நீரிழிவு நோய்த் தடுப்பு முயற்சிகள் குறித்துக் குழந்தைகளுக்கு உரிய கல்வியை வழங்குவதற்கு, புதிய ‘சுகர் ஸ்மார்ட் ஸ்கூல்ஸ்’ முன்னோடித் திட்டத்தை அதிபர் தர்மன் சண்முகரத்தினம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) அறிமுகப்படுத்தினார்.
‘பிசிஎஃப்’ அறநிறுவனத்தின்கீழ் ஜூரோங் ஸ்பிரிங், கெக் போ பாலர்பள்ளிகள், கார்ப்பரேஷன், ரூலாங் தொடக்கப் பள்ளிகள், வெஸ்ட்வுட் உயர்நிலைப் பள்ளி ஆகியவை இந்தப் புதிய திட்டத்தில் பங்கேற்கவுள்ளன.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது, அளவோடு உண்பது, வழக்கமான உடற்பயிற்சியின் முக்கியத்துவம், உடலின் ‘குளுக்கோஸ்’ சர்க்கரை அளவைப் பயன்படுத்த தசைகள் எவ்வாறு உதவுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது போன்ற நடவடிக்கைகள் இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர்பள்ளிக் குழந்தைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் தினமும் இனிப்புப் பானங்களை அருந்துகின்றனர் என்று ஆய்வு ஒன்று கண்டறிந்ததாக அதிபர் தர்மன் சுட்டிக்காட்டினார்.
“மூன்றில் ஒரு பங்குக் குழந்தைகள் தினமும் இனிப்புப் பானங்களை அருந்துவது பேராபத்தாகும். எப்போதாவது இனிப்பு சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அது ஒரு குழந்தையின் வழக்கமான உணவாகிவிடுவதை நாம் தவிர்க்க வேண்டும்,” என்று அதிபர் கூறினார்.
“முதற்கட்ட முயற்சிகள் மூலம் நாம் குறிப்பாகக் குழந்தைகளின் பழக்கவழக்கங்களை மாற்ற இன்னும் அதிகமாகச் செய்யவேண்டும்,” என்றார் அவர்.
நீரிழிவு நோயாளிகளின் பராமரிப்பு, நல்வாழ்வுக்கு ஆதரவளிக்கும் ‘டயபெட்ஸ் சிங்கப்பூர்’ அமைப்பின் புரவலராகக் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘கான்ராட் ஆர்ச்சர்ட்’ வளாகத்தில் நடைபெற்ற அமைப்பின் 55வது ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தில் அதிபர் தர்மன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்தப் புதிய திட்டம், ஜூரோங் ஸ்பிரிங்-கெக் போ தொகுதியில் உள்ள பள்ளிகளில் நடப்புக்கு வருவது குறித்துத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக்.
“நீரிழிவு நோயைத் தடுப்பது குறித்த புரிதல் மட்டுமல்லாமல், நீரிழிவு நோயுடன் வாழ்பவர்களுக்கான பரிவையும் நம் மாணவர்கள் வளர்ப்பார்கள் என்று நம்புகிறோம்,” என்றார் டாக்டர் ஹமீது.
சர்க்கரை உட்கொள்வதைக் குறைக்கவும் நீரிழிவு நோயைத் தடுக்கவும் தனிநபர்களுக்கும் பணியிடங்களுக்கும் அதிகாரம் அளிப்பதற்காகக் கடந்த நவம்பரில் தொடங்கப்பட்ட ‘சுகர் ஸ்மார்ட் நேஷன்’ என்ற தேசிய இயக்கத்தின்கீழ், ‘சுகர் ஸ்மார்ட் ஸ்கூல்ஸ்’ திட்டம் செயல்படுத்தப்படும்.
பணியிடங்களுக்கான ‘சுகர் ஸ்மார்ட் கம்பெனிஸ்’ திட்டம், ஏற்கெனவே உள்ள ஏழு நிறுவனங்களுடன் மேலும் எட்டு நிறுவனங்களையும் ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தில் அறிமுகப்படுத்தியது.
‘சுகர் ஸ்மார்ட் கம்பெனிஸ்’ முன்னோடித் திட்டம் 8,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைச் சென்றடைந்தது. நிகழ்ச்சியில், நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வையும் கவனத்தையும் மேலும் அதிகரிக்கும் நோக்கில், வகை-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைக் கொண்ட இசைக்குழு மேடையேறிப் பாட்டிசைத்தது.
‘டயபெட்ஸ் சிங்கப்பூர்’ அமைப்பின்கீழ் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் தாதியாகப் பணிபுரியும் ஸ்ட்ரேசி நாயுடு, தாம் பார்த்த ஆக இளைய நீரிழிவு நோயாளியின் வயது 28 என்று தமிழ் முரசிடம் குறிப்பிட்ட்டார்.
“நோய்க்கான காரணங்களைப் பலர் புரிந்துகொள்வதில்லை. அவர்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், சமூகத்தில் புரிதலை வளர்ப்பதும் நமது கடமையாகும்,” என்றார் அவர்.
