உலகளாவிய பருவநிலை நடவடிக்கை அவசரத் தேவையே: கிரேஸ் ஃபூ

உலகளாவிய பருவநிலை நடவடிக்கை அவசரத் தேவையே: கிரேஸ் ஃபூ

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

09 Nov 2026 - 12:12 pm

2 mins read

நாடுகளிடையே பல்வேறு முன்னுரிமைப் போட்டிகள் நிலவும்போதிலும், உலகளாவிய பருவநிலை நடவடிக்கை தொடர்ந்து ஓர் அவசரத் தேவையாகவே இருந்து வருகிறது என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.

புதைபடிவ எரிபொருள்களிலிருந்து பிற ஆற்றல் மூலங்களுக்கு மாறுவது நாடுகளுக்கு இதற்கு முன்பைவிடக் கடினமான ஒன்றாகவே இருக்கும் அல்லது முன்பைவிட கூடுதல் சவாலாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

எரிசக்திப் பாதுகாப்பு என்பது ஓர் உண்மையான விவகாரம் என்றும் அது நாளுக்கு நாள் தீவிரமடைந்து மக்களை நடைமுறையில் மிக ஆழமாகப் பாதித்து வருகிறது என்றும் அமைச்சர் சுட்டினார்.

பல நாடுகளில் எரிபொருள் தீர்ந்துபோய் லாரி ஓட்டுநர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் இதனால் அதிருப்தியடைந்து மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவதையும் காண முடிகிறது என்று அவர் விவரித்தார்.

மற்றொருபுறம், பாதுகாப்பு உள்ளிட்ட பிற விவகாரங்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், வளர்ந்த நாடுகளின் நிதிச் செயலாற்றல் குறைந்து வருவதையும் பார்க்க முடிகிறது என்று திங்கட்கிழமை (நவம்பர் 9) தொடங்கவிருக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் 31வது பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு முன்னதாக நவம்பர் 5ஆம் தேதி அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தும் இந்த வருடாந்தர உச்சநிலை மாநாட்டில் ஏறத்தாழ 200 நாடுகள் பங்கேற்கவுள்ளன.

துருக்கியில் இரண்டு வாரங்களுக்கு நடைபெறவுள்ள இம்மாநாடு, நேப்பாள வெள்ளப்பெருக்கு போன்ற அண்மைய பருவநிலைப் பேரிடர்களின் பின்னணியிலும் மத்திய கிழக்கு மோதல் போன்ற புவிசார் அரசியல் சவால்கள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவின நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நடைபெறுகிறது.

உலகம் முன்னெப்போதையும்விட தற்போது பிளவுபட்டுள்ளது என்றும் பல்வேறு நாடுகளில் சமூகக் கொந்தளிப்புகள், பணவீக்கம், வேலைவாய்ப்பு, பாதுகாப்பு தொடர்பான கவலைகள் நிலவுவதால் உலக நாடுகள் தற்போதைய உடனடிப் பிரச்சினைகளில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தி வருகின்றன என்றும் இம்மாநாட்டில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திருவாட்டி ஃபூ கூறினார்.

இத்தகைய கடும் சவால்கள் இருக்கும்போதிலும் இந்த மாநாட்டில் உலக அரசியல் தலைவர்களின் கவனம் பருவநிலை நடவடிக்கைகளின் மீது திருப்பப்படுவது மிகவும் இன்றியமையாதது என அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்