உடற்குறையுள்ளோர், முதியோருக்கான வசதிகளுடன் புதிய விளையாட்டுப் பூங்கா

3 mins read
539eb6f9-fae0-4e79-908c-5afac3cfa957
புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ‘ஸ்போர்ட் பார்க்@டெக் கீ’யின் கூரையுடன் கூடிய நீச்சல்குளம். - படம்: சாவ்பாவ்

முதியோர், உடற்குறையுள்ளோர், சிறப்புத் தேவைகள் உடையோர் என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் டெக் கீ வட்டாரத்தில் புதிய விளையாட்டுப் பூங்கா ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

‘ஆக்டிவ்எஸ்ஜி ஸ்போர்ட் பார்க்@டெக் கீ’ எனும் அவ்வளாகத்தை மூத்த அமைச்சரும் அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு லீ சியன் லூங் திறந்துவைத்தார்.

நீச்சலில் ஈடுபடுவோரைச் சந்தித்து ஊக்குவித்த மூத்த அமைச்சர் லீ சியன் லூங்.
நீச்சலில் ஈடுபடுவோரைச் சந்தித்து ஊக்குவித்த மூத்த அமைச்சர் லீ சியன் லூங். - படம்: ரவி சிங்காரம்

“கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்த விளையாட்டு வளாகத்தைக் கட்டிமுடிக்க கூடுதல் காலம் ஆனது.

“இங்குள்ள நீச்சல் குளங்களில் ஒன்றுக்குக் கூரை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு தள உடற்பயிற்சிக்கூடம் இருக்கிறது. கூடைப்பந்து, ஃபுட்சால் திடல்கள் உள்ளன. பலவகையான விளையாட்டுகளையும் இங்கு விளையாடலாம். இது அரசாங்கம் ‘ஆக்டிவ்எஸ்ஜி’ மூலம் முன்னெடுக்கும் முயற்சி,” என்று மூத்த அமைச்சர் லீ விளக்கினார்.

1986ல் சிங்கப்பூர் கட்டடக் கலைஞர் கழகத்தின் விருது பெற்ற பழைய அங் மோ கியோ நீச்சல் கூடம் இருந்த இடத்தில் இப்புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது. சென்ற டிசம்பர் மாதம் முதல் இவ்வளாகம் இயங்கிவருகிறது.

அனைவரையும் உள்ளடக்கும் வசதிகள்

‘ஸ்போர்ட்எஸ்ஜி’யும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகமும் இந்த வளாகத்தை அனைவரையும் உள்ளடக்கும் வகையில் வடிவமைத்துள்ளன.

சக்கர நாற்காலியும் நீருக்குள் செல்லும்படியாக, கூரைவேய்ந்த நீச்சல் குளத்தில் சரிவுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலி செல்லக்கூடிய அகலமான பாதைகளும் சுற்றிலும் உள்ளன.

குளத்தின் ஓரத்தில் இளைப்பாறுவதற்கான மேசைகளில், சக்கர நாற்காலியும் பொருந்தும் அளவிற்கு இடம் உள்ளது.

வயதானவர்களுக்காக நீச்சல் குளத்தைச் சுற்றிலும் கைப்பிடிக் கம்பிகள் உள்ளன. குளிர்ச்சியான, இதமான உணர்வைக் கொடுக்கக்கூடிய சிறு நீரூற்றுகளும் உடல் வலிகளைப் போக்க உதவும்.

உள்ளூர் விளையாட்டு வசதிகளில் முதன்முறையாக, தம் உணர்ச்சிகளில் சமநிலைக் காண்பதற்கு அமைதியான, பாதுகாப்பான சூழல் தேவைப்படுவோருக்கு ‘தணிப்பறை’ (Calming Pod) எனும் தனி அறை உள்ளது.

உடற்பயிற்சிக் கூடத்தில் முதியோருக்கு ஏற்ற இயந்திரங்கள் உள்ளன. மின்னிலக்கத் திரை மூலமாகவே அவர்கள் தங்களது பயிற்சிக்கான எடையை மாற்றிக் கொள்ளலாம். மேலும், வெளியே தெரியும் நீச்சல் குளத்தை ரசித்தபடி உடற்பயிற்சி செய்யலாம்.

திரு லீயை முதன்முதலில் நேரில் கண்டு கைகுலுக்கியதில் பேருவகையடைந்த திருவாட்டி ஜார்ஜ் பிரேமா, 67, தனக்கான $200 ஆக்டிவ்எஸ்ஜி நிரப்புதொகை மூலம், மருத்துவ ஆலோசனைப்படி அடுத்த மாதத்திலிருந்து நீச்சல் குளத்துக்கும் உடற்பயிற்சிக்கூடத்துக்கும் செல்லவுள்ளார்.

“எனக்குக் கால்வலி, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு போன்றவை உள்ளதால் மருத்துவர் நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளைச் செய்ய அறிவுறுத்தியுள்ளார்,” என்றார் திருவாட்டி பிரேமா.

திரு லீயுடன் வந்திருந்த முன்னாள் அங் மோ கியோ நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் வாசு, “அங் மோ கியோ நீச்சல் குளம் முன்பு ஒரு சிறிய இடம்தான். முன்பு இங்கு பலரும் இளையராக இருந்தனர். இப்போது பெரியவர்கள் அதிகமானோர் இங்குக் குடியிருப்பதால் அவர்களுக்கென பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. நம் இந்திய மக்களில் இளையோர், பெரியோர் இணைந்து இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஊக்குவிக்கிறேன்,” என்றார்.

மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கைக் கண்ட பெருமகிழ்ச்சியில் திருவாட்டி ஜார்ஜ் பிரேமா, 67.
மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கைக் கண்ட பெருமகிழ்ச்சியில் திருவாட்டி ஜார்ஜ் பிரேமா, 67. - படம்: ரவி சிங்காரம்

2030க்குள் பலரும் தம் வீட்டிலிருந்து 10 நிமிட நடைத்தொலைவில் இருக்கக்கூடிய, நவீன விளையாட்டு வசதிகளை ஏற்படுத்துவதே ‘ஸ்போர்ட்எஸ்ஜி’யின் விளையாட்டு வசதிகள் பெருந்திட்டத்தின் இலக்கு.

குறிப்புச் சொற்கள்