தாய்மொழிப் பாடங்களில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிகளில் உயர்தாய்மொழிப் பாடம் பயில்வதற்கு வழிவகை செய்யப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
தற்போது, உயர்நிலைப் பள்ளிகளில் உயர்தமிழ் பயில விரும்பும் மாணவர்கள் தொடக்கநிலை இறுதித் தேர்வில் (பிஎஸ்எல்இ) ஒட்டுமொத்தமாக குறிப்பிட்ட அடைவுநிலையைப் பெற்றிருக்க வேண்டும்.
ஆயினும், தமிழ்ப் பாடத்தில் சிறந்த அடைவுநிலையைப் பெற்றபோதும் ஒட்டுமொத்த அடைவுநிலை காரணமாக சில மாணவர்களுக்கு உயர்நிலைப் பள்ளியில் உயர்தமிழ் பயில்வதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை.
இந்நிலையில், அத்தகைய மாணவர்களும் தங்களது திறனை மேலும் வலுப்படுத்திக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமெனத் தான் கருதுவதாகப் பிரதமர் வோங் தமது தேசிய தினப் பேரணி உரையின்போது தெரிவித்தார்.
“தமிழில் சிறந்த தேர்ச்சி பெறும் அத்தகைய மாணவர்களும் உயர்நிலை ஒன்றில் உயர்தமிழ் பயில வாய்ப்பு கிடைக்கும் வகையில், கொள்கையில் சிறுமாற்றம் செய்வோம். இதன்மூலம், அதிகமான மாணவர்களைத் தமிழில் தேர்ச்சிமிக்கவர்களாக வளர்த்தெடுக்க முடியும் என்று நம்புகிறோம்,” என்று திரு வோங் கூறினார்.
இதனால், உயர்நிலை ஒன்றில் உயர்சீனம், உயர்மலாய்ப் பாடம் எடுத்துப் பயில விரும்பும் சீன, மலாய் மாணவர்களும் பயனடையலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்த விவரங்களைக் கல்வி அமைச்சு பின்னர் வெளியிடும்.
சிங்கப்பூருக்கு இருமொழிக் கொள்கை அவசியம் என்று ஆணித்தரமாகக் கூறிய திரு வோங், சிங்கப்பூரர்களின் இருமொழித்திறனை வளர்க்க அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிப்பதில் தான் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர்க் கலாசாரம் செழிக்க ஆதரவு
சிங்கப்பூரின் மரபார்ந்த கலாசாரத்தைப் பேணுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் வோங் தெரிவித்துள்ளார்.
“சிங்கப்பூரின் அலுவல்மொழியாக ஆங்கிலம் இருந்தாலும், அடிப்படையில் நாம் ஆசியச் சமூகத்தினர். அதனால், நமது ஆசிய மரபையும் நமது மரபார்ந்த விழுமியங்களையும் பேண விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
நமது இருமொழி, இருகலாசார நடைமுறையானது கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது என்றும் மற்ற நாடுகளுடன் நாம் தொடர்புகொள்ள உதவி வருகிறது அவர் குறிப்பிட்டார்.
அதனால்தான் பல்லாண்டுகளாகத் தனது தனிச்சிறப்புமிக்க போட்டித்தன்மையைச் சிங்கப்பூரால் பேண முடிகிறது என்றும் திரு வோங் சொன்னார்.
“நாம் இணைந்து பணியாற்றும்வரை, நம்மால் நமது கலாசாரத்தை எதிர்காலத் தலைமுறையினரிடம் கொண்டுசெல்ல முடியும் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.
சிங்கப்பூரின் செழுமைமிக்க பன்முகக் கலாசாரத்தை, ‘ஹைனானிஸ்’ கறிச்சோற்றுடன் அவர் ஒப்பிட்டுப் பேசினார்.
மேற்கத்திய பொரித்த பன்றியிறைச்சித் துண்டுகள், நோன்யா கோழிக்கறி, இந்திய மணமூட்டிகள், மணமும் சுவையும் மிக்க சீனச் சாறு எனப் பலவும் கலந்து, ‘ஹைனானிஸ்’ கறிச்சோறு சமைக்கப்படுகிறது.
அத்தகைய தனிச்சிறப்புமிக்க உணவை, அனைவரையும் உள்ளடக்கிய, பன்முகக் கலாசாரம் கொண்ட சிங்கப்பூர்ச் சமூகத்தில்தான் காண முடியும் என்று திரு வோங் சுட்டினார்.
“சிங்கப்பூரிலுள்ள பல்வேறு இனங்களும், துடிப்புமிக்க, தனித்துவமான கலாசாரங்களைக் கொண்டுள்ளபோதும் அனைவரையும் உள்ளடக்கிய, ஒற்றுமையான சமுதாயமாகத் திகழ்ந்து வருகிறோம். அதுதான் இன்றைய சிங்கப்பூரை உருவாக்கி இருக்கிறது.
“அந்த உணர்வை நாம் தொடரும்வரை, எத்தகைய சவாலையும் நம்மால் எதிர்கொண்டு கடக்க முடியும், ஒரே மக்களாக ஒன்றுசேர்ந்து முன்னோக்கிச் சென்று, ஆற்றல்மிக்க, சிறந்த சிங்கப்பூரை உருவாக்குவோம்,” என்று பிரதமர் கூறினார்.