இணையத் தீங்குகளால் பாதிக்கப்பட்டோர் விரைந்து உதவிபெற ஏதுவாக, அனைத்து வகையான ஆதரவுகளையும் வழங்கும் புதிய நிலையம் 2026 முற்பாதியிலிருந்து செயல்படத் தொடங்கும்.
குறிப்பாக, இணையப் பகடிவதை (cyberbullying), வன்போலி (deepfake), நெருக்கமான படங்களை அனுமதியின்றிப் பகிர்தல் உள்ளிட்ட தீங்குகளால் பாதிக்கப்பட்டோர்க்கு அந்நிலையம் ஆதரவு வழங்கும்.
பாதிக்கப்பட்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட, பிறரைப் புண்படுத்தும் உள்ளடக்கத்தை அகற்றும்படி இணையத்தளங்களுக்கு உத்தரவிடுவதற்கான சட்ட அடிப்படையிலான அதிகாரம் இணையப் பாதுகாப்பு ஆணையம் என்ற அந்நிலையத்திற்கு வழங்கப்படும்.
இணையப் பாதுகாப்பு (இடர்தணிப்பும் பொறுப்புடைமையும்) மசோதா இவ்வாண்டில் பின்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
சட்ட நடவடிக்கையைத் தொடங்கும் வகையில் ஊடுருவிகள் குறித்த தகவலைக் கோரும் தெரிவு போன்ற மற்ற வழிகளிலும் பாதிக்கப்பட்டோருக்கு உதவி கிடைக்க அம்மசோதா வழிவகுக்கும்.
“இணையத் தீங்குகளால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்க அதிக நடவடிக்கைகளை எடுக்க விரும்புகிறோம்,” என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 7) கூறினார்.
இணையத் தீங்குகளால் பாதிக்கப்படுவது அதிகரித்துவருவது தொடர்பில் மெக்பர்சன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்தபோது, இணைய நம்பகத்தன்மையையும் பாதுகாப்பையும் வலுப்படுத்துவது, அடுத்த நிதியாண்டில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் செலவினங்களுக்கான முன்னுரிமைகளில் ஒன்று என்று திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
‘பெரும்பாலான நேரங்களில், பாதிக்கப்பட்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட, உண்மையிலேயே தீங்கிழைக்கும் உள்ளடக்கங்களை நீக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க இணையத்தளங்கள் தவறிவிடுகின்றன,” என்றார் அவர்.
குறிப்பாக, பயனர்களின் புகார்களுக்குப் பதிலளிக்க அல்லது அவற்றின் தொடர்பில் நடவடிக்கை எடுக்க ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக்டாக், எக்ஸ், யூடியூப் ஆகிய தளங்கள் சராசரியாகக் குறைந்தது ஐந்து நாள்களை எடுத்துக்கொள்வதாகத் தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் கண்டறிந்துள்ளது.
இந்நிலையில், இணையத் தீங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து உதவிகிடைக்க இணையப் பாதுகாப்பு ஆணையமும் புதிய மசோதாவும் இலக்கு கொண்டுள்ளன என்று அமைச்சர் டியோ கூறியுள்ளார்.
இணையப் பகடிவதை, பாலியல் துன்புறுத்தல், நெருக்கமான படத்தைப் பகிர்தல், குழந்தைப் பாலியல் படங்கள் மற்றும் காணொளிகள், வன்போலிப் பதிவுகள், வெறுப்பைத் தூண்டும் பேச்சு போன்ற தீங்குகள் தொடர்பில் உரிய இணையப்பக்க நிர்வாகிகள், தொழில்நுட்பத் தளங்கள்மீது பாதிக்கப்பட்டோர் வழக்கு தொடுக்க அனுமதி வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பொதுமக்களுடனான ஆலோசனை அமர்வின்போது இப்பரிந்துரைக்குப் பேராதரவு கிட்டியது.
புதிய இணையப் பாதுகாப்பு ஆணையம் தொடர்பான திட்டம் குறித்து பிரதமர் லாரன்ஸ் வோங் கடந்த 2024 அக்டோபரில் முதன்முறையாக அறிவித்திருந்தார்.