பலனடைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் பட்டியலில் சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதரின் பெயர்

பலனடைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் பட்டியலில் சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதரின் பெயர்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2026 - 12:23 pm

2 mins read

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அரசியல் செயல்பாடுகள், விருப்பத் திட்டங்கள், குடும்ப நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நிதியளித்ததன் மூலம் பலனடைந்ததாகக் கூறப்படுவோரின் பட்டியலில், சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதர் அஞ்சானி சின்ஹாவின் பெயரை அமெரிக்க நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

டிரம்ப் ஆதரவு அரசியல் செயற்குழு ஒன்றுக்குத் தூதர் சின்ஹா ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் ($1.28 மில்லியன்) நன்கொடை அளித்ததாக ‘சென்டர் ஃபார் அமெரிக்கன் புரோகிரஸ்’ (Center for American Progress) எனும் பொதுக் கொள்கை ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதோடு, 2025ஆம் ஆண்டு நடைபெற்ற செனட் விசாரணையின்போது திரு சின்ஹா அதனை வெளிப்படுத்தத் தவறிவிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.

அந்த அறிக்கை, வாஷிங்டன் டிசியில் தளம் கொண்டுள்ள கட்சி சார்பற்ற சட்ட அமைப்பான ‘கெம்பெய்ன் லீகல் சென்டர்’ (Campaign Legal Center) கண்டறிந்த தகவல்களை மேற்கோள் காட்டியது. சின்ஹா 2025 பிப்ரவரியில் ‘மாகா இன்க்’ (MAGA Inc) அமைப்பிற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியதாகவும் அதற்கு அடுத்த மாதமே சிங்கப்பூருக்கான தூதராக நியமிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

“இந்த நன்கொடையை வெளிப்படுத்த வேண்டிய சட்டபூர்வக் கடமை இருந்தபோதிலும் செனட் வெளியுறவுக் குழுவிடம் அதனைத் திரு சின்ஹா தெரிவிக்கத் தவறிவிட்டார்,” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

அந்த நன்கொடை சென்ற ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி வழங்கப்பட்டதாக மத்திய தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

இருப்பினும், செனட் விசாரணை தொடர்பாக வெளியிடப்பட்ட நாடாளுமன்ற ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அந்த ஒரு மில்லியன் டாலர் நன்கொடை பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், சின்ஹாவும் அவரது குடும்பத்தினரும் வழங்கிய மற்ற நன்கொடைகள் அதில் பட்டியலிடப்பட்டிருந்தன.

அந்த அறிக்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமாறு சிங்கப்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நவம்பர் 10ஆம் தேதி கேட்டிருந்தது. இது தொடர்பான கேள்விகளை வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க வெளியுறவுத் துறைக்குத் தூதரகம் அனுப்பி வைத்தது. ஆனால், அதற்கு வெளியுறவுத் துறை இன்னும் பதிலளிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்