சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில், அடுத்த ஈராண்டுகளில் தனது நுண்ணறிவு முன்களப் பொறியாளர்களின் (iFDE) எண்ணிக்கையை 100லிருந்து 300க்குமேல் அதிகரிக்க என்சிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான என்சிஎஸ், வியாழக்கிழமை (அக்டோபர் 29) தனது செயற்கை நுண்ணறிவுக் குறிக்கோள் நிலையத் திறப்பு நிகழ்ச்சியில் இதனைத் தெரிவித்தது.
பொது, தனியார் துறை நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களைச் சோதனை நிலையிலிருந்து நடைமுறைப் பயன்பாட்டுக்குக் கொண்டுசெல்ல இந்த நிலையம் உதவும்.
நுண்ணறிவு முன்களப் பொறியாளர்கள், வாடிக்கையாளர் நிறுவனங்களுடன் நேரடியாகப் பணியாற்றி, அவற்றின் தேவைகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை உருவாக்க உதவுவர்.
தற்போதுள்ள ஊழியர்களுக்குப் புதிய திறன்களில் பயிற்சி அளிப்பதோடு புதிய ஊழியர்களையும் பணியமர்த்தி இந்த எண்ணிக்கையை உயர்த்தத் திட்டமிடுவதாக என்சிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி சாம் லியூ தெரிவித்தார்.
“எங்களின் மிகப்பெரிய சொத்தான மனிதவளத்தில் முதலீடு செய்கிறோம். தொழில்நுட்பத்தில் ஏற்படும் முன்னேற்றங்களை அன்றாட வாழ்வில் பயனளிக்கும் மாற்றங்களாக அவர்கள் உருவாக்க முடியும். சிங்கப்பூருக்குப் பயனளிக்கும் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை வளர்ப்பதோடு, உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்வுகளை உருவாக்குவதும் எங்களின் இலக்கு,” என்றார் சாம் லியூ.
நிலையத்தின் திறப்பு நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கலந்துகொண்டார்.
செயற்கை நுண்ணறிவுக்கான திட்டங்களை உருவாக்குவது மட்டும் போதாது; அவற்றை நடைமுறையில் செயல்படுத்தி, பயனுள்ள மாற்றங்களை ஏற்படுத்துவதுதான் முக்கியம் என்றார் அவர்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பக் கட்டமைப்பு, திறனுள்ள ஊழியர்கள், நிறுவனங்களின் முயற்சிகள், அரசாங்கத்தின் ஆதரவு ஆகியவை முக்கியம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில், சாங்கி விமான நிலையக் குழுமம், மனநலக் கழகம், லைஃப்3 பயோடெக் ஆகிய மூன்று அமைப்புகளுடன் செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை உருவாக்கி, விரிவுபடுத்த என்சிஎஸ் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
சாங்கி விமான நிலையத்தின் ஓடுபாதையில் உள்ள வெளிப்பொருள்களைக் கண்டறியும் தற்போதைய செயற்கை நுண்ணறிவுக் கண்காணிப்பு முறையை மேம்படுத்துவதும் இதில் அடங்கும்.
மனநலக் கழகத்தில், நோயாளிகளைச் சரியாக அடையாளம் காண உதவும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த முக அடையாளத் தொழில்நுட்பம் சோதிக்கப்பட்டு வருகிறது. நான்கு பிரிவுகளில் 180 நோயாளிகளிடம் நடத்தப்பட்டுள்ள இந்தச் சோதனையை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவுத் திறனாளர்களை உருவாக்கும் முயற்சிகளிலும் என்சிஎஸ் கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊழியர்கள் அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக்கழகம் ஆகியவற்றிலிருந்து படிப்பை முடித்துவரும் திறனாளர்களுக்கு வேலைவாய்ப்புடன் இணைந்த கல்வித் திட்டங்களையும் நிறுவனம் வழங்கி வருகிறது.
“தொழில்நுட்பத்தின்மீது எனக்கு அதிக ஆர்வம் உண்டு. அன்றாடப் பணிகளில்கூட செயற்கை நுண்ணறிவு உதவி வருகிறது. இத்தொழில்நுட்பத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பதை இங்கு மேலும் கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறேன்,” என்றார் இந்நிறுவனத்தின் புதிய ஊழியரான 28 வயது ஜாஸ்லின் ஜே.
“முதலில் நான் தொழில்நுட்பம் சாராத பணியில் இருந்தேன். நிறுவனத்தின் திட்டங்கள் மூலம் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை உருவாக்கும் குழுவுக்கு மாறினேன்,” என்றார் என்சிஎஸ் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவரும் 31 வயது வோங் காங் மிங்.
