உணவில் உப்பின் அளவைக் குறைக்க விரைவில் புதிய அதிரடி இயக்கம்

உணவில் உப்பின் அளவைக் குறைக்க விரைவில் புதிய அதிரடி இயக்கம்

2 mins read
78875b67-af30-473d-8ff0-76852dc79357
பொதுவாக உப்பு அதிகமாகக் காணப்படும் சுவைச் சாறு போத்தல்களுக்கும் ஆரோக்கியமான குறீயீட்டைச் சுகாதார மேம்பாட்டு வாரியம் விரிவுபடுத்துகிறது. - கோப்புப் படம்: ஷின் மின் டெய்லி
Google News Preferred Icon

சிங்கப்பூரர்களின் உணவு வகைகளில் உப்பின் அளவைக் குறைப்பதற்காக புதிய அதிரடி இயக்கம் விரைவில் தொடங்கப்படுகிறது.

சர்க்கரையையும் கொழுப்பையும் குறைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது.

பொதுமக்கள் உணவகங்களில் உணவுகளை வாங்கும்போது ‘உப்பும் சுவைச்சாறும் (சாஸ்) குறைவாகப் போடுங்கள்’ என்று கேட்டு வாங்கும் பழக்கத்தை வழக்கமாக்கவும் உப்பு குறைந்த உணவு வகைகளைத் தேர்ந்தெடுப்பதை ஊக்குவிக்கவும் இவ்வாண்டின் இறுதியில் சுகாதார மேம்பாட்டு வாரியம் புதிய விழிப்புணர்வு பிரசாரத்தைத் தொடங்கும்.

“உணவில் உப்பைக் குறைத்துக் கேட்பதை நமது வாழ்க்கையில் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதிகமான மக்கள் இதைக் கேட்கும்போது உணவகங்களே உப்பைக் குறைத்து வழங்கும் நிலையை நாம் உருவாக்க முடியும்,” என்று ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகியான டே சூன் ஹோங் தெரிவித்தார்.

கடந்த 2023 செப்டம்பரில் தொடங்கப்பட்ட ‘குறைவான சர்க்கரை’ கேட்கும் இயக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டே இத்திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டின் இறுதியிலும் 2023ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் கொண்டு வரப்பட்ட ஆரோக்கிய உணவுத் தரவரிசை (நியூட்ரிகிரேட்) முறையும் விழிப்புணர்வுப் பிரசாரங்களும் சிங்கப்பூரர்கள் ஆரோக்கியமான பானங்களைத் தேர்ந்தெடுப்பதை பெருமளவு ஊக்குவித்தது.

சர்க்கரை, கொழுப்பு குறைவாக உள்ள பானங்களுக்கு ‘ஏ’, ‘பி’ தரவரிசையும், அதிகமாக உள்ளவற்றுக்கு ‘சி’, ‘டி’ தரவரிசையும் வழங்கப்படுகின்றன. இதில் ‘டி’ பிரிவு பானங்களை விளம்பரம் செய்யத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் இந்தத் தரவரிசை முறையைப் பாராட்டி உலகச் சுகாதார நிறுவனம், 2024ஆம் ஆண்டில் ‘ஆரோக்கியமான நகரங்களுக்கான அங்கீகார விருதை’ வழங்கிக் கௌரவித்துள்ளது.

சர்க்கரையைக் குறைப்பதில் கிடைத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இது, உப்பு நிறைந்த பிற பொருள்களுக்கும் நீட்டிக்கப்படவுள்ளது.

2027ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆரோக்கிய உணவுக்கான தரவரிசை உப்பு, கொழுப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கும் பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உப்பு, சுவைச்சாறு வகைகள், உடனடியாகத் தயாரிக்கப்படும் நூடல்ஸ், சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இருப்பினும், சர்க்கரையைப் போல உப்பைக் குறைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று டே சூன் ஹோங் எச்சரித்துள்ளார். உணவு தயாரிப்புகளில் மாற்றங்களைச் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

இதனால் நிறுவனங்களின் அக்கறைக்குரிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு தரமும் குறையாமல் உப்பின் அளவும் கணிசமாகக் குறையும் வகையில் புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் என்று சுகாதார மேம்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் நியூட்ரிகிரேட் தரவரிசை உப்பு அதிகமுள்ள உணவு பொருள்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் நியூட்ரிகிரேட் தரவரிசை உப்பு அதிகமுள்ள உணவு பொருள்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. - கோப்புப் படம்: ஷின்மின் டெய்லி
குறிப்புச் சொற்கள்