வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் (பிடிஓ) பொங்கோல் பாயின்ட் கோவ் குடியிருப்பின் கட்டுமானப் பணிக்குப் புதிய குத்தகையாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முன்னதாக நியமிக்கப்பட்டிருந்த ‘சிகேஆர் கான்ட்ராக்ட் சர்வீசஸ்’ நிறுவனத்தின் பணி திருப்திகரமான முறையில் இல்லாத காரணத்தால், ஜூலை மாதம் அந்தக் குத்தகையாளரின் சேவையை வீவக ரத்து செய்தது.
செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்ட சிங்ஜியன் இன்டர்நேஷனல் (தென்பசிபிக்) குழுமம், ஆகஸ்ட் மாதக் கடைசியிலிருந்து கட்டுமானப் பணியைப் படிப்படியாக மீண்டும் தொடங்கும் என வீவக புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
பொங்கோல் பாயின்ட் கோவ் குடியிருப்பின் ஆறு அடுக்குமாடிக் கட்டடங்களும் 2024 நான்காம் காலாண்டுக்கும் 2025 முதலாம் காலாண்டுக்கும் இடையில் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் குத்தகையாளரின் சேவை ரத்தானதால், ஆறில் ஐந்து கட்டடங்கள் நிறைவடையும் தேதி மூன்று மாதம் தாமதமடையும் என முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே கொவிட்-19 கிருமிப்பரவலால் ஆறு முதல் ஒன்பது தாமதம் ஏற்பட்டிருந்தது.
“வீடுகளின் நிறைவு தாமதமடைவதால் வீடு வாங்குவோருக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை வீவக அறிந்திருக்கிறது. வீடுகளை முடித்துக்கொடுக்க நாங்கள் பெருமுயற்சி எடுத்து வருகையில், அவர்களது புரிந்துணர்வையும் பொறுமையையும் நாடுகிறோம்,” என்று வீவக பேச்சாளர் கூறினார்.
பொங்கோல் பாயின்ட் கோவ் குடியிருப்பில் மொத்தம் 1,179 வீடுகள் கட்டப்படுகின்றன.
இந்தக் குடியிருப்பில் நாலறை வீடு வாங்கும் 29 வயது திரு இங், புதிய குத்தகையாளர் குறித்த தேதியில் கட்டுமானப் பணியை நிறைவு செய்வார் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“இதற்கு மேலும் தாமதம் ஏற்பட்டால், ஏதாவதொரு வகையில் இழப்பீட்டை எதிர்பார்ப்பேன்,” என்றார் அவர்.
“கொவிட்-19 எதிர்பாராமல் நிகழ்ந்தது. ஆனால், வீவக நம்பகமான குத்தகையாளரைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்”, என்றும் அவர் சொன்னார்.
ஐந்தறை வீடு வாங்கும் மற்றொருவர், 2020 முதல் ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒருமுறை கட்டுமானத் தளத்திற்குச் சென்று ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா எனப் பார்த்து வருகிறார்.
“உயரமான பாரந்தூக்கிகள் மட்டும்தான் எனக்குத் தெரிந்தன, கட்டடங்கள் தெரியவில்லை. நீண்டகாலமாகவே அப்படித்தான் இருக்கிறது,” என்றார் அவர்.
“அடுத்த ஆண்டு பொருள், சேவை வரி உயர்கிறது. வீட்டுக்கான பொருள்களுக்கு நான் இன்னும் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

