சிங்கப்பூரர்களின் சுகாதாரத்திலும் நல்வாழ்விலும் தான் கொண்டுள்ள கடப்பாட்டை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில், தேசியச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் ஜூலை 1ஆம் தேதி முதல் ‘என்எச்ஜி ஹெல்த்’ என அழைக்கப்படும் என்று அக்குழுமம் தெரிவித்துள்ளது
சுகாதாரப் பராமரிப்பு வழங்குவதில் நோயாளிகளை மையமாகக் கொண்ட, மக்கள்மீது கவனம் செலுத்தும் தனது ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் குறிப்பிடும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அக்குழுமம் விளக்கியது.
தேசியச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் கடந்த 2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
சிங்கப்பூரின் வடக்கு, மத்தியப் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வட்டாரச் சுகாதார மேலாளராகும் எனும் தனது இலக்கைப் புதிய பெயர் சிறப்பாக எடுத்துக்காட்டும் என்றும் அக்குழுமம் குறிப்பிட்டது.
டான் டோக் செங் மருத்துவமனை, கூ டெக் புவாட் மருத்துவமனை, உட்லண்ட்ஸ் ஹெல்த், ஈசூன் சமூக மருத்துவமனை, என்எச்ஜி பலதுறை மருந்தகம், மனநலக் கழகம், தேசிய தோல் சிகிச்சை நிலையம், தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் உள்ளிட்ட தேசிய சுகாதாரக் குழுமத்தின்கீழ் செயல்படும் அனைத்து சுகாதார நிறுவனங்களுக்கும் இப்பெயர் மாற்றம் பொருந்தும்.
பெயர் மாற்றத்திற்கேற்ப குழுமத்தின் சின்னமும் மாற்றப்படும்.


