தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்த ஜூனிலிருந்து புதிய நிபந்தனை

தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்த ஜூனிலிருந்து புதிய நிபந்தனை

2 mins read
0b8ef52a-effb-4e55-99b0-200fc305e868
நடமாட்டப் பிரச்சினை இல்லாதோர் அத்தகைய சாதனங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது புதிய நடவடிக்கையின் நோக்கம் என்று போக்குவரத்துத் துணையமைச்சர் பே யாம் கெங் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோர் ஜூன் முதல்தேதியிலிருந்து மருத்துவத் தேவைக்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டியது கட்டாயம். 70 வயதை எட்டிய முதியோருக்கு அதிலிருந்து விலக்களிக்கப்படும்.

நடமாட்டப் பிரச்சினை இல்லாதோர் அத்தகைய சாதனங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது புதிய நடவடிக்கையின் நோக்கம் என்று போக்குவரத்துத் துணையமைச்சர் பே யாம் கெங் கூறினார்.

அவற்றைப் பயன்படுத்தத் தகுதியுடையோர், மருத்துவப் பரிசோதனைகளை இம்மாதம் (பிப்ரவரி) 27ஆம் தேதியிலிருந்து தொடங்கலாம்.

நிலப் போக்குவரத்து, தொடர்புடைய விவகாரங்கள் குறித்த மசோதாவில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான மற்றச் சில விதிமுறைகளும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஜூன் முதல்தேதியிலிருந்து விற்கப்படும் அத்தகைய சாதனங்களைப் பதிவுசெய்ய வேண்டியதும் பொதுப் பாதைகளில் அவற்றின் வேக வரம்பை மணிக்கு 10 கிலோமீட்டரிலிருந்து ஆறு கிலோமீட்டருக்குக் குறைப்பதும் அவற்றுள் அடங்கும்.

மக்கள்தொகை மூப்படைவதாலும் அதிகமானோர் தனிநபர் நடமாட்டச் சாதனங்களை நாடுவதாலும் அவை பாதுகாப்புடனும் பொறுப்புடனும் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கான தேவை அதிகரித்து வருகிறது என்றார் திரு பே. உடல்நலத்துடன் இருப்போர், அத்தகைய சாதனங்களைத் தவறாய்ப் பயன்படுத்துவது பற்றிய கவலைதரும் போக்கை அவர் குறிப்பிட்டார்.

தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கு மட்டுமே சான்றிதழ் பெற வேண்டியது அவசியம் என்பதைத் திரு பே சுட்டினார். சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் சான்றிதழைப் பெறவேண்டியதில்லை என்றார் அவர்.

மூத்தோர் நடமாட்ட, இயக்க உதவிநிதி, உடலியக்க உதவிச் சாதன நிதியின் மூலம் பலனடைந்தோர், 70 வயதை எட்டிய முதியோர், சுகாதார அமைச்சின்கீழ் செயல்படும் உடற்குறை உடையோருக்கான திட்டங்களின்கீழ் விண்ணப்பித்தோர் ஆகியோருக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.

விதிவிலக்கு இயல்பாக இடம்பெறும். பயனீட்டாளர்கள் எதுவும் செய்ய வேண்டிய தேவையில்லை.

குறிப்புச் சொற்கள்