ஈசூன் சென்ட்ரல் புளோக் 323, ஆறாவது மாடியில் இரு அண்டைவீட்டாருக்கு இடையே புதன்கிழமை (செப்டம்பர் 24) காலை 7 மணியளவில் நடந்த சண்டையில் வியட்னாமைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மரணமடைந்தார்.
பலத்த காயமடைந்த மாது, அவரது 35 வயது கணவர், தாக்குதல் நடத்திய ஆடவர் ஆகிய மூவரும் கூ தெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கத்தியால் தம்பதியைத் தாக்கிய 67 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுயநினைவின்றி மருத்துவமனையில் மாதின் உயிர் பிரிந்தது. தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு ஐந்து வயது, இளைய மகனுக்கு இரண்டு வயது என்று நம்பப்படுகிறது.
புதன்கிழமை காலை 7.25 மணியளவில் ஈசூன் சென்ட்ரலின் புளோக் 323லிருந்து உதவிக்கு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் சென்றபோது பல காவல்துறை வாகனங்கள் கீழ்த் தளத்தில் இருந்தன. ஆறாவது மாடியின் மின்தூக்கித் தளத்தில் ரத்தக் கறைகள் காணப்பட்டன. ஒரு கைக்கடிகாரம், கைப்பேசி, கார் சாவி, காலணி ஆகியன தரையில் கிடந்தன. காவல்துறை அந்த இடத்தைச் சுற்றிலும் தடுப்புகள் ஏற்படுத்தியிருந்தது.
மின்தூக்கியிலும் ரத்தக் கறைகள் படிந்திருந்தன. சம்பவம் பற்றி விவரித்த வர்த்தகரான திரு.கோ என்ற அந்த புளோக்கின் குடியிருப்பாளர், இரு அண்டை வீட்டாருக்கு இடையே காலையில் வாக்குவாதமும் அலறலும் கேட்பதைப் பற்றி அறியச் சென்றபோது, ஆறாம் மாடியில் ரத்த வெள்ளத்தில் ஒரு பெண் கிடந்ததைக் கண்டதாகச் சொன்னார்.
அவருக்கு முதலுதவி தந்து காப்பாற்றும்படி அவரது கணவர் கதறிக் கேட்ட அதேநேரம் மற்றோர் ஆடவர் அவரைக் கத்தியால் தாக்குவதையும் அவர் பார்த்துள்ளார்.
தம்பதிக்கும் ஆடவருக்கும் சில காலமாகவே பிள்ளைகளின் சத்தத்தால் கருத்து வேறுபாடு இருந்துவந்துள்ளது என்றும் அறியப்படுகிறது. நீசூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெக்சன் லாம், சம்பவ இடத்தை மதியம் சென்று பார்வையிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பிள்ளைகளின் உறவினர் ஒருவரைச் சந்தித்து உதவிகள் வழங்க அவரிடம் பேசியுள்ளார். பிள்ளைகளின் நிலவரம் பரிசீலிக்கப்படுகிறது என்றார் அவர். தாக்குதல் நடத்தியவரின் மனைவி, அண்டை வீட்டின் இரைச்சல் பிரச்சினை பற்றி, ஜுலை மாத மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் புகார் அளித்திருந்தார் எனவும் ஊடகத்திடம் திரு ஜெக்சன் தெரிவித்தார்.
வீவகவிடம் புகார் தெரிவிக்கப்பட்டு, சமூக சமரச நிலையத்திலும் (CMC) ஆலோசனைகள் இரு வீட்டாருக்கு இடையில் நடைபெற்றுள்ளது. அதுவும் பலனின்றி, சமூக சர்ச்சை தீர்வு மன்றங்களுக்கு (CDRT) தீர்வை எட்ட அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விவரித்தார்.
இந்த ஆண்டின் முதல்பாதியில் மட்டும் 75 கத்திக்குத்துச் சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.