சிங்கப்பூர் தனிச்சிறப்புடன் திகழ ஒற்றுமை, உறுதிப்பாடு, செயல் ஆகிய அனைத்தும் முன் எப்போதும் இல்லாத அளவு வலிமையாக இருக்கவேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மாற்றங்கள் அதிவேகமாகவே இருக்கும் என்றும் சிரமமாகக்கூட சில சமயங்களில் இருக்கும் என்றும் கூறிய பிரதமர், எவரும் தனித்து அந்தச் சவால்களைச் சந்திக்க வேண்டியதில்லை என்று நம்பிக்கையளித்தார்.
“கடந்த 60 ஆண்டுகளைப் போல, அரசாங்கம் உங்களுக்குத் துணைநிற்கும். பின்தங்கியுள்ள ஒவ்வொரு சிங்கப்பூரரும் தன்னம்பிக்கையுடன் போராடத் துணைநிற்போம்,” என்று திரு வோங் தெரிவித்தார்.
பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் திரு வோங் வெளியிட்ட இரண்டாவது தேசிய தினச் செய்தியை கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவள துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தமிழில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) இரவு வாசித்தார்.
இதுவரை நாட்டின் வளர்ச்சிக்குத் துணைநின்ற அனைத்துலகக் கட்டமைப்பு தற்போது நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளதைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர், போட்டித்தன்மை, பிளவுத்தன்மை, கொந்தளிப்பு முன்பைவிட அதிகமாக உள்ளது என்றார்.
எதிர்வரும் சிரமமான சூழலைக் கண்டு மனந்தளரப் போவதில்லை என்றும் புதிய சவால்களை நமது தனித்துவமான வழியில் எதிர்கொள்வோம் என்றும் நம்பிக்கையூட்டினார்.
பொருளியல் நிலைத்தன்மையில்லாத நிலையைப் பற்றியும் அதற்கு அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் குறித்தும் பிரதமர் விளக்கினார்.
வேலை தேடுவோருக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆதரவுத் திட்டம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு, வேலை இழந்தோர் மீண்டுவர வழிவகுத்ததை அவர் சுட்டினார். குறைந்த வருமான ஊழியர்களையும் குடும்பங்களையும் கைதூக்கிவிட ஏராளமான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற திரு வோங், வாழ்க்கையில் தொடக்கம் எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றி பெறவேண்டும் என்றும் அதற்குத் தேவையானவற்றை தமது அரசாங்கம் உருவாக்க இருப்பதையும் அவர் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
துணைப் பிரதமர் கான் கிம் யோங்கின் தலைமையிலான சிங்கப்பூர்ப் பொருளியல் மீள்திறன் பணிக்குழுவின் செயல்பாடுகளைப் பற்றி அவர் விவரித்தார்.
உடனடிப் பிரச்சினைகளைச் சமாளிக்க முனைவதைத் தாண்டி நீண்டகால அடிப்படையில் சிந்தித்துச் செயல்படவும் அடுத்தக்கட்ட சவால்களுக்குத் தயாராக இருக்கவேண்டும் என்றும் தமது தொலைநோக்குச் சிந்தனையைக் கோடிட்டுக் காட்டினார்.
பெரிய நாடுகளுக்கு இடையில் சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் போட்டித்தன்மையுடன் விளங்குவது மேலும் கடினம் என்றும் அதற்காக நமது பொருளியல் உத்திகளை மாற்றியமைப்பதாகக் கூறினார்.
அது நமது திறனாற்றல்களையும் போட்டித்தன்மையையும் வலுப்படுத்தவும் எதிர்காலத்தைத் தன்வசப்படுத்தவும் வழிவகுக்கும் என்றார்.
இவ்வாண்டு மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிங்கப்பூரர்கள் தங்களை மிகச் சிறப்பாக வழிநடத்தக்கூடிய அணியைத் தேர்ந்தெடுத்ததைப் பிரதமர் குறிப்பிட்டு பேசினார்.
மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளராக திரு வோங் வழிநடத்திய முதல் தேர்தலில் 65.6% வாக்குகளைப் பெற்று 97 நாடாளுமன்ற இடங்களில் 87 இடங்களை அக்கட்சி வென்றது.
“உங்கள் எண்ணமும் நம்பிக்கையும், திடமாகச் செயல்படுவதற்கும் கடப்பாட்டுடன் வழிநடத்துவதற்கும் என் அரசாங்கத்திற்கு நம்பிக்கை அளித்தது,” என்று திரு வோங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் தனது 60ஆம் ஆண்டு தேசிய தினத்தைக் கொண்டாடும் வேளையில், அணிவகுப்பு நடைபெறவிருக்கும் அதே வரலாற்றுச் சிறப்புமிக்க பாடாங் திடலிலிருந்து தேசிய தினச் செய்தி ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
பிரதமரின் உரை தொலைகாட்சியில் ஒளிபரப்பாவதற்கு முன்னர் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ, சிங்கப்பூரின் சுதந்திர பிரகடனத்தை வாசிக்கும் ஐந்து நிமிடக் காணொளி ஒளிபரப்பானது. அந்தப் பிரகடனமே மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்து தனிநாடானதைக் குறித்த பத்திரப் படிவம்.
1959ஆம் ஆண்டில் முதல் அதிபர் யூசோப் இஷாக் தன்னாட்சி நாடாக சிங்கப்பூரை அறிவித்ததும் 1966ஆம் ஆண்டில் சுதந்திர நாடாக முதல் தேசிய தின அணிவகுப்பைக் கொண்டாடியதும் இந்த முக்கியமான இடத்தில்தான் என்று நினைவுகூர்ந்த பிரதமர், வருங்காலத்தையும் எண்ணிப் பார்க்க சிங்கப்பூரர்களை வலியுறுத்தினார்.
ஒற்றுமையின் அவசியத்தை தேசிய தின உரையின் பல தருணங்களில் அறிவுறுத்திய பிரதமர், ஒருமைப்பாடும் ஒருமித்த பொறுப்புணர்வும் நிறைந்த நம் சிங்கப்பூர் உணர்வே வருங்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்குவதற்கு அடிநாதம் என்று குறிப்பிட்டார்.
“கடந்த 60 ஆண்டுகளாக ஒற்றுமை உணர்வே நம்மை வழிநடத்தி வந்துள்ளது. இனிவரும் காலங்களில் இது மேலும் முக்கியமாகும். இனம், மொழி, சமயம் ஆகியவற்றால் நாம் வேறுபட்டிருக்கலாம். ஆனால், அவற்றினும் ஆழமான ஒன்று நம்மைப் பின்னிப் பிணைத்துள்ளது. அதுவே சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்கள் ஒவ்வொருவருக்குமான ஒருமித்த கடப்பாடு,” என்று கூறினார் திரு வோங்.
மனவுறுதியாலும் மீள்திறனாலும் ஒற்றுமையாலும் முன்னேறி வந்துள்ள சிங்கப்பூர், புதிய அத்தியாயத்தில் அடியெடுத்துவைக்கும் வேளையில் வலுவான நம்பிக்கையுடன் பிரகாசமான எதிர்காலத்தை தன்வசப்படுத்த சிங்கப்பூரர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
சிங்கப்பூரர்கள் அனைவர்க்கும் பிரதமர் வோங் தேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.