முசாங் கிங் டுரியான் விலைச் சரிவு, விற்பனை அதிகரிப்பு

1 mins read
524b8a48-b105-4d14-8f59-deffaef9c291
முசாங் கிங் டுரியான்கள். - படம்: விக்கிபீடியா

முசாங் கிங் ரக டுரியானின் விலை வரலாறு காணாத அளவில் சரிந்திருப்பதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் அதன் விற்பனை பெரிய அளவில் சூடுபிடித்துள்ளது.

மலேசியாவில் முசாங் கிங் டுரியானின் அமோக விளைச்சலால் சிங்கப்பூரில் விற்பனை அதிகரித்துள்ளது.

தாங்கள் விற்கும் முசாங் கிங் டுரியான்களின் விலை பெரிய அளவில் குறைத்திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய டுரியான் விற்பனையாளர்கள் தெரிவித்தனர். கசப்பு, இனிப்பு இரண்டும் கலந்த சுவையைக் கொண்டிருப்பதால் மாவ் ‌ஷான் வாங் (Mao Shan Wang) என்றும் அழைக்கப்படும் முசாங் கிங் டுரியான்கள் உயர்தர டுரியான்களாகப் பார்க்கப்படுகின்றன.

‘டுரியான் எம்பயர்’ உரிமையாளர் ஸென் ஹோ, கடந்த நவம்பர் மாதத்திலிருந்து ஒரு கிலோகிராம் முசாங் கிங் டுரியான்களை எட்டிலிருந்து 18 வெள்ளிக்கு விற்று வருகிறார். முன்னதாக சராசரி விலை கிலோவுக்கு 15லிருந்து 24 வெள்ளியாக இருந்தது.

2018ஆம் ஆண்டுக்குப் பிறகு நான் இவ்வளவு குறைந்த விலையில் இந்த டுரியானை விற்கவில்லை என்றார் அவர்.

விற்பனைக்கு விடப்படும் முசாங் கிங் டுரியான்களின் எண்ணிக்கை மூன்று வாரங்களுக்கு முன்பே அதிகரிக்கத் தொடங்கியதாகக் கூறினார் ‘211 ஹவுஸ் ஆஃப் டுரியான்’ கடையின் உரிமையாளரான டெரிக் ஊய். விற்பனையாகும் முசாங் கிங் டுரியான்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகாலத்தில் இவ்வளவு அதிகரிக்கவில்லை என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்