பூன் லே டிரைவில் சனிக்கிழமை அன்று (டிசம்பர் 6) கத்தியால் குத்தப்பட்ட 58 வயது ஆடவர் ஒருவர் காயமடைந்தார்.
அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
டிசம்பர் மாலை 6.55 மணியளவில் உதவி கேட்டு பல அழைப்புகள் வந்ததாகக் காவல்துறை கூறியது. அங்கு சென்றடைந்தபோது புளோக் 188ன் வெற்றுத் தளத்தில் ஆடவர் ஒருவர் காயமடைந்து காணப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
சுயநினைவுடன் இருந்த அவர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் சேர்க்கப் பட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீவிர விசாரணையில் 32 வயது சந்தேக நபரின் அடையாளத்தைக் காவல்துறை கண்டுபிடித்தது. சம்பவ இடத்திலிருந்து இரண்டு கத்திகளும் ஒரு வெட்டரிவாளும் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபரை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ளது.

