பெர்த்தில் ஒலித்த பேரிரைச்சல் சிங்கப்பூரின் பயிற்சி விமானத்தால் எழுந்திருக்கலாம்: தற்காப்பு அமைச்சு

1 mins read
3cca2b92-496c-4fda-bf14-8990e33ca676
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் எஃப்-15 வகை போர் விமானங்கள், ஆஸ்திரேலியாவில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. - படம்: தற்காப்பு அமைச்சு

ஆஸ்திரேலியாவின் மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் உள்ள பெர்த் நகரில் ஒலித்த பேரிரைச்சல், அப்பகுதியில் பயிற்சிகளில் ஈடுபடும் சிங்கப்பூரின் போர் விமானங்களால் எழுந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மர்மமான சத்தம் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 22) பதிலளித்தது. முதற்கட்ட கண்டுபிடிப்புகளில் அந்த விவரம் தெரிய வந்ததாக அமைச்சு குறிப்பிட்டது.

பெர்த்துக்கு வடக்கே உள்ள ராணுவப் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட கடற்கரைப் பகுதிக்கு சுமார் 70 கிலோ மீட்டருக்கு அப்பால் கிட்டத்தட்ட 24,000 அடி உயரத்தில் போர் விமானங்கள் பறந்துகொண்டிருந்தன.

“அந்த எஃப்-15 ரக விமானம் தொலைதூரத்தில் கடற்பகுதிக்கு மேல் பறந்துகொண்டிருந்ததால் அத்தகைய பெரிய சத்தம் எழும் என்பது எதிர்பார்க்கப்படவில்லை,” என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

இம்மாதம் 13ஆம் தேதி முதல், சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையைச் சேர்ந்த நான்கு எஃப்-15 ரக போர் விமானங்கள், ஆஸ்திரேலிய ஆகாயப் படையின் பியர்ஸ் தளத்தில் பயிற்சி செய்துகொண்டிருப்பதாகக் கூறியது. பயிற்சிகளை வரும் செப்டம்பர் மாதம் ஆறாம் தேதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

“பயிற்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தால் அதற்கு சிங்கப்பூர் ஆகாயப் படை மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறது,” என்றும் அமைச்சு சொன்னது.

பெர்த்தின் தெற்குப் பகுதிகளில் பெரிய சத்தம் உணரப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 21) தெரிவித்தன. அந்த சத்தம், சிங்கப்பூர் விமானங்களுடன் தொடர்புடையது என்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டன.

குறிப்புச் சொற்கள்