நேப்பாளப் பேரிடர்: சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் $3 மில்லியன் நிதி திரட்டு

நேப்பாளப் பேரிடர்: சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் $3 மில்லியன் நிதி திரட்டு

1 mins read
adca6fde-ec7b-4583-bfae-d1f8108655de
நேப்பாளத்தின் வடபகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் மாண்டோர் எண்ணிக்கை 1,200ஐத் தாண்டிவிட்டது. - படம்: இபிஏ
Google News Preferred Icon

நேப்பாள - சீன வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர்க்கு உதவும் நோக்கில் சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் $3 மில்லியனுக்கும் மேல் நிதி திரட்டியிருக்கிறது.

நிதி வழங்கி ஆதரவு அளித்தோர்க்குச் சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை நிர்வாகி பெஞ்சமின் வில்லியம் நன்றி தெரிவித்துக்கொண்டார். பினாங்கு லேனில் உள்ள செஞ்சிலுவைச் சங்க இல்லத்திற்கு நேரில் வந்து பலர் தங்கள் நன்கொடைகளை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடக்கத்தில் $50,000 வழங்கிய சங்கம், மனிதநேய உதவியாக மேலும் $170,000 வழங்க கடப்பாடு கொண்டுள்ளது.

அதில் 80,000 வெள்ளியானது கிட்டத்தட்ட 2,500 குடும்பங்களுக்கு அவசரகால உணவுப்பொருள் விநியோகத்திற்குப் பயன்படுத்தப்படும். நீர் வடிகட்டிகள், சுத்திகரிப்புப் பொடிகள் போன்ற வழிகளில் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு எஞ்சிய 90,000 வெள்ளியானது பயன்படுத்தப்படும்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் நிதி திரட்டு இயக்கம் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல் மூன்று நாள்களிலேயே ஒரு மில்லியன் வெள்ளிக்குமேல் திரட்டப்பட்டது. சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கிய 100,000 அமெரிக்க டாலரும் (S$127,000) அதில் அடங்கும்.

வரும் நவம்பர் 30ஆம் தேதி இந்த நன்கொடைத் திரட்டு இயக்கம் முடிவுறும்.

கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி திபெத்திலும் நேப்பாளத்திலும் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பல சிற்றூர்கள் அடித்துச் செல்லப்பட்டன. அவற்றால் மாண்டோர் எண்ணிக்கை 1,200ஐத் தாண்டிவிட்டது; ஒன்பது சிங்கப்பூரர்கள் உட்பட 4,200க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.

குறிப்புச் சொற்கள்