தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மியன்மார் நிலநடுக்கம்: 80 பேர் குழுவை அனுப்பிய குடிமைத் தற்காப்புப் படை

2 mins read
551346e7-cad7-440b-a8f2-49062bdf99d1
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக் குழுவினரை வாழ்த்தி வழியனுப்பி வைத்த உள்துறை துணை அமைச்சர் ஃபை‌ஷல் இப்ராஹிம் (நடுவில்). - படம்: எஸ்பிஎச் மீடியா
multi-img1 of 2

நிலநடுக்கத்தால் சீர்குலைந்துபோயிருக்கும் மியன்மாரில் மீட்பு நடவடிக்கைகளில் கைகொடுத்து உதவ சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, 80 பேரைக் கொண்ட குழுவையும் தேடல், மீட்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்களையும் சனிக்கிழமை (மார்ச் 29) அனுப்பி வைத்தது.

‘ஆப்பரே‌ஷன் லயன்ஹார்ட்’ (Operation Lionheart) பிரிவினர் சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் மியன்மாருக்குப் புறப்பட்டனர். 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக அப்பிரிவு முழுவதும் பணியில் இறங்கியுள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

அப்பிரிவு, கடைசியாக 2023ஆம் ஆண்டு துருக்கியில் நிலநடுக்க நிவாரணப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டது.

வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 28) மியன்மாரை உலுக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் குறைந்தது 1,000 பேரைப் பலிவாங்கிவிட்டது; மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமுற்றனர். மரண எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தங்களுக்கு உதவுமாறு மியன்மார் ராணுவ அரசாங்கம் மற்ற நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அந்த வேண்டுகோளுக்கு ஏற்ப தாங்கள் உதவிக்கரம் நீட்டுவதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

மியன்மார் ராணுவ அரசாங்கம் அவ்வாறு வேண்டுகோள் விடுப்பது அரிதான ஒன்று.

‘ஆப்பரே‌ஷன் லயன்ஹார்ட்’ பிரிவுக்கு சனிக்கிழமை காலை படையின் உபி தலைமையகத்தில் திட்டம் குறித்து விவரிக்கப்பட்டது. பிறகு அக்குழுவினர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் மியன்மார் புறப்பட்டனர்.

அந்த விமானம், குறைவான நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மியன்மாரில் தனது குழு மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் 14 நாள்கள் வரை நீடிக்கக்கூடும் என்று ‘ஆப்பரே‌ஷன் லயன்ஹார்ட்’ தலைவர் டே ஸி வெய் சனிக்கிழமையன்று கூறினார். அந்நாட்டில் நிலவரத்தைப் பொறுத்து நடவடிக்கைகள் நீடிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தோரைத் தேடிக் கண்டுபிடித்துக் காப்பாற்றுவதே ‘ஆப்பரே‌ஷன் லயன்ஹார்ட்’ பிரிவின் குறிக்கோள். அதேவேளை, நிலைமைக்கு ஏற்றாற்போலும் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறும் அப்பிரிவின் நடவடிக்கைகள் மாறுபடலாம் என்று திரு டே தெரிவித்தார்.

மியன்மார் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு நன்றி தெரிவிக்கவும் குடும்பத்தாருடன் சேர்ந்து அவர்களை வழியனுப்பி வைக்கவும் உள்துறை துணை அமைச்சர் ஃபை‌ஷல் இப்ராஹிம் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தலைமையகத்துக்கு நேரில் சென்றிருந்தார்.

குறிப்புச் சொற்கள்