லாப நோக்கமற்ற அமைப்பான லியென் அறநிறுவனமும் சிங்கப்பூர் தேசிய இதய நிலையமும் இணைந்து ‘ஹார்ட்லேண்டர்ஸ்’ எனும் திட்டத்தை திங்கட்கிழமை (ஜனவரி 20) அறிமுகப்படுத்தியுள்ளன.
லியென் அறநிறுவனத்தின் $6.5 மில்லியன் மதிப்பிலான நிதியுதவியால் ஆதரிக்கப்படும் இந்த முயற்சி, இதய சிகிச்சையுடன் நோய்த் தடுப்பு முறையை இணைக்கிறது.
இதனால், தேவையுடைய அனைத்து நோயாளிகளுக்கு போதுமான, தரமான நோய்த் தடுப்பு முறையை இதய நோய் மற்றும் பிற சுகாதார நிபுணர்களால் வழங்க இயலும்.
மருத்துவமனை சிகிச்சைக்கு அப்பால், சமூகத்தில் இதயச் செயலிழப்பு நோயாளிகளுக்கு ஆதரவளித்து அவர்களுக்குச் சிறந்த சூழலை ஏற்படுத்தித் தருவதற்கு ‘சிங்ஹெல்த்’ சுகாதார அலுவலகம் உட்பட முதன்மைப் பராமரிப்பு மற்றும் சமூகப் பங்காளிகளுடன் சிங்கப்பூர் தேசிய இதய நிலையம் ஒத்துழைக்கிறது.
‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ திட்டத்தின் தொடர்பில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்த முயற்சி தொடங்கியுள்ளதாக சிங்கப்பூர் தேசிய இதய நிலையத் துணைப் பேராசிரியர் டேவிட் சிம் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 4 முதல் 5 விழுக்காட்டு சிங்கப்பூரர்கள் இதயச் செயலிழப்புடன் வாழ்கின்றனர். இதயச் செயலிழப்பின் முந்தைய நிலைகள் குறைவான அறிகுறிகளைக் கொண்டிருக்கக்கூடும் என்பதால் நோயாளிகளின் இதயச் செயல்பாடு மிகவும் கடுமையான நிலையை எட்டிய பிறகே அது பெரும்பாலும் கண்டறியப்படுகிறது.
இப்புதிய முயற்சியின்கீழ் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு பிரத்தியேக இதய நோய்த் தடுப்பு ஒருங்கிணைப்பாளர் பணியமர்த்தப்படுவார். ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தை புரிந்துகொண்டு இதயச் செயலிழப்பு அறிகுறிகளைச் சுயமாக நிர்வகிக்க ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சி அளிப்பார்கள்.
“நோய்த் தடுப்பு முறை முன்னதாகவே தொடங்குவதால், நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே பயனடைய வாய்ப்புகள் அதிகம்,” என்று தேசிய புற்றுநோய் நிலையத்தின் மூத்த மருத்துவ ஆலோசகர் ஷர்லின் நியோ தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதுமட்டுமின்றி, இதய நோயின் ஒவ்வொரு கட்டத்திலும் நோயாளிகள் நன்கு ஆதரிக்கப்படுவதை உறுதி செய்வது முக்கியம் என்று லியென் அறநிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி லீ போ வா கூறினார்.
“இதயச் செயலிழப்பு நோயாளிகளுக்கு எல்லா நிலைகளிலும் கவனிப்பு அவசியம். இந்த முயற்சி அதை ஊக்குவிக்கிறது,” என்று நம்பிக்கை தெரிவித்தார் திரு லீ.
அடுத்த ஐந்தாண்டுகளில் 9,000க்கும் மேற்பட்ட இதயச் செயலிழப்பு நோயாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

