செப்டம்பர் 1 முதல், பாலி, ஜகார்த்தா உட்பட இந்தோனீசியாவின் மூன்று விமான நிலையங்களுக்கும் படகில் பாத்தாம் தீவுக்கும் செல்லும் பயணிகள், புதிய கைப்பேசிச் செயலியைப் பயன்படுத்தி வருகை அறிவிப்பைப் பூர்த்திசெய்ய வேண்டும்.
இந்தோனீசியாவின் குடிநுழைவுத் தலைமை இயக்குநரகம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், இந்தப் புதிய விதி வெளிநாட்டவர், இந்தோனீசியக் குடிமக்கள் என அனைத்துப் பயணிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்தது.
‘ஆல் இந்தோனீசியா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இச்செயலி, அனைத்துலகப் பயணிகளுக்கான வருகை அறிவிப்பு நடைமுறையை எளிதாக்கவும் பயண அனுபவத்தை மேலும் எளிதாக, வேகமாக, பாதுகாப்பாக மாற்றவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை கூறியது.
பஹாசா இந்தோனீசியா, ஆங்கிலம், மாண்டரின் மொழிகளில் இச்செயலி கிடைக்கிறது. பயணிகள் தங்களின் வருகைக்கு மூன்று நாள்களுக்கு முன்னதாக இந்தப் படிவத்தை இலவசமாகப் பூர்த்தி செய்யலாம்.
குடிநுழைவு, சுங்கத்துறை, சுகாதாரம் மற்றும் தனிமைப்படுத்தல் ஆகிய படிவங்களை ஒரே மின்னிலக்க அமைப்பில் இச்செயலி ஒருங்கிணைக்கிறது.
முன்னதாக, ‘சத்து செஹத் ஹெல்த் பாஸ்’, ‘மின்னியல் சுங்கத்துறை அறிவிப்பு’ இரண்டையும் பயணிகள் நிரப்ப வேண்டியிருந்தது.
தற்போது, ஜகார்த்தா, சுரபாயா, பாலி விமான நிலையங்களுக்கும் பாத்தாம் தீவின் அனைத்துலகத் துறைமுகங்களுக்கும் செல்லும் பயணிகள் இச்செயலியைப் பயன்படுத்த வேண்டும்.
வருங்காலத்தில் இதன் பயன்பாடு அனைத்து விமான நிலையங்கள், அனைத்துலகத் துறைமுகங்கள், எல்லைகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அறிக்கை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
கூகல் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கும் ‘ஆல் இந்தோனீசியா’ செயலி மூலம் பயணிகள் இந்தப் படிவத்தை அணுகலாம்.