சிங்கப்பூரின் கடலோரப் பகுதிகளில் நிலப்பகுதியைச் சொந்தமாக வைத்திருப்போர் அல்லது வாடகைக்கு எடுப்போர் உயரும் கடல்மட்டத்திலிருந்து சொத்துகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது விரைவில் கட்டாயமாக்கப்படவுள்ளது. அத்தகைய நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவோர் அபராதத்தையும் சிறைத்தண்டனையையும் எதிர்நோக்க நேரிடலாம்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) அதற்குரிய கடலோரப் பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி, அரசாங்க அமைப்புகள், தனியார் நில உரிமையாளர்கள், சொத்துகளை நீண்டகால வாடகைக்கு எடுத்திருப்போர் முதலியோருக்குக் கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த 10 ஆண்டுகால அவகாசம் கொடுக்கப்படும். கடலோரத்தில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க அவை உதவக்கூடும். கடற்சுவர்கள், குறுக்கு அணைகளைக் கட்டிப் பராமரிப்பது அல்லது சதுப்புநிலத் தாவரங்களை நடுவது போன்றவை அத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும்.
பாதிக்கப்படும் நில உரிமையாளர்களுக்கு 2030களின் தொடக்கத்தில் முதல்தொகுதி அறிக்கைகள் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மசோதாவின்கீழ், வெள்ளப் பாதுகாப்பு மேலாளர்களை நில உரிமையாளர்கள் நியமிக்க வேண்டும். வெள்ளத் தடுப்பு நடவடிக்கை எடுப்பதை அவர்கள் மேற்பார்வையிடுவர். தேசியத் தண்ணீர் அமைப்பான பியுபி, தேவைப்படும்போது அந்த மேலாளர்களைத் தொடர்புகொள்ளும். முறையான பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப்படும்.
“கடலோரத்தைப் பாதுகாப்பது என்பது நீண்டகால முயற்சி. அதற்குத் திட்டமிடவும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் பல்லாண்டு தேவைப்படும். நில உரிமையாளர்களும் தொழில்துறையினரும் புதிய தேவைகளைப் புரிந்துகொள்ளப் போதிய அவகாசம் இருப்பதை உறுதிசெய்யவே மசோதா இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது,” என்று பியுபியும் நீடித்து நிலைத்த, சுற்றுப்புற அமைச்சும் வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிட்டன.
2100ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் இடைநிலைக் கடல்மட்ட அளவு, 1.15 மீட்டர் உயரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. அலைகள் கொந்தளித்தால் அல்லது புயலடித்தால் கடல்மட்டம் ஐந்து மீட்டர் வரை உயரக்கூடும். அத்தகைய நேரங்களில் கடலோரத்தில் வெள்ளம் ஏற்படக்கூடும்.
கடலோர நிலப்பகுதியில் 70 விழுக்காடு அரசாங்கத்திற்குச் சொந்தமானது. எஞ்சியதைத் தனியார் நில உரிமையாளர்களும் வாடகைக்கு எடுத்திருப்போரும் பயன்படுத்துகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அவற்றில் பெரும்பாலானவை தென்-மேற்கு, வட கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ளன. தொழில்துறைப் பேட்டைகளான துவாஸ், பயனியர், செனோக்கோ, ஜூரோங் தீவு முதலியவை அவற்றுள் அடங்கும்.
மசோதாவின்படி, நில உரிமையாளர்கள், அவர்களின் பகுதியில் எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் பக்கத்துப் பகுதிகளுடன் இடைவெளியில்லாமல் இணைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். கடல்நீர் உள்ளே புகுவதைத் தடுப்பது அதன் நோக்கம்.
அவ்வாறு செய்யத் தவறுவது குற்றமாகக் கருதப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்கத் தவறினாலோ பியுபியின் அனுமதியின்றி கட்டுமானத்தை மாற்றினாலோ அதிகபட்சம் ஈராண்டு சிறைத்தண்டனையும் $200,000 அபராதமும் விதிக்கப்படக்கூடும்.

