சிங்கப்பூர் விஞ்ஞானிகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நற்செய்தியாக உடல் உறுப்புகள் துண்டிக்கப்படுவதிலிருந்து தவிர்ப்பதற்கான ஆய்வினை நடத்திவருகின்றனர்.
மருந்துகளுக்கு எதிரான வகையில் செயல்படும் நுண்ணுயிரிகளை (பாக்டீரியா) ஒடுக்குவதற்கான வழியை அவர்கள் கண்டறிந்து, நாட்பட்ட காயங்கள் குணமடையும் சாத்தியத்தை கண்டறிந்துள்ளனர்.
அனைத்து உயிரினங்களிலும் உள் சுரக்கும் ‘கட்டலேஸ்’ எனப்படும் நொதியைக் கொண்டு காயங்கள் குணமடைவதைத் தடுக்கும் நுண்ணுயிரிகளின் எதிர்ப்புத் தன்மையை குறைப்பதில் விஞ்ஞானிகள் வெற்றியடைந்துள்ளனர்.
அதன்பயனால் உயிரணுக்கள் மீண்டும் புத்துயிர்பெற்று, அவை மாற்றம் காண வழியுண்டு. காயங்கள் ஆறவும் வாய்ப்புண்டு.நொதிகள், உடலில் இயங்கும் ஒருவகை எதிர்ப்பொருள் என அறிவியல் ரீதியில் அழைக்கப்படுகின்றன.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (NTU) உயிரியல் அறிவியல் பிரிவின் இணைப் பேராசிரியர் கீயோம் டீபோ, ஜெனிவா பல்கலைக்கழகப் பேராசிரியர் கிம்பர்லி கிளைன் இருவரும் தலைமையேற்று இந்த ஆய்வை வழிநடத்தியுள்ளனர்.
அந்தஆராய்ச்சிக் குழு, கட்டலேஸ் நொதிப் பொருளைக் கொண்டு, தோலில் உள்ள உயிரணுக்களைச் சமநிலைப்படுத்தி, காயங்கள் ஆறுவதற்கு உதவும் தன்மையை ஆய்வுகளில் நிரூபித்துள்ளது.
நாட்பட்டக் காயங்களில் கிருமிகள் சூழ்ந்து அவை ஆறுவதற்கு எதிராக செயல்படுகின்றன. பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளின் பாதங்களில் இது நடக்கிறது. அதனால் கால் துண்டிக்கப்படவேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஆய்வின் முடிவுகள் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுச் சங்கம் வெளியிடும் அறிவியல் முன்னேற்றங்கள் என்ற சஞ்சிகையில் சனிக்கிழமை (ஜனவரி 17) வெளியிடப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2015ல் தோற்றுவிக்கப்பட்ட அந்தச் சங்கத்தின் அறிவியல் கருத்துகளை பல துறைகள் சார்ந்த அறிஞர்கள் மறுஆய்வு செய்கின்றனர்.
சிங்கப்பூரில் நீரிழிவு பெரும் சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதனால் 400,000 நோயாளிகள் அவதியுறுகின்றனர். வரும் 2050ஆம் ஆண்டுக்குள் இங்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் நீரிழிவால் பாதிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் உள்பட ஆண்டுதோறும் 16,000க்கும் மேற்பட்ட முதியோர் பாதங்களில் நாட்பட்டக் காயங்களுடன் இங்கு போராடுகின்றனர்.

