபத்து; ஆடவர் கைது

1 mins read
32299f57-eee4-42fd-bc15-8da9f16d3ad4
ஈசூன் அவென்யூ 2ல் நான்கு கார்களும் ஒரு லாரியும் சம்பந்தப்பட்ட விபத்து நேர்ந்தது. - படம்: ஃபேஸ்புக் / சிங்கப்பூர் ஸ்டஃப்

ஈசூனில் பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தையடுத்து உரிமமின்றி வாகனமோட்டியதாகக் கூறி, 24 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கேன்பரா லிங்கை நோக்கிச் செல்லும் ஈசூன் அவென்யூ 2ல் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 23) நேர்ந்த நான்கு கார்களும் ஒரு லாரியும் சம்பந்தப்பட்ட விபத்து தொடர்பில் மாலை 6.35 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

விபத்தை அடுத்து, கார் ஓட்டுர்கள் இருவரும் பயணிகள் இருவரும் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.

இலேசாகக் காயமடைந்த இன்னொருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

விபத்து குறித்த காணொளி ‘கம்ப்ளைன்ட் சிங்கப்பூர்’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சிவப்பு நிற கார் ஒன்று மிகுந்த சேதமடைந்திருந்ததையும் குறைந்தது அதன் மூன்று கதவுகள் திறந்த நிலையில் இருந்ததையும் அக்காணொளி காட்டியது.

அத்துடன், காரின் முன்புறமும் மோசமாகச் சேதமடைந்ததுபோல் தெரிந்தது.

அதனைத் தொட்டபடி இருந்த கறுப்புநிற காரும் பெரிதும் சேதமடைந்திருந்தது. காரின் உடைந்த சில பாகங்கள் சாலையில் கிடந்ததைக் காண முடிந்தது.

விபத்து குறித்த காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்