இந்தியத் தூதரகச் சேவை விண்ணப்பங்களுக்கான இரு புதிய நிலையங்கள் (Indian Consular Application Centres) அக்டோபர் 1ஆம் தேதி முதல் செயல்படும் எனச் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அப்புதிய விண்ணப்ப நிலையங்கள் #11-03, தி பென்கூலன் ஆஃபீஸ் டவர், 180பி, பென்கூலன் ஸ்திரீட், சிங்கப்பூர் 189648 மற்றும் #06-05, ஐஓபி கட்டடம், 64 செசில் ஸ்திரீட், சிங்கப்பூர் 049711 என்ற முகவரிகளில் செயல்படும்.
கடப்பிதழ், விசா, வாகன ஓட்டுநர் உரிமம், பிறப்புச் சான்றிதழ், திருமணப் பதிவு, சட்டபூர்வ அதிகாரப் பத்திரம் உள்ளிட்ட தூதரகச் சேவைகளை இந்நிலையங்களில் பெறலாம்.
இந்நிலையங்களை ‘அலங்கிட் அசைன்மன்ட்ஸ் லிமிடெட்’ நிறுவனம் ஏற்று நடத்தும்.
அந்நிறுவனம் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகத்துடன் முதன்முறையாக இணைந்து தூதரகச் சேவைகளை வழங்கவிருக்கிறது.
கடந்த 2016 மே 30ஆம் தேதிமுதல் பிஎல்எஸ் அனைத்துலக நிறுவனம் அச்சேவைகளை வழங்கிவந்துள்ளது. அதற்குமுன் ‘விஎஃப்எஸ் குளோபல்’ அச்சேவைகளை வழங்கியது.
‘பிஎல்எஸ்’ நிறுவனம் செப்டம்பர் 30 ஆம் தேதிவரை சேவைகளை வழங்கும் எனச் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம் கூறியுள்ளது.
தூதரகச் சேவைக வழங்குவதற்கான ஏலக்குத்தகையைத் திறந்ததன் நிறைவில் புதிய நிறுவனத்துக்கு இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேல்விவரங்களுக்கு ‘அலங்கிட் அசைன்மன்ட்ஸ்’, ‘பிஎல்எஸ்’ நிறுவனங்களைத் தமிழ் முரசு தொடர்புகொண்டுள்ளது. வரும் நாள்களில் கூடுதல் தகவல்களை வெளியிடவுள்ளதாகப் ‘பிஎல்எஸ்’ அதிகாரி கூறினார்.
அக்டோபர் 1க்குப் பிறகு புதிய நிலையங்களில் தூதரகச் சேவைகளைப் பெறுவதற்கான முன்பதிவுகளை https://singapore.alankitglobal.com/ இணையத்தளம் வழியாக மேற்கொள்ளலாம்.

