வெள்ளநீரை வெளியேற்றப் புதிய கருவி

வெள்ளநீரை வெளியேற்றப் புதிய கருவி

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2026 - 6:04 pm

2 mins read

https://www.straitstimes.com/singapore/environment/pub-trials-rover-to-pump-out-floodwater-in-inaccessible-spaces-ahead-of-year-end-rainy-season?ref=latest-headlines

நிலத்தடி வாகன நிறுத்துமிடங்கள் அல்லது கடைத்தொகுதிகளின் அடித்தளங்களில் ஏற்படும் வெள்ளநீரை வெளியேற்ற, புதிய நீர் உறிஞ்சும் கருவியைச் சிங்கப்பூர் அறிமுகப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர்த் தண்ணீர் முகவையான பொதுப் பயனீட்டுக் கழகம் தனது வருடாந்தர வெள்ளத்தடுப்பு இயக்கத்தின் தொடக்கமாக வியாழக்கிழமை (நவம்பர் 12) புதிய கருவியை அறிமுகம் செய்தது.

சிங்கப்பூரில் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை பெய்யும் மழையால் தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படலாம்.

பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே, நவம்பர் 10ஆம் தேதி வெஸ்ட் கோஸ்ட் ரோடு பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

வெள்ளம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் எனப் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் உயர் அதிகாரி ஏஞ்சலா கோ வலியுறுத்தினார்.

வாகனம் போல் வடிவமைக்கப்பட்ட புதிய கருவி கிட்டத்தட்ட 800 கிலோ எடை கொண்டது. வழக்கமான கருவிகளைப் பயன்படுத்த முடியாத குறுகிய இடங்களிலும் புதிய கருவியைப் பயன்படுத்தலாம்.

மணிக்கு 500 கன மீட்டர் வெள்ளநீரை வெளியேற்றும் திறன் கொண்ட இது, ஒலிம்பிக் நீச்சல் குளத்தை ஐந்து மணிநேரத்தில் காலி செய்துவிடும். ஒருவரால் 100 மீட்டர் தொலைவிலிருந்து அதனை இயக்க முடியும்.

மேலும், புதிய கருவி 70 சென்டிமீட்டர் வெள்ளநீரிலும் செயல்படும். சமமற்ற நிலப்பரப்பு, படிக்கட்டுகளிலும் அது இயங்கும். இந்த வாகனக் கருவி தொடர்ந்து ஏழு மணி நேரம் செயல்படக்கூடிய திறன் கொண்டது.

சிங்கப்பூரில் இந்தப் புதிய கருவி சோதனை முறையில் ஓராண்டுக்குப் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் மோசமான திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அதுபோன்ற இடங்களில் புதிய கருவியைப் பயன்படுத்த முடியும். அதேபோல் அதிக மழையுடன் உயர் அலை ஏற்படும் கடலோரப் பகுதிகளிலும் புதிய கருவியைப் பயன்படுத்தலாம்.

30 உணர்கருவிகள்

இதற்கிடையே, வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ள சாலைகளில் 30 புதிய உணர்கருவிகளைப் பொதுப் பயனீட்டுக் கழகம் நிறுவியுள்ளது. வெள்ளம் தேங்கும்போது அவை உடனடியாக எச்சரிக்கை அனுப்பும்.

புக்கிட் தீமா, தஞ்சோங் பகார் பகுதிகளில் அவை சோதிக்கப்பட்டன. விரைவு நடவடிக்கைக்கு உணர்கருவிகள் பெரிதும் உதவும். தற்போதைய 1,200 நீர்மட்ட உணர்கருவிகளுடன் அவை இணைகின்றன.

2028ஆம் ஆண்டுக்குள் மேலும் 500 நீர்மட்ட உணர்கருவிகள், 200 கண்காணிப்பு படக்கருவிகள் நிறுவப்படும்.

பொதுமக்கள் தங்கள் பயணங்களுக்கு முன்பு மைஇஎன்வி (myENV) செயலி, டெலிகிராம், கிராப், கூகல் மேப்ஸ், மின்னியல் சாலைக் கட்டண முறை (ERP) கருவிகள் வழி வெள்ள எச்சரிக்கைகளை அறிந்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்