தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அறிவார்ந்த அம்சங்களுடன் புதிய ஓட்டுநர் பயிற்சி நிலையம்

2 mins read
c53ce93f-a8f5-497d-bf79-f061327a7349
புதிய ஓட்டுநர் பயிற்சி நிலையம் லோரோங் பிஸ்தாரியில் அமையவுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சுவா சூ காங் வட்டாரத்தில் புதிய ஓட்டுநர் பயிற்சி நிலையம் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது புக்கிட் பாத்தோக்கில் உள்ள ஓட்டுநர் பயிற்சி நிலையத்துக்குப் பதிலாக சுவா சூ காங் நிலையம் செயல்படும்.

பல தளங்களாக அமையவிருக்கும் புதிய ஓட்டுநர் பயிற்சி நிலையத்தில் ஆக்ககரமான முறையில் பயிற்சிகளை நடத்தவும் ஓட்டுநர் திறன்களை நன்கு சோதிக்கவும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் சேர்க்கப்படும்.

மேலும், புதிய பள்ளியில் கனரக வாகனங்களை ஓட்டத் தேவைப்படும் 4, 5 பிரிவு ஓட்டுநர் உரிமங்களைப் பெறுவதற்கான பயிற்சிகளும் வழங்கப்படும். தற்போது உட்லண்ட்சில் உள்ள ஓட்டுநர் பயிற்சி நிலையத்தில் பள்ளியில் மட்டும்தான் அந்த ஓட்டுநர் உரிமங்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அதிநவீன உணர்கருவிகள், உடனுக்குடன் கண்காணிக்க உதவும் முறைகள் போன்ற அதிநவீன அம்சங்கள் புதிய நிலையத்தில் இடம்பெறும்.

புக்கிட் பாத்தோக் ஓட்டுநர் பயிற்சி நிலையம் 2030ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் மூடப்படும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையமும் சிங்கப்பூர் காவல்துறையும் புதன்கிழமை (அக்டோபர் 8) தெரிவித்தன. புதிய குடியிருப்புக் கட்டடங்களைக் கட்டுவதற்காக புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 5ஐ மறுசீரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஓர் அங்கமாக புக்கிட் பாத்தோக் ஓட்டுநர் பயிற்சி நிலையம் மூடப்படவுள்ளது.

புதிய சுவா சூ காங் ஓட்டுநர் பயிற்சி நிலையம், கிராஞ்சி ராணுவ முகாம் மூன்றுக்கு அருகே உள்ள லோரோங் பிஸ்தாரி பகுதியில் அமையும். சிங்கப்பூர் காவல்துறையுடன் சேர்ந்து நகர மறுசீரமைப்பு ஆணையம் புதன்கிழமை லோரோங் பிஸ்தாரி பகுதிக்கு ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பிக்குமாறு அழைப்பு விடுத்தது. குத்தகைக் காலம் 30 ஆண்டுகளாகும்.

ஒப்பந்தப்புள்ளிகளை 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.

புதிய ஓட்டுநர் பயிற்சி நிலையம் அமையவிருக்கும் பகுதியின் பரப்பளவு சுமார் 24,890 சதுர மீட்டர். ஒட்டுமொத்தமாக கட்டடத்தின் எல்லா தளங்களின் பரப்பளவு உள்ளிட்ட இடங்களைக் கருத்தில்கொள்ளும்போது மொத்த பரப்பளவு 72,500 சதுர மீட்டரை எட்டக்கூடும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையமும் சிங்கப்பூர் காவல்துறையும் தெரிவித்தன.

சிங்கப்பூரில் ஓட்டுநர் பயிற்சி நிலையங்களுக்கு உரிமம் வழங்கி விதிமுறைகளைத் தீர்மானிப்பது போக்குவரத்துக் காவல்துறையின் பொறுப்பாகும்.

குறிப்புச் சொற்கள்