சிங்கப்பூர் பொது மருத்துவமனை மற்றும் தேசிய நரம்பியல் கழகம் ஒருங்கிணைந்த புதிய கட்டடம் அக்டோபர் 30ஆம் தேதி திறக்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அதை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
புதிய 12 மாடிக் கட்டடத்தால், பக்கவாத நோயாளிகளுக்கான மருத்துவப் பரிசோதனை, சிகிச்சை ஆகியவற்றின் நேரம் 130 நிமிடங்களிலிருந்து 82 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
14,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட அந்தக் கட்டடத்தில் அவசரப் பரிசோதனை, தீவிர மருத்துவச் சிகிச்சை, மேம்பட்ட நரம்பியல் சிகிச்சை ஆகியவை ஒரே கூரையின் கீழ் வழங்கப்படுகின்றன.
இதனால் நோயாளிகளைப் பிற கட்டடங்களுக்கு மாற்றுவதால் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படுகிறது.
சிங்கப்பூரிலேயே முதல் முறையாக அவசரப் பிரிவைச் சேர்ந்த இரத்தக்குழாய் பரிசோதனைக் கூடம் அங்கு அமைந்துள்ளது.
இதன்மூலம் உடல் உறுப்புகளில் ஏற்படும் இரத்தக்குழாய் அடைப்புகளை அகற்றும் உயிர் காக்கும் சிகிச்சையை நோயாளிகளுக்கு உடனடியாக வழங்க முடிகிறது.
பழைய ‘புளோக் 1’ சிகிச்சை நிலையத்தில் நான்கு நோயாளிகளைத் தரம் பிரிக்கும் அறைகள் இருந்தன. புதிய அவசரப் பிரிவில் 10 அறைகள் உள்ளன.
மேலும், இரண்டு தளங்களில் 53 தீவிரச் சிகிச்சைப் பிரிவுகள், 12 உயிர்காக்கும் அறைகள், 150க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்ட வார்டுகள் போன்ற வசதிகளும் உள்ளன.
சராசரியாகத் தினமும் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் அங்கு வருகின்றனர். அவர்களில் 15 விழுக்காட்டினருக்கு உடனடிக் கவனம் தேவைப்படுகிறது. உயிருக்கு ஆபத்தில்லாத அவசர நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் பேரளவு குறைந்துள்ளது என்று அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.
மேலும், மூளைத் தேய்வு நோய், ஒற்றைத் தலைவலி ஆகியவற்றுக்குச் சிகிச்சை அளிக்கப் புதிய மருத்துவ வசதியும் அங்குள்ளது. இதனால் நோயாளிகள் மருத்துவமனையில் இரவு தங்க வேண்டியதில்லை.
