சிங்கப்பூரில் 1965ஆம் ஆண்டு முதல் இன, சமய பேதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் நிதியாதரவு வழங்கிவரும் ‘எல்பிகேஎம்’ எனப்படும் முகமது நபியின் பிறந்தநாள் நினைவு கல்வி உபகாரச் சம்பள நிதி, ஒரு புதிய அறக்கட்டளை நிதியைத் தொடங்கவிருக்கிறது.
தனது அறப்பணி நீடித்த நிலைத்தன்மை மிக்கதாய் விளங்குவதை உறுதிசெய்ய, பெருந்தொகையை நன்கொடையாக வழங்குவோரையும் நிறுவனப் புரவலர்களையும் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது ‘எல்பிகேஎம்’.
அறப்பணியின் 60ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்ச்சியில் ‘எல்பிகேஎம்’ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற நியமன உறுப்பினருமான சையது ஹருண் அல்ஹப்சி இதைத் தெரிவித்தார்.
புதிய அறக்கட்டளை நிதி மூலம் திரட்டப்படும் வருடாந்தரத் தொகை, இனி வரும் ஆண்டுகளில் மாணவர்களுக்குக் கல்வி உதவி நிதி, கல்வி உபகாரச் சம்பளம் ஆகியவற்றை வழங்கப் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
தொடக்கமாக, நன்கொடையாக வழங்கப்படும் ஒவ்வொரு 100,000 வெள்ளி அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கும் அதில் 50 விழுக்காட்டிற்கு ஈடான தொகையை ‘எல்பிகேஎம்’ அமைப்பு வழங்கும்.
அடுத்த சில வாரங்களில் இதுகுறித்த மேல்விவரங்கள் வெளியிடப்படும் என்றார் அவர்.
நன்கொடை வழங்குபவரின் பெயரிலேயே அவர் வழங்கும் தொகைக்கு ஈடான தொகையை ‘எல்பிகேஎம்’ வழங்கும் என்று அவர் கூறினார்.
இந்த அமைப்பு, 38,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கிட்டத்தட்ட 35 மில்லியன் வெள்ளியை மானியம், கல்வி உதவி நிதி, கல்வி உபகாரச் சம்பளமாக வழங்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பிரதமர் லாரன்ஸ் வோங், ஜனவரி 24ஆம் தேதி நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நல்ல நோக்கத்துக்காக இணைந்து பணியாற்றுவதன் மூலம் மலாய்-முஸ்லிம் சமூகம் செழிப்படைவதுடன் சவால்களை நம்பிக்கையுடன் கடந்துவருவதற்கு சிங்கப்பூருக்கும் உதவும் என்றார் அவர்.

