மலாய் மொழி நாளிதழான பெரித்தா ஹரியான் (பிஎச்), லாப நோக்கமற்ற அமைப்பான ஏஎம்பி சிங்கப்பூர் நிறுவனத்துடன் இணைந்து வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த உயர்கல்வி மாணவர்களுக்குக் கல்வி உதவி நிதி வழங்கவிருக்கிறது.
இதன் தொடர்பில் வியாழக்கிழமை (ஜனவரி 8) இருதரப்பும் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன.
பெரித்தா ஹரியான் நாளிதழின் ஆசிரியர் நஸ்ரி மொக்தார் ஏஎம்பி சிங்கப்பூர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மொக்சின் ரஷீத் இருவரும் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டனர். பெரித்தா ஹரியான் செய்தியறையில் இருதரப்புப் பிரதிநிதிகள் முன்னிலையில் அவர்கள் கையொப்பமிட்டனர்.
அதன்கீழ், 2030ஆம் ஆண்டுவரை அந்தக் கல்வி உதவி நிதித் திட்டத்திற்கு ஆண்டுதோறும் $8,000 ஒதுக்கப்படும்.
ஊடகத்துறை, தொடர்பு, மலாய் கல்வி ஆகிய துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்தக் கல்வி உதவி நிதி வழங்கப்படும்.
ஒவ்வோர் ஆண்டும் இத்தகைய மாணவர்களில் நால்வர் பயன்பெறுவர். பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் இருவருக்குத் தலா $1,500 வழங்கப்படும். பல்கலைக்கழகங்களில் பயிலும் இருவர் தலா $2,500 பெறுவர்.
ஏஎம்பி சிங்கப்பூர் நிறுவனம், 1991ஆம் ஆண்டு முதல் இங்குள்ள முஸ்லிம் சமூகத்திற்குச் சேவையாற்றி வருகிறது.
2025ஆம் ஆண்டு ஜூலை மாதம், பிஎச்-ஏஎம்பி நன்கொடைத் திரட்டு கோல்ஃப் போட்டி நடைபெற்றது. அதன் மூலம் திரட்டப்பட்ட $271,000 நிதியிலிருந்து புதிய கல்வி உதவி நிதித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பந்தயப் பிடிப்புக் கழகத்தின் (Tote Board Singapore) மானியம் வாயிலாகவும் கூடுதல் நிதியைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதாக பிஎச், ஏஎம்பி சிங்கப்பூர் இணைந்து வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

