பாதுகாப்புச் செயல்பாடுகளுக்கான புதிய பயிற்சித் தளபத்தியம் அறிமுகம்

வேலை - கல்விப் பட்டய வகுப்பில் பயில்வோர்க்குப் புதிய பாதுகாப்புச் செயல்பாட்டுப் பயிற்சி தளபத்தியம்

பாதுகாப்புச் செயல்பாடுகளுக்கான புதிய பயிற்சித் தளபத்தியம் அறிமுகம்

3 mins read
71afd485-9290-4f95-9a72-662269dc6d2a
வாகனத்தில் மறைத்துவைப்பதற்குச் சாத்தியமுள்ள இடங்களைக் கண்டறியும் பயிற்சியில் ஈடுபடும் சிறப்பு விருந்தினர் உள்துறைக்கான மூத்த துணை அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம். தொழில்நுட்பக் கல்விக்கழகத் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் லாம் உடன் உள்ளார். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரின் பாதுகாப்புச் சூழல் வேகமாக மாறிவரும் நிலையில், பாதுகாப்புச் செயல்பாட்டுத் துறையில் வேலை - கல்விப் பட்டய வகுப்பில் பயில்வோர்க்காக, தேவைக்கேற்ப கட்டப்பட்ட, புதிய ஒருங்கிணைந்த பயிற்சி வசதியைத் தொழில்நுட்பக் கல்விக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

அந்தப் புதிய பாதுகாப்புச் செயல்பாட்டுப் பயிற்சி தளபத்தியம், தொழில்நுட்ப உதவியுடன் உண்மைக்கு நிகரான பாதுகாப்புச் செயல்பாடுகளில் பயிற்சி பெற வழிவகுக்கும்.

சூழ்நிலைக்கேற்ற விழிப்புணர்வு, முடிவெடுத்தல், செயல் திட்டங்களை நிறைவேற்றுதல், தகவல் தொடர்பு, செயல்பாட்டிற்குப் பிந்தைய ஆய்வு உள்ளிட்ட திறன்களை மேம்படுத்த அது உதவும்.

மொத்தம் 353 சதுர மீட்டர் பரப்பளவில் அமையும் அந்த வசதி, பாதுகாப்புச் செயல்பாட்டுத் துறையில் தொழில்நுட்பக் கல்விக்கழக வேலை - கல்விப் பட்டய வகுப்பில் பயிற்சி மேற்கொள்ளும் 300 பேருக்குப் பயிற்சியளிக்க உதவும்.

பாதுகாப்புச் செயல்பாட்டுத் துறையின் உண்மைச் சூழல்களையும் பணிகளைப் பிரதிபலிக்கும் ஐந்து மண்டலங்களையும் உள்ளடக்கிய அந்த வசதி, புதன்கிழமை (ஏப்ரல் 29) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

குடிநுழைவுச் சோதனை தொடர்பான பயிற்சிகளைப் பெற உதவும் இருவழித்தொடர்புக் கண்காட்சிகள்.
குடிநுழைவுச் சோதனை தொடர்பான பயிற்சிகளைப் பெற உதவும் இருவழித்தொடர்புக் கண்காட்சிகள். - படம்: சாவ்பாவ்

தொழில்நுட்பக் கல்விக்கழக வளாகத்தில் நடைபெற்ற திறப்பு விழாவில், உள்துறைக்கான மூத்த துணை அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பாதுகாப்புச் சூழல் மிகவும் சவால்மிக்கதாக மாறி வருவதைச் சுட்டிய திரு ஃபை‌‌‌ஷால், பாதுகாப்புத் தேவைகள் அதிகரித்து வருகின்றன என்றும் பழமையான, மனிதவளப் பயன்பாடுகளை அதிகம் சார்ந்துள்ள அணுகுமுறைகளை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்றும் கூறினார்.

அங் மோ கியோ வட்டாரத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்விக்கழக வளாகத்தில் அமைந்திருக்கும் புதிய தளபத்தியத்திற்கான தொடக்கவிழா.
அங் மோ கியோ வட்டாரத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்விக்கழக வளாகத்தில் அமைந்திருக்கும் புதிய தளபத்தியத்திற்கான தொடக்கவிழா. - படம்: சாவ்பாவ்

“திறன் வாய்ந்த, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் பாதுகாப்புப் படையை உறுதிசெய்ய வேண்டும். கல்விக்கழகத்தின் பயிற்சி பெரும்பாலும் வகுப்பறைகளில் நடத்தப்படும்போது, உண்மையான செயல்பாட்டுச் சூழல்களை உருவகப்படுத்தும் திறன் குறைவாக இருக்கும். தற்போதுள்ள வசதிகள் மூலம், வகுப்பறைக் கற்றலுக்கும் உண்மைச் சூழலுக்குமான இடைவெளி குறைகிறது,” என்றார் அவர்.

“இப்புதிய வசதிகளின் மூலம் மேம்படக்கூடிய திறன்கள் விமானப் போக்குவரத்து, தளவாடங்கள், விருந்தோம்பல், சுற்றுலாத் தலங்கள், நிறுவன அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் பொருந்தும்,” என்றார் தொழில்நுட்பக் கல்விக்கழகத் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் லாம்.

புதிய மண்டலங்கள்

வாகனச் சோதனைப் பயிற்சியில் ஈடுபடும் சிறப்பு விருந்தினர் இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம். தொழில்நுட்பக் கல்விக்கழகத் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் லாம் உடன் உள்ளார்.
வாகனச் சோதனைப் பயிற்சியில் ஈடுபடும் சிறப்பு விருந்தினர் இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம். தொழில்நுட்பக் கல்விக்கழகத் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் லாம் உடன் உள்ளார். - படம்: சாவ்பாவ்

தயார்நிலை, தொழில்முறைத் திறன், சூழ்நிலைக்கேற்ப மாறும் தன்மை ஆகியவற்றை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் வகையில் பல மண்டலங்கள் அதில் அடங்கியுள்ளன.

குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணைய மண்டலம்

தொழில்நுட்பக் கல்விக்கழகமும் குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையமும் இணைந்து முதன்முறையாக இவ்வாறான 360 கோண இருவழித் தொடர்புப் பயிற்சியை உருவாக்கியுள்ளன.

தானியக்க நுழைவாயில்களில், ஊடுகதிர் சோதனை இயந்திரம், வாகனச் சோதனைப் பகுதி, தடைசெய்யப்பட்ட பொருள்களின் காட்சியகங்கள் ஆகியவற்றை இப்பயிற்சி உள்ளடக்கியிருக்கும்.

தளபத்திய நிலையம்

பயிற்சியாளர்களைப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டாளர்களாக உருவகப்படுத்தி, எச்சரிக்கை ஒலிக் கண்காணிப்பு, நிகழ்நேரத் தகவல் அட்டவணை, ‘ஜிபிஎஸ்’ கண்காணிப்பு உள்ளிட்ட பல அம்சங்களை இந்நிலையம் உள்ளடக்கும்.

இதன்மூலம், முடிவெடுக்கும் திறன், நுண்ணறிவு சார்ந்த தடுப்புப் பாதுகாப்பு உத்திகள் எனப் பலவற்றைக் கற்க முடியும்.

அத்துடன், ஒருங்கிணைந்த மெய்நிகர் நிலை (Mixed Reality), செயற்கை நுண்ணறிவு, தயார்நிலை, நேர்காணல் ஆகிய மண்டலங்களையும் இது உள்ளடக்கும்.

தனது நேர்காணல், விசாரணைத் திறன்களை மெருகேற்றிக்கொள்ள நேர்காணல் அறையைப் பயன்படுத்தும் வேலை - கல்விப் பட்டய மூன்றாமாண்டு மாணவர் முகமது டேனிஷ், “இது பயனுள்ளதாக உள்ளது. எனது சக வகுப்புத் தோழர்களும் கண்ணாடித் தடுப்பின்வழி எனது பயிற்சிகளைக் கவனித்து அவர்களின் கருத்துகளையும் வழங்கினார்கள்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்