மக்களின் செலவுப் பழக்கங்களைக் கணிக்கச் சிங்கப்பூர் ஆய்வாளர்களின் புதிய முயற்சி

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகக் குழுவின் கருவி உட்பட 14 திட்டங்களுக்கு ஓப்பன்ஏஐ நிதியுதவி

மக்களின் செலவுப் பழக்கங்களைக் கணிக்கச் சிங்கப்பூர் ஆய்வாளர்களின் புதிய முயற்சி

2 mins read
23034988-5192-466a-9d81-95048218aaa8
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவியொன்றை உருவாக்கும் குழுவிற்குத் தலைமைதாங்கும் நன்யாங் வர்த்தகப் பள்ளியின் தகவல் கட்டமைப்புத் துறைப் பேராசிரியர் ஹியூக்கூ எரிக் குவோன் (இடமிருந்து இரண்டாமவர்). அவருடன் இருப்போர் குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற ஆய்வாளர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பண உதவித் திட்டங்கள் போன்ற கொள்கைகள் எவ்வாறு பொருளியலை ஊக்குவிக்கக்கூடும் என்பதை முன்கூட்டியே கணிக்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவியொன்றைச் சிங்கப்பூர் ஆய்வாளர்கள் உருவாக்குகின்றனர்.

மக்களின் சேமிப்பு, செலவுப் பழக்கவழக்கங்கள் போன்ற பொருளியல் முடிவுகளைப் பாரம்பரிய மாதிரிகளைக் காட்டிலும் இந்தக் கருவி மிகத் துல்லியமாகக் கணிக்கிறது. பொருளியல் இலக்குகளை அடையக் கொள்கை வகுப்பாளர்கள் மாற்றுத் திட்டங்களைச் சோதித்துப் பார்க்க இது வழிவகுக்கிறது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நால்வரால் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் பொருளியல் வாய்ப்பு, சமூக மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ஓப்பன்ஏஐ நிறுவனத்திடமிருந்து நிதியுதவி பெறத் தெரிவுசெய்யப்பட்ட உலகின் 14 திட்டங்களில் இதுவும் ஒன்று.

இவ்வாண்டு ஏப்ரலில் ஓப்பன்ஏஐ விடுத்த கோரிக்கைகளுக்கு வந்த 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களிலிருந்து இந்த 14 திட்டங்களும் தெரிவுசெய்யப்பட்டன.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகக் குழுவிற்கு 100,000 அமெரிக்க டாலர் ($126,800) நிதியுதவி கிடைக்கவுள்ளது. நன்யாங் வர்த்தகப் பள்ளியின் தகவல் கட்டமைப்புத் துறைப் பேராசிரியர் ஹியூக்கூ எரிக் குவோன் அந்தக் குழுவுக்குத் தலைமைதாங்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இக்கருவியை அடுத்த ஆறு மாதங்களில் உருவாக்குவதற்கும் சோதிப்பதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

தென்கொரியாவின் வரவுசெலவுச் செயலி ஒன்றின் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பயனீட்டாளர்களின் உண்மையான பரிவர்த்தனைத் தரவுகளைக் கொண்டு குழுவின் ஏஐ கட்டமைப்புக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தச் செயலியின் பெயரை வெளியிடப் பேராசிரியர் குவோன் மறுத்துவிட்டார்.

2023ஆம் ஆண்டு முதல் 2025 வரை பயனீட்டாளர்கள் எவ்வளவு செலவழிக்கிறார்கள், எந்தச் சில்லறை விற்பனைக் கடைகளிடம் செலவழிக்கிறார்கள், எவ்வளவு மாதாந்தர வருமானம் பெறுகிறார்கள் போன்ற தகவல்கள் இந்தத் தரவில் அடங்கியுள்ளன.

பரிவர்த்தனைகளின்போது வங்கிகளால் பயனீட்டாளர்களுக்கு அனுப்பப்படும் அறிவிப்புகள், தகவல்கள், மின்னஞ்சல்களைப் பின்பற்றுவதன் மூலம் செயலி இத்தரவுகளைப் பெறுகிறது. இவற்றில் பெயர்களும் வங்கிக் கணக்கு விவரங்களும் நீக்கப்பட்டுள்ளன. செலவுத் தொகை, வருமானம், வாங்கிய நேரம் ஆகியவை பரந்த வரம்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பயனீட்டாளர்களை அடையாளம் காண்பதைத் தடுப்பதற்காக, அடையாளம் மறைக்கப்பட்ட தரவுகளை மட்டுமே நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் குழுவின் ஏஐ கருவி எடுத்துக்கொள்கிறது.

“தரவுகள் ஒரே ஒருவரின் விவரங்களுடன் மட்டுமே பொருந்தக்கூடிய சூழல் ஒருபோதும் இருக்கக்கூடாது. தரவின் உணர்திறன் நிலையைப் பொறுத்து, குறைந்தபட்சம் மூன்று, ஐந்து அல்லது 10 பயனீட்டாளர்கள் ஒரே மாதிரியான பண்புகளைப் பகிர்ந்துகொண்டால், அந்த விவரம் போதுமான அளவு அடையாளம் மறைக்கப்பட்டதாகக் கருதப்படும்,” என்று பேராசிரியர் குவோன் கூறினார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள், இந்த ஏஐ கருவியை உலகெங்கும் பயன்படும் வகையில் உருவாக்க ஆய்வாளர்கள் எண்ணியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்